

சர்வதேச அளவில் திரைத்துறைக்கு என்று பல விருதுகள் புகழ்பெற்றுள்ளன. இருப்பினும் ஆஸ்கர் விருதே இன்றளவும் உயர்வானதாகக் கருதப்படுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு, நாளை மறுநாள் (மார்ச் 12) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு முந்தைய தகுதிப் பட்டியலில் எப்போதும் இல்லாத வகையில் 10 இந்தியத் திரைப்படங்கள் இடம் பெற்றன. அவை ‘ஆர்ஆர்ஆர்’, ‘கங்குபாய் கத்தியவாடி', ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘காந்தாரா’, ‘இரவின் நிழல்’, ‘செல்லோ ஷோ’, ‘மீ வசந்த் ராவ்’, ‘தி நெக்ஸ்ட் மார்னிங்’, ‘விக்ராந்த் ரோனா’, ‘ராக்கெட்ரி’ ஆகியன.
இருப்பினும், தற்போதைய இறுதிப் பட்டியலில், மூன்று இந்தியப் படைப்புகள் மட்டுமே பரிந்துரையை வென்றுள்ளன். அவற்றில் ‘ஆர்ஆர்ஆர்’ ஒரிஜினல் பாடல் பிரிவிலும், ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) என்கிற தமிழ் ஆவணப்படம் சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவிலும், ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ (All That Breathes) சிறந்த ஆவணப்படப் பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
ஆர்ஆர்ஆர்: தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ ‘விஷுவல் எஃபெக்ட்’ நிறைந்த விஷுவல் ட்ரீட்டாக அமைந்தது.
முதலில் சிறந்த இசை, சிறந்த பாடல் ஆகிய இரு பிரிவுகளுக்கான தேர்வுப் பட்டியலில் நுழைந்த இது, தற்போது சிறந்த பாடல் பிரிவின் இறுதிப் பட்டியலில் மட்டுமே இடம் பிடித்துள்ளது. ஆங்கிலேயர்களின் மனிதாபிமானமற்ற அடக்குமுறையை விமர்சிக்கும் இப்படம், ஆஸ்கருக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது ஆச்சரியமான நிகழ்வு.
இந்தத் திரைப்படத்தில் எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பாடகர்கள் ராகுல், கால பைரவா ஆகிய இருவரும் இப்பாடலை பாடியுள்ளனர்.
சரண், ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரது அசத்தலான நடனம் அனைவரையும் கவர்ந்தது. இந்தப் பாடலின் காட்சியாக்கம் பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கும் விதத்தில் இருந்தது என்றால் மிகையல்ல. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ‘லைவ்’ ஆக பாடப்படவுள்ளது.
ஆல் தட் ப்ரீத்ஸ்: ஷெளனக் சென் இயக்கியிருக்கும் இந்த ஆவணப்படம், இரண்டு சகோதரர்களுக்கும் அவர்கள் நேசிக்கும் பருந்துக்கும் இடையிலான நேசத்தின் வழியே, டெல்லியின் கொடூர முகத்தையும் சூழலியல் ஆபத்துகளையும் உணர்த்தும் படைப்பாக உருவாகியிருக்கிறது.
டெல்லியில் வசிக்கும் நதீம், சவூத் ஆகிய இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் ஒரு கரும் பருந்தை நேசிக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் பருந்து சகோதரர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
கரும் பருந்தின் மீதான நேசம், மற்ற பறவைகளின் மீதான ஒன்றாகவும் மாறுகிறது. டெல்லியின் காற்று மாசுபாட்டால், புழுதி மூட்டம் கிளம்பி வானம் மூடப்படுவதும் அதனால் திசைவழி அறியாமலும் சுவாசிக்க முடியாமலும் பறவைகள் ஆயிரக்கணக்கில் கீழே விழுவது அங்கே தொடர்கதை.
அவ்வாறு விழும் பறவைகளை மீட்டெடுத்து, அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், தாங்கள் வசிக்கும் வீட்டின் சிறிய கீழ்தளப் பகுதியில் அவர்கள் ஒரு தற்காலிக பறவை மருத்துவமனையை நிறுவுகின்றனர். அதன் மூலம் காற்று மாசுபாட்டின் கொடிய நச்சில் அகப்பட்டு வீழும் பறவைகளைக் காப்பாற்ற முயல்கின்றனர்.
தற்போது பெருகிவரும் வெறுப்பு அரசியலின் ஆபத்தை விட, பன்மடங்கு வீரியம் கொண்டது சுற்றுச்சூழல் மாசுபாடு. வெறுப்பு அரசியலால் பாதிக்கப்படும் சகோதரர்களுக்கும் காற்று மாசுபாட்டால் புறக்கணிப்புக்கு உள்ளாகும் பறவைகளுக்கும் இடையிலான ஆத்மார்த்தமான உறவின் மூலம் அது நமக்கு உணர்த்தப்படுகிறது.
மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் இடையிலான நேசத்தினூடே டெல்லி போன்ற பெரு நகரங்களில் உயர்ந்துவரும் காற்று மாசுபாடும் சமூக பதற்றங்களும் இதில் கவித்துவமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த மே மாதம் நடைபெற்ற 75வது கான் சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த ஆவணப்படத்துக்குத் தங்கக் கண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்: நீலகிரி மாவட்டத்தின் முதுமலைக் காட்டுப் பகுதியில் தெப்பக்காடு என்கிற யானைகள் முகாம் உள்ளது. ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் இது. காடுகளில் தாயைப் பிரிந்த நிலையில் மீட்கப்படும் யானை குட்டிகளும் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் காட்டு யானைகளும் பிடிக்கப்பட்டு இங்கே பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இயக்குநர் கார்த்திகி இயக்கிய இந்த ஆவணக் குறும்படம், அந்த யானைகள் முகாமில் யானைக் குட்டியைப் பராமரிக்கும் பழங்குடித் தம்பதியின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது.
காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் -பெள்ளி தம்பதி, தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளைப் பராமரித்து வருகின்றனர். காட்டில் தாயைப் பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட 2 யானை குட்டிகளுக்கு தாய், தந்தையாக மாறி வளர்த்து ஆளாக்கும் இந்தத் தம்பதியின் நேசத்தை இக்குறும்படம் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.
இதில், யானை குட்டிகளுக்கும் அதனைப் பராமரிக்கும் அந்த எளிய மனிதர்களுக்கும் இடையே உருவாகும் பிரிக்க முடியாத பந்தம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தும். நீலகிரியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகியின் இரு வருட உழைப்பில் உருவான ஆவணப்படம் இது.
எதிர்பார்க்கப்படும் படங்கள்: விருதுகளை வெல்லக் காத்திருக்கும் படங்கள் என்கிற எதிர்பார்ப்பில், ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’, ‘தி பென்ஷீஸ் ஆஃப் இனிஷெரின்’, ‘ தி ஃபேபல்மென்ஸ்’, ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ ஆகிய படங்கள் பற்றி ரசிகர்களும் திரை ஆர்வலர்களும் விவாதித்து வருகின்றனர். இவற்றில், தனது இளமைப் பருவ வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கியிருக்கும் ‘தி ஃபேபல்மென்ஸ்’, இரண்டு நண்பர்களுக்கு இடையிலான பிரிவின் வழியே மனத்தின் முரண்களை அலசும் ‘தி பென்ஷீஸ் ஆஃப் இனிஷெரின்’ ஆகிய இரு படங்கள் விமர்சகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. இருப்பினும், ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படம் எதிர்பாரா அதிர்ச்சியை அளிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கானப் பிரிவில் ‘ஆல் கொயட் ஆன் தி வெஸ்ர்டன் ஃபிரன்ட்', ‘அர்ஜெண்டினா,1985’ ஆகிய இரு படங்களுக்கு இடையில்தான் உண்மையான போட்டி என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரிவின் இறுதிப் பரிந்துரையில் இம்முறை இந்தியப் படங்கள் எதுவும் நுழைய முடியாமல் பின்தங்கிவிட்டன. ஆஸ்கர் விழாவில், விருது வழங்கவுள்ள பிரபலங்களின் பட்டியலில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம் பெற்றிருக்கிறார்.
கனவு மெய்ப்படுமா? - ஆஸ்கர் விருதை வெல்வதற்கு ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கமும் தரமும் மட்டும் போதாது. அதை அமெரிக்காவில் இருக்கும் விமர்சகர்களிடம் கொண்டு சென்று சேர்க்கப் பொருளாதார வலிமை இருக்க வேண்டும். சிறிய தயாரிப்பாளர்களுக்கு அது சாத்தியமற்ற ஒன்று.
முன்னதாக, அமீர் கான் தனது அசாத்திய முயற்சியின் வாயிலாக ’லகான்’ திரைப்படத்தை ஆஸ்கரின் இறுதி கோட்டுக்கு அருகில் கொண்டுசென்றார். தற்போது, 22 வருடங்களுக்குப் பிறகு பணத்தைக் கொட்டி ராஜமௌலி அத்தகைய முயற்சியை எடுத்துள்ளதாகப் பேசப்படுகிறது.
ஒருவேளை அந்த முயற்சியில் ஆர்ஆர்ஆர் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெறலாம். அது இசைக்காக இந்தியா பெற்ற மூன்றாம் விருது என்கிற இடத்திலேயே நாம் நின்றுகொண்டிருப்போம்.
அதேநேரம், சிறந்த ஆவணப்பட பிரிவிலும் சிறந்த ஆவணக் குறும்பட பிரிவிலும் வெற்றி கிடைத்தால் இந்தியா கொண்டாடித் தீர்க்கும்.ஷெளனக் சென்கார்த்திகிஇசையமைப்பாளர் கீரவாணியுடன் இயக்குநர் ராஜமௌலி.
- mohamed.hushain@hindutamil.co.in