

நிழலுலகம், அதை ஆட்சி செய்யும் தாதாக்கள், அவர்களது அரசியல் தொடர்பு, தாதாக்களின் வலது கையாகச் செயல்படுகிறவர், அவர்களது கூலிப்படை குறித்தெல்லாம் ‘பில்ட் அப்’ செய்வதில் தற்கால இந்திய வணிக சினிமா களைப்படைவதே இல்லை.
ஓடிடியும் இதே போன்ற கதைக் களங்களில் ஆர்வம் காட்டினாலும் சொல்லப்படாத தாதா கதைகளைச் சொல்ல முயன்று வருகிறது. அந்த வரிசையில் ஷார்ட்ஃபிலிக்ஸ் (ShortFlix) ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஷூட் தி குருவி’ தாதாக்களின் வலிமை குறித்த கேள்வியை எள்ளலும் விறுவிறுப்பும் கலந்து எழுப்புகிறது.
காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, தனியொரு ஆளாக தனது நிழலுலக சாம்ராஜ்ஜியத்தை நடத்திக்கொண்டிருக்கிறான் குருவி ராஜன். தனது குற்றங்கள் பற்றிய சின்னத் தடயம்கூட இல்லாமல் பார்த்துக்கொள்ளும் குருவி ராஜனைக் கொல்ல, அவனால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதியும் காவல்துறையும் இணைந்து பொறி வைக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற முயற்சிகளில் இழப்பு காவல்துறைக்கும் ஏவியவர்களுக்குமே ஏற்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் இரண்டு தொடை நடுங்கி அப்பாவி இளைஞர்களால் குருவி ராஜன் கொல்லப்படுகிறான். அது எப்படிச் சாத்தியமானது என்பதை விலா நோகும் அவல நகைச்சுவையுடன் த்ரில்லர் உணர்வு விலகாத வண்ணம் விவரித்திருக்கிறார் இயக்குநர்.
ஒரு மணி நேரம் ஐந்து நிமிடம் ஓடும் இந்த சின்னத் திரைப்படத்தின் திரைக்கதையை வெகு சுவாரஸ்யமாக எழுதி, இயக்கியிருப்பவர் மதிவாணன். கதைப்படி 2020இல் வாழ்ந்த குருவி ராஜனைக் குறித்து, ஆய்வு செய்து புத்தகம் எழுதிய பேராசிரியரைத் தேடிப் பிடித்து, அவரிடம் 2032இல் பேட்டி எடுக்கிறார்கள் குற்றவுலகம் குறித்துப் பயிலும் ஒரு மாணவனும் மாணவியும். அவர்களது கேள்விகளுக்கு எழுத்தாளர் கூறும் பதிலாக விரியும் படத்தில் வந்துபோகும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கின்றன.
புத்த குரு, பேராசிரியர், அரசியல்வாதி என துணைக் கதாபாத்திரங்கள் அனைத்தும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கின்றன. குருவி ராஜனாக நடித்துள்ள அர்ஜே, ஈரோட்டிலிருந்து வரும் அப்பாவி இளைஞன் ஷெரீப் ஆக நடித்துள்ள விஜே ஆசீக், அவரது நண்பன் கோவிந்தாக நடித்துள்ள சிவ ஷாரா ஆகியோரின் பங்களிப்பு பெரும் நகைச்சுவைக் கொண்டாட்டமாக இப்படத்தை மாற்றியிருக்கின்றன. வன்முறையின் அளவையும், கெட்ட வார்த்தைகளையும் குறைத்திருந்தால் இன்னும் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் படமாக மாறியிருக்கும்.