2049-ல் உலகம்!

2049-ல் உலகம்!
Updated on
1 min read

1982-ல் வெளியான ‘பிளேடு ரன்னர்’ படத்தின் அடுத்த பாகம் 35 வருடங்கள் கழித்து அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. ‘பிளேடு ரன்னர் 2049’ என்ற இப்படம் இவ்வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய முக்கியமான ஹாலிவுட் படங்களில் ஒன்று.

1968-ல் வெளியான ‘டு ஆண்ட்ராய்ட்ஸ் ட்ரீம் ஆஃப் எலெக்ட்ரிக் ஷீப்? (Do Androids Dream of Electric Sheep?) என்ற நாவலைத் தழுவி முந்தைய பிளேடு ரன்னர் படம் உருவானது. அசப்பில் மனித உருவமும் செயற்கை அறிவுமாக உலவும் ரோபாட்களை கண்டறிந்து அழிக்கும் போலீஸ் படையில் இருப்பவர்களுக்கு பிளேடு ரன்னர்கள் என்று பெயர். படத்தில் வெற்றிகரமான பிளேடு ரன்னராக ஹாரிசன் ஃபோர்டு அதகளம் செய்திருப்பார். வெற்றிகரமான இதன் தொடர்ச்சியை படமாக்கும் முயற்சிகள், கடந்த 20 ஆண்டுகளில் பலமுறை தொடங்கிக் கைவிடப்பட்டன. கடைசியில் பிளேடு ரன்னரின் இயக்குநர் ரிட்லி ஸ்காட் தயாரிப்பில் ’பிளேடு ரன்னர் 2049’ முடிவானது. ‘ப்ரிசனர்ஸ்’ (Prisoners), `அரைவல்’ (Arrival) படங்களின் இயக்குநரான டெனிஸ் வில்னோவ் இப்படத்தை இயக்கி உள்ளார்.

2049-ம் ஆண்டில் கதை நடக்கிறது. இளம் ‘பிளேடு ரன்னர்’ ரியன் காஸ்லிங், ரோபாட் வேட்டையில் மும்முரமாக இருக்கிறார். அப்போது தன்னிடம் சிக்கும் மர்ம முடிச்சுகள் பலவற்றை அவிழ்க்க முயற்சிக்கிறார். அதில் 30 ஆண்டுகளாக மறைந்திருந்த பழைய பிளேடு ரன்னரான ஹாரிசன் ஃபோர்டு வெளிப்படுகிறார். அவரின் பின்னணியில் முந்தைய படத்தின் தொடர்ச்சியாய் பல ரகசியங்கள் வெளிப்படுகின்றன. பிளேடு ரன்னர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தனரா, செயற்கை அறிவில் மிஞ்சும் ரோபாட்டுகளிடமிருந்து மனித குலம் காப்பாற்றப்பட்டதா என்பதே மீதிக் கதை.

நவீன ரோபாட்டுகளை உற்பத்தி செய்யும் பார்வையற்ற வில்லன் கதாபாத்திரத்தில் ‘ஜாரெட் லெடோ’ நடித்திருக்கிறார். ஹாலிவுட்டின் மெதட் ஆக்டிங் பிரபலங்களில் ஒருவரான இவர், படப்பிடிப்பு முடியும்வரை சிறப்பு காண்டாக்ட் லென்ஸ் பொருத்திக்கொண்டு தற்காலிக பார்வை இழப்புடன் வலம் வந்தாராம். ஹாலிவுட் சீயான்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in