

வெற்றியை நோக்கிய பயணத்தில் வெற்றி நம் பக்கம் எப்போது வந்து சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?
முடியாது.
எத்தனையோ தடைகள், தோல்விகள் படிக்கட்டுக்களாக நம் கண்ணுக்குத் தெரியாமல் காத்துக்கொண்டு இருக்கும். .
ஆகவே முயற்சியை தொடங்கி இத்தனை நாட்களுக்குள் வெற்றி கிடைக்கும் என்று நம்மால் உறுதியாக காலக்கெடு நிர்ணயிக்க முடியாது.
கூடவே இருந்து யாராவது நம்மை ஏற்றி விடுவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது.
பாதைகள் வேறு வேறு. பயணங்களும் வேறு வேறு. இதில் அவரவர் தேர்ந்தெடுக்கும் பாதைக்கேற்றபடி அவரவர் மனங்கள் இயங்க ஆரம்பிக்கும்.
மனம் எப்போதும் ஒரே மாதிரி இயங்குவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப அது தளர்வதும் உண்டு. தயங்குவதும் உண்டு.
கூடவே துணையாக இருப்பார்கள் என்று நினைக்கும் நபர்களே நம்மை விட்டு விலகிவிட்டால் ஒரேயடியாக தளர்ந்து ஒடுங்கியும் போய்விடும்.
அந்த நேரத்தில் அதற்கு தெம்பையும் தைரியத்தையும் கொடுக்க யாரும் வரமாட்டார்கள். நாமாகவே துணிவை வரவழைத்துக்கொண்டு நமது குறிக்கோளை அழுத்தமாக பற்றிக்கொண்டு வெற்றிக்கான பாதையில் நமது பயணத்தைத் தொடர்ந்தே ஆகவேண்டும்.
அப்படித் தொடர்ந்தால் அந்த வெற்றி இருபதிலும் கிடைக்கலாம்: எழுபதிலும் கிடைக்கலாம்.
அப்படி வெற்றியை நோக்கி தள்ளாத வயதிலும் வீறு நடை போடும் ஒரு கிழச் சிங்கத்தின் வீர கர்ஜனை தான் இந்த வாரம் திரை இசைக்கடலில் நாம் கண்டெடுத்த நல்முத்து.
1968 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த திரைப்படம் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தந்தை – மகனாக இரு வேடங்களில் அசத்திய 'எங்க ஊர் ராஜா’. பி. மாதவன் தயாரித்து இயக்கிய இந்தப் படம் முழுவதையும் சாம்சன் போல ஒற்றை ஆளாகத் தாங்கி இருந்தார் நடிகர் திலகம்.
கதைப்படி ஜமீன்தார் விஜய ரகுநாத சேதுபதி வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து தனது அரண்மனையையும் ஊரையும் விட்டு மிகப்பெரிய அவமானத்துடன் வெளியேற நேர்கிறது. இழந்த கௌரவத்தை மீண்டும் அடைவேன் என்ற வைராக்கியத்துடன் ஊரை விட்டு தனது இரு சிறு மகன்களுடனும் கைக்குழந்தையான மகளுடனும் சென்னைக்கு வந்தவர் அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையை தொடங்குகிறார்.
காலம் சுழல்கிறது இப்போது வாலிபத்தின் வனப்பில் அவரது மக்கள். வயோதிகத்தின் வாசலின் சேதுபதி.
தனக்கு துணையாக இருப்பார்கள் என்று நினைத்த இரு மகன்களும் ஒரு கட்டத்தில் அவரை விட்டு விலகிப் போகும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.
இந்தச் சூழலில் தன்னந்தனியாக தனது குறிக்கோளில் வெற்றி அடைந்து அவர் காட்ட வேண்டும். இதுதான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சிக்காக மெல்லிசை மன்னர் போட்டுக்கொடுத்த மெட்டுக்கு ஏற்றபடி கவியரசர் மிக மிக எளிமையான வார்த்தைகளில் பாடலை எழுதிக்கொடுத்து விட்டார் கிழவரின் தவிப்பையும், மன உறுதியையும் ஒரே சமயத்தில் வெளிப்படுத்தும் வகையில் மெட்டும் வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று இணைவாக வெகு கச்சிதமாக அமைந்திருந்தன.
பாடுவதற்கு வந்த டி.எம்.சௌந்தரராஜன் பல்லவியை வாங்கிப் படித்துப் பார்த்ததும், ‘‘என்ன இது. இது சிவாஜியின் கதா பாத்திரத்திற்காக எழுதப்பட்ட பாடலா இல்லை இந்த சௌந்தரராஜனுக்காக எழுதப்பட்ட பாடலா’ என்று அதிசயித்துப் போனார் அவர்.
