

கடந்த வெள்ளியன்று வெளியானது ‘அயோத்தி’ திரைப்படம். சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருந்த இப்படத்தை எஸ்.மந்திரமூர்த்தி இயக்கியிருந்தார். மனிதநேயம் மீதான நம்பிக்கையை, மத நல்லிணக்கத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் விதைக்கும் திரைப்படமென்று ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவராலும் பாராட்டப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதையை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதினார் என அவரது பெயர் படத்தின் டைட்டில் கார்டில் போடப்பட்டது.
ஆனால், ‘தீராத பக்கங்கள்’ என்னும் தன்னுடைய வலைதளத்தில் 2011இல் கதை வடிவத்தில் தான் எழுதிய உண்மைச் சம்பவத்தின் பதிவே ‘அயோத்தி’ படத்தின் கதை என்று எழுத்தாளர் மாதவராஜ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறார்.
மாதவராஜ் கேட்பதோ, தான் எழுதியதை அடிப்படையாகக் கொண்டே கதை எழுதப்பட்டது என்பதற்கான கிரெடிட்டைத்தான். இந்தக் குற்றச்சாட்டை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
நாளிதழ்களில் படித்த செய்திகள், ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த ஒரு வட இந்தியக் குடும்பம் விபத்தில் சிக்கியது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அளித்த விரிவான தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கதையைத் தான் எழுதியதாக அவர் கூறியிருக்கிறார்.
படத்தின் டைட்டில் கார்டில், ’இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானது என்றும் தகவல்களை அளித்த மதுரையைச் சேர்ந்த நண்பருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டி யிருக்கிறார்.
‘அயோத்தி’ படத்தின் திரைக்கதை தொடர்பாகவும் ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியதாக தன்னிடம் கொடுக்கப்பட்ட இரண்டு பக்கக் கதையின் அடிப்படையில், தான் எழுதிக்கொடுத்த திரைக்கதையை 60 சதவீதம் வரை பயன்படுத்திக்கொண்டு தனக்கு கிரெடிட் கொடுக்கவில்லை என சங்கரதாஸ் என்பவர் முகநூலில் பதிவுசெய்துள்ளார்.
தன்னிடம் கொடுக்கப்பட்ட கதையையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதில் சில சம்பவங்களும் உரையாடல்களும் மாதவராஜின் பதிவில் இருப்பதுபோலவே அச்சு அசலாக இருக்கின்றன.
எந்த ஒரு திரைப்படமும் பலரின் கூட்டு உழைப்பால்தான் சாத்தியமாகிறது. அந்த வகையில் மாதவராஜின் பதிவும் சங்கரதாஸின் திரைக்கதைப் பங்களிப்பும் ‘அயோத்தி’ திரைப்படத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதைப் படக்குழுவினர் இப்போதாவது வெளிப்படையாகப் பதிவுசெய்ய வேண்டும். இல்லை, தங்கள் தரப்பு தவறு செய்யவில்லை என்றால் அதைப் பொதுவெளியில் நிரூபிக்க வேண்டிய கடமை படக்குழுவினருக்கு இருக்கிறது.
‘அயோத்தி ’ திரைப்படத்தோடு இந்தப் பிரச்சினை முடிவடைந்து விடவில்லை. அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகிப் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள ‘அயலி ’ இணையத் தொடரின் கதை, தான் எழுதிய ’தில்லையாற்றங்கரை’ என்னும் நாவலிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது ‘ஏலே படத்தின் அழகியல் ‘நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக இயக்குநர் ஹலிதா ஷமீம் கூறியிருக்கிறார். இன்றைக்கு வெளியாகவிருக்கும் ‘இரும்பன்’ திரைப்படத்தின் விளம்பரங்களில் இயக்குநர் பெயர் இல்லை.
வரலாற்றில் முதல் முறையாக (!) ஒரு திரைப்படத்தின் போஸ்டரில் இயக்குநரின் பெயர் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இயக்கியிருக்கும் வ.கீராவுக்கு நியாயம் வேண்டி சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழில் புதிய கதைகள் திரையாக்கம் பெறுகின்றன என மகிழ்ச்சியடையும் நேரத்திலேயே, தொடர்ச்சியாக இதுபோன்ற கதைத் திருட்டு குற்றச்சாட்டுகள் அணிவகுக்கின்றன.
தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப் பங்களிப்பு செய்வோரின் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது புதிதல்ல. ஒரு திரைப்படத்தின் அஸ்திவாரமாக இருக்கக் கூடிய கதை விவகாரத்தில் தமிழ்த் திரையுலகம் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
கூட்டுழைப்பை அடிப்படையாகக் கொண்ட சினிமாவில், கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட எழுத்துக்குப் பங்களிப்பவர்களின் உழைப்பை மறைப்பதன் வழியாக, யார் லாபம் அடைய நினைக்கிறார்கள் என்கிற முக்கியமான கேள்வி மறைந்திருக்கிறது.
இவைபோன்ற மறுக்கப்படும் அங்கீகாரங்களுக்குப் பின்னால் உள்ள அந்த முக்கியமான கேள்விக்கான விடை, மொழிமாற்று உரிமை உள்ளிட்ட பிற உரிமைகளில் அடையாளமற்ற எழுத்தாளர்களுக்கு உரிய தொகையை அழ வேண்டியிருக்கும் என்பதுதான்! மாதவராஜ்எஸ்.ராமகிருஷ்ணன்சங்கரதாஸ்
- நந்தன்