மொழி கடந்த ரசனை 48: ஒரு சுகமான பயணம்

மொழி கடந்த ரசனை 48: ஒரு சுகமான பயணம்
Updated on
2 min read

கல்லையும் உருகவைக்கும் சக்தி பெற்றது காதல். அது ஆங்கில வழிக் கல்வியில் படித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனை, சிறந்த உருது - இந்தி கவிஞனாக ஆக்கியதில் வியப்பில்லை. ஜலக் வரிசையில் நான்காவதாக நாம் காணும் ஹஸ்ரத் ஜெய்பூரிதான் நாம் குறிப்பிட்ட அந்த இளைஞன்.

இக்பால் ஹுசேன் என்ற இயற்பெயர் உடைய இந்த முஸ்லிம் இளைஞன், அருகில் வசித்த ராதா என்ற இந்துப்பெண் மீது கொண்ட தீராத காதல் கொண்டார். பின்னர் அவளையே மனைவியாக அடைந்த பெருமிதமும் ஹஸ்ரத் ஜெய்பூரி எழுதிய புகழ்பெற்ற பல பாடல்களின் பாடுபொருட்களாக அமைந்தன. ஆங்கிலக் கல்வியை விட்டு, சிறந்த கவிஞராக இருந்த தன் தாய் வழிப் பாட்டனார் ஃபிடா ஹுசேனிடம் உருது மற்றும் பெர்சிய மொழிகளைக் கற்றார் ஹஸ்ரத். இந்தி மொழி மீதும் பற்றும் தேர்ச்சியும் உடையவராகத் திகழ்ந்தார்.

“இந்தியும் உருதுவும் இணை பிரியாத இரண்டு சகோதரிகள்” என்ற அவரது கோட்பாட்டுக்கு ஏற்ப அவரது பாடல்கள் அந்த இரண்டு மொழிகளின் சங்கமமாக விளங்குகின்றன. திரை வாய்ப்புகளைத் தேடி மும்பை வந்த ஹஸ்ரத், நம் ரஜினியைப் போன்று பேருந்து நடத்துநராகச் சில வருடம் பணிபுரிந்தார். தன் உருதுக் கவிதைகளை அரங்கேற்றம் செய்வதற்காக ஹஸ்ரத் அவ்வப்போது செல்லும் ‘முஷாயரா’ கவியரங்கம் ஒன்றுக்கு வந்திருந்தார் ராஜ்கபூரின் தந்தை பிரித்வி ராஜ்கபூர். அந்தக் கவியரங்கில் ஹஸ்ரத்தின் காதல் கவிதை ஒன்றைக் கேட்டார். உடனே தன் மகன் அப்போது எடுத்துக்கொண்டிருந்த ‘பர்சாத்’ (மழை) என்ற படத்தில் ஒரு பாட்டு எழுதும் வாய்ப்பைத் தந்தார். சங்கர் - ஜெய்கிஷன் இசை அமைப்பாளராக இருந்த அந்தப் படத்தில் தொடங்கி, ராஜ்கபூர் - ஹஸ்ரத் ஜெய்பூரி- சங்கர்-ஜெய்கிஷன் ஆகிய மூவர் கூட்டனி, சுமார் 31 வருடங்கள் இந்தித் திரை உலகில் தனக்கான அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது.

‘ஜிந்தகி ஏக் சஃபர் ஹை சுஹானா, யஹான் கல் கியா ஹோ, கிஸ்னே ஜானா’ என்று தொடங்கும் ‘அந்தாஜ்’ (பாணி) திரைப்படத்தில் ஹஸ்ரத் எழுதிய இப்பாடல், சிறந்த பாடல் வரிகளுக்காக, ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது. விபத்தில் தன் அன்புக் கணவனை இழந்து ஆசிரியராக ஒரு பள்ளியில் பணி புரியும் ஓர் இளம் விதவையையும் தன் அன்பு மனைவியைப் பறிகொடுத்த ஒரு நல்ல மனிதரையும் (விதவை வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும்) அவருடைய செல்ல மகள் இணைத்து வைப்பதைக் கதையாகக் கொண்டது இப்படம். மும்பை கேட் வே ஆஃப் இண்டியா, மெரீன்ஸ் லயன்ஸ், சௌப்பாத்தி பீச், ஆகிய பகுதிகளில் படமாகப்பட்ட இப்பாடல் அந்த நாளைய அழகான ‘பம்பாய்’ நகரின் அழிக்க இயலாத ஆவணமாகத் திகழ்கிறது.

துவண்டு கிடப்பவர்களைத் துள்ளி எழச் செய்யும் கிஷோர்குமாரின் உற்சாகம் கொப்பளிக்கும் குரல், வெறும் பதினைந்து நிமிடமே படத்தில் தோன்றும் ராஜேஷ் கன்னாவின் வசீகரம், ‘டிரீம் கேர்ள்’ என்று மெச்சப்பட்ட கட்டழகி ஹேம மாலினியின் எழில் தோற்றம், உடல்மொழி ஆகிய அனைத்தையும் சம அளவில் உள்ளடக்கிய இப்பாடல் இன்றளவும் ஒரு ஹிட் பாடலாக விளங்குகிறது.

இப்பாடலின் பொருள்.

வாழ்க்கை என்பது ஒரு சுகமான பயணம்

வரவிருக்கும் நாளய நிகழ்வை இங்கு எவர் அறிவார்

(எனவே அதைப் பற்றிக் கவலைப் படாமல்)

வெண்ணிலவையும் விண்மீன்களையும் விஞ்ச

வேண்டியதைச் செய்வோம் நாம். அந்த

ஆகாயத்துக்கும் அப்பால் உயருவோம் நாம்

ஆயாசத்துடன் நம் பின்னே நிற்கும் இந்த உலகம்

சிரித்துப் பாடி பொழுதை போக்கிச் செல்லும் எங்கும்

எடுத்துக்கொள்ளாமல் இந்த உலகம் சொல்லுவதை

அடுத்து வரும் நாளை அடக்கு புன்னகையில்

சாவு வரும் சந்தித்தே தீரவேண்டும் அதை ஒரு நாள்

ஆவியாய் நம் உயிர் அகன்றே விடும் ஒரு நாள்

அஞ்சுவது ஏன் அதைப் பற்றி (சாவு) நாம் பேசுவதற்கு

வரவிருக்கும் நாளைய நிகழ்வை எவர் அறிவார் இங்கு

வாழ்க்கை என்பது ஒரு சுகமான பயணம்.

மகிழ்ச்சியாக ஒரு முறை, சோகமாக ஒரு முறை என திரையில் பலமுறை ஒலிக்கும் இப்பாடல் ‘யோடிலிங்க்’ என்ற, கீழ் ஸ்தாயிக்கும் உச்ச ஸ்தாயிக்கும் இடையில் பலவித சுருதியில் பாடும் அரிய வகையில் அமைந்திருப்பது இங்கு குறிப்பிடத் தகுந்தது.

(நிறைவடைந்தது)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in