

கரோனா காலப் பொது முடக்கத்தில், நானி நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘சியாம் சிங்கா ராய்’ படம், அவருக்கு அகில இந்திய அளவில் ரசிகர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. தற்போது அவர் சுரங்கத் தொழிலாளியாக நடித்துள்ள ‘தசரா’, தெலுங்கு, தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகிறது. அதையொட்டி சென்னை வந்திருந்த நானியுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..
நட்சத்திரமாக வளர்ந்த பிறகு, அறிமுக இயக்குநர்களை நடிகர்கள் கண்டுகொள்வதில்லை. நீங்கள் தொடர்ந்து, துணிந்து அறிமுக இயக்குநர்களை நம்புவது ஏன்?
வெளிப்படையான ஒரே காரணம்தான். அவர்கள் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து திரைக்கதை எழுதுவதில்லை. இந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா, தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோதார்கனி நிலக்கரிச் சுரங்கத்தை ஒட்டிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர்.
அவருடைய தந்தை நிலக்கரியை ஏற்றி வரும் லாரி ஓட்டுநராக அதே சுரங்கத்தில் 40 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் சம்பவங்களும் சிறு வயது முதல் அவர் எதிர்கொண்ட வாழ்க்கை. என்னைப் போன்ற ஒரு நடிகனுக்கு இதைப் போன்ற ஒரு திரைக்கதை அமைவது அரிது.
என்ன கதை, எங்கே படமாக்கம் செய்தீர்கள்?
நிலக்கரிச் சுரங்கத்தையும் அதைச் சார்ந்து வாழும் தொழிலாளர்களின் கடினமான வாழ்க்கையும் ஒடுக்குதலிலிருந்து அவர்கள் எழுச்சி பெறுவதும்தான் கதை. நான் இதில் தரணியாக நடித்திருக்கிறேன். எனது சிறு வயது ’ப்ளாஷ் பேக்’ எண்பதுகளில் நடக்கிறது.
மற்ற அனைத்துச் சம்பவங்களும் இரண்டாயிரத்தில் நடக்கின்றன. என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிக மிக முக்கியமான படம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் உழைப்பைக் கோரிய படம். எங்கே இந்தக் கதை உண்மையில் நடந்ததோ அதே கோதார்கனி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்தினோம்.
கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சந்தோஷ் நாராயணன், சத்யன் சூரியன், அன்பறிவ் என தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமான கலைஞர்கள் படத்தில் அதிகமாக இருக்கிறார்களே..?
ஏன் நான் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானவன் இல்லை என்கிறீர்களா? ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் எவ்வளவு அன்பைக் கொடுக்கிறார்களோ.. அதே அளவு அன்பு தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கர்நாடகாவிலும் எனக்குக் கிடைக்கிறது. இது நானி என்கிற தனிப்பட்ட நடிகனுக்குக் கிடைத்த அன்பல்ல; அவன் நடித்தக் கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் அன்பு. அதுதான் உயர்வான அன்பு என நினைக்கிறேன்.
அதனால்தான் ரசிகர்களை ஒவ்வொரு முறையும் தரணி போல் ரத்தமும் சதையுமான கதாபாத்திரங்களுடன் சந்திக்க வருகிறேன். கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி இருவரையும் அங்கே கொண்டாடுகிறோம். சந்தோஷ் நாராயணன் மக்களிடமிருக்கும் இசையை நவீனம் கலந்து கொடுத்து உருக்குகிறார்.
ஆட்டம் போடவும் வைக்கிறார். எங்கள் கூட்டணி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். சத்யன் சூரியன், அன்பறிவ் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியிருக்கிறது.
நிலக்கரிப் பயன்பாடு புவி வெப்பமாதலை அதிகரிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதை அறிவீர்கள்தானே..?
நிச்சயமாக. நிலக்கரி என்றில்லை. புவி வெப்பமாதலை ஊக்கப்படுத்தும் தொழில்களை நாம் முறைப்படுத்தியே ஆக வேண்டிய கட்டத்துக்கு வந்துவிட்டோம். இந்தப் படத்தில் அது பற்றி எந்தச் செய்தியுமில்லை. இது வஞ்சிக்கப்படும் தொழிலாளர்களின் கோபத்தையும் ஒற்றுமையையும் பற்றிப் பேசும் படம்.