அதற்கு காரணம் இருந்தது.
எம்.ஜி.ஆருக்கும், டி.எம்.சௌந்தரராஜனுக்கும் இடையில் ஒரு மனவருத்தம் ஏற்பட்டு இருந்த காலகட்டம் அது. ‘அடிமைப்பெண்’ படத்தின் “ஆயிரம் நிலவே வா’ பாடல் பதிவு நேரத்தில் தனது இரண்டு மகள்களின் திருமணங்களை நடத்த டி.எம்.எஸ். மதுரை செல்லவேண்டியதாக இருந்தது. அந்த நேரத்தில் பாடிக் கொடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். வற்புறத்த அதனை ஏற்க மறுத்து சௌந்தரராஜன் மதுரைக்கு சென்று விட புதிய பாடகராக எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை அறிமுகப் டுத்தி அவரைப் பாடவைத்தார் எம்.ஜி.ஆர்.
அதற்கு பிறகு நடந்த சில பல சம்பவங்கள் ஒன்றுக்கு பத்தாக எம்.ஜி.ஆரிடம் போட்டுக் கொடுக்கப்பட டி.எம். சௌந்தரராஜன் மீது எம்.ஜி.ஆருக்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்த காலகட்டம் அது.
அந்த நேரத்தில் சௌந்தரரஜனிடமே, ‘உங்களுக்கும் எம். ஜி. ஆருக்கும் ஏதோ மனஸ்தாபமாமே. இனிமே அவர் படத்துலே உங்களைப் பாடவைக்கப் போவதில்லையாமே’ என்று வதந்தியாக வந்த செய்திகள் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டன.
‘அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே’ என்று சமாதானம் சொல்லிச் சொல்லி டி.எம்.எஸ். அவர்களுக்கே அலுத்துப்போய் விட்டிருந்தது.
அந்த நேரத்தில் தான் ஏ.வி.எம். ஒலிப்பதிவுக் கூடத்திற்கு நடிகர் திலகத்திற்காக பாட வந்த டி.எம்.எஸ். அவர்களுக்கு பாடலின் பல்லவியைப் பார்த்ததுமே தன்னைப்பற்றி வந்து கொண்டிருந்த வதந்திகள், பத்திரிகைகளில் தன்னைத் தாக்கி எழுதப்பட்டுக்கொண்டிருந்த கேள்வி பதில்கள் எல்லாம் நினைவில் அலைமோத தனது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த பல்லவியாக கவியரசரின் வார்த்தைகள் அவருக்குப் பட்டது.
‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க’
சாதாரணமாகவே சிவாஜிக்கு பாடும் போது அடிவயிற்றில் இருந்து குரலை எழுப்பிப் பாடுபவர் இப்போது தனது எண்ணங்களைப் பிரகடனம் செய்யும் பாடல் வரிகளாக இருக்கவே இன்னும் அதிக பாவத்துடன் உணர்ச்சி பூர்வமாக பாடலைப் பாடிக்கொடுத்தார் டி.எம்.சௌந்தரராஜன்.
இனி பாடலின் இசை நயங்களை சற்று அனுபவிப்போமா:
எடுத்த எடுப்பிலேயே தன்னம்பிக்கையையும் மனோ தைரியத்தையும் பிரகடனம் செய்யும் வார்த்தைகள்.
பாடலுக்கு முன்னதாக வரும் முகப்பிசையிலேயே புயலின் சீற்றத்தை நம் கண் முன் இசையால் கொண்டு வந்து நிறுத்துகிறார் மெல்லிசை மன்னர்.
கீழே விழுந்தாலும் வயதானாலும் சிங்கம் சிங்கம் தானே. பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு அது எழுந்து நிற்கும் கம்பீரத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நம் நடிகர் திலகம்.
இரண்டு தொடைகளிலும் இரு தட்டு , தோள்களிலும் இரு தட்டுக்கள், இரு மார்புகளையும் உரமேற்ற இரு கைகளாலும் மாறி மாறி இரு தட்டு, புஜங்களை தட்டும் தட்டு, இறுதியில் இரண்டு கைகளையும் இணைத்து கைதட்டல் ஒலி (claps) என்று படிப்படியாக பெரியவரின் கம்பீரத்திற்கு உரமேற்றும் முகப்பிசை இசை– கைதட்டலைக் கூட காட்சிக்கு உரமேற்றும் ஒரு பின்னணி இசைக்கருவியாகப் பயன்படுத்த மெல்லிசை மன்னர் ஒருவரால் மட்டுமே முடியும். தொடரும் சூறைக்காற்று ஓசையை குழலிசை அற்புதமாக வெளிப்படுத்த அனைத்தும் முடிந்த பிறகு உதடு குவித்து ஒரு “உஷ்ஷ்” என்ற சப்தத்தோடு பல்லவி டி.எம்.எஸ்.அவர்களின் உணர்வு பூர்வமான குரலில் தொடங்குகிறது.
மனிதன் பிறக்கும் போதே ‘பின்னால் எனக்கு ஒரு மகன் பிறப்பான், எனது சோதனைக்காலத்தில் கை கொடுப்பான் என்றெல்லாம் நம்பிக்கொண்டா பிறக்கிறான்.
யாரும் துணையாக இல்லாமல் தனியாகத்தானே நான் பிறந்தேன். அப்படி இருக்க எனது சோதனையை நான் வெற்றி கொள்ள மட்டும் எனக்கு உங்கள் துணை எதற்கு.. உங்கள் யார் துணையும் இல்லாமல் என்னால் வெற்றியடைய முடியும். ஏனென்றால் இது முழுக்க முழுக்க என்னுடைய வாழ்க்கை.’ என்று தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் அதே நேரத்தில் அலட்சியத்துடனும்,’போங்கடா போங்க’ என்று கம்பீரமாக எழுந்து நிற்கும் ஒரு காட்சிக்கான இசை, இசைக்கும் குரல் , குரலுக்கேற்ற முக பாவத்தை காட்டும் பிறவி மகாக் கலைஞன் என்று மூவரும் ஒருசேர சங்கமிக்கும் பாடல் அல்லவா இது.
தொடரும் முதல் சரணம் வாழ்க்கையின் யதார்த்தத்தை எளிமையான கவியரசரின் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.
‘குளத்திலே தண்ணி இல்லே
கொக்கும் இல்லே மீனும் இல்லே. (அதுபோல)
பெட்டியிலே பணமில்லே (அதனால்)
பெத்த பிள்ளே சொந்தமில்லே’
எடுத்துக்காட்டு உவமை அணி நயத்துடன் வார்த்தைகளை அமைத்திருக்கிறார் கவியரசர்.
எடுத்துக்காட்டு உவமை என்றால்..? உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் (அதுபோல என்ற) உவம உருபு வெளிப்படையாக பாடலில் தெரியாமல் மறந்திருக்கும் அணி நயம் தான் எடுத்துக்காட்டு உவமை அணி.
அடுத்த சரணத்தில்
‘தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா
பிள்ளையின் மனமோ கல்லம்மா’
- என்று வாழ்க்கையின் அன்றாட யதார்த்தத்தைப் பிட்டு வைக்கும்
‘பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா (ஆனால்)
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே. – என்று இந்தச் சரணத்தை முடிக்கிறார்.
பல்லவிக்கு பிறகு வரும் முதல் சரணத்தை நான்கு வரிகளில் அமைத்த மெல்லிசை மன்னர் தொடரும் இரண்டு சரணங்களை இரட்டிப்பாக்கி எட்டு வரிகளில் அமைத்திருக்கிறார்.
இரண்டாவது சரணத்தில் தனது தற்போதையை நிலையை எண்ணி மனம் புழுங்கிய வயோதிகச் சிங்கம் அடுத்த சரணத்தில் கம்பீரமாக தன்னம்பிக்கையின் சிகரமாகக் கர்ஜிக்கிறது.
இதோ அந்த வரிகள்:
‘நெஞ்சமிருக்கு துணிவாக
நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ’
- என்று நிமிர்ந்து நின்ற பெரியவர் எதுவும் உடனே நடந்துவிடாது அது அதற்கென்று நேரமும் காலமும் வந்துவிட்டால் இழந்தவை எல்லாம் மறுபடி நம்மிடம் வந்து சேர்ந்துவிடும் என்பதை எளிய உண்மையை உவமைப் படுத்தி பாடலை முடிக்கிறார்.
‘ஆடியிலே காத்தடிச்சா
ஐப்பசியில் மழை வரும் (அதுபோல)
தேடி வரும் காலம் வந்தா
செல்வமெல்லாம் ஓடி வரும்’
சாதிக்க வயதோ இளமையோ ஒரு விஷயமே இல்லை. எந்த வயதிலும் கொண்ட குறிக்கோளில் உறுதியும், தன்னம்பிக்கையும், இருந்தால் சிங்கம் போல கம்பீரமாக எழுந்து வெற்றி வானத்தை தொட்டுவிடலாம் என்பதற்கு இந்தப் பாடல் முத்து ஒரு சிறந்த உதாரணம்.