கோலிவுட் ஜங்ஷன்: இலங்கையில் சத்யராஜ் மகள்!

கோலிவுட் ஜங்ஷன்: இலங்கையில் சத்யராஜ் மகள்!

Published on

வடக்கு இலங்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது நெடுந்தீவு. இங்கு ஏராளமான தமிழ்க் குடும்பங்கள் வசித்து வருகின்றன. முள்ளி வாய்க்கால் யுத்தத்துக்குப் பிறகு இங்கே ‘பசுமைப் பள்ளி - பசுமை சமுதாயம்’ என்கிற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை அமைத்து, அங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை வழங்கி வருகிறார் பூங்கோதை சந்திரஹாசன். இவர், ‘ஈழத்து காந்தி’ என்று அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தி.

அவரது தன்னார்வ நிறுவனத்துடன் இணைத்து பணியாற்றுகிறார் நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா. இது பற்றி சத்யராஜ் கூறும்போது “மகளின் ஈடுபாடு குறித்து நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். தமிழ்க் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம், விவசாயம் என்கிற அற்புதமான தொழிலைக் கற்றுக்கொள்வது, அதில் அந்தக் குழந்தைகளின் பெற்றோரையும் ஈடுபடச்செய்வது எனப் பல விஷயங்கள் இவர்களது கல்வித் திட்டத்தில் அடங்கியிருக்கிறது” என்றார்.

கமல் வெளியிடும் முதல் தோற்றம்! - தனது சிறுகதையை மையமாகக் கொண்டு, பாரதிராஜாவை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தங்கர் பச்சான் இயக்கி முடித்துள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இதில் ‘அருவி’ புகழ் அதிதி பாலன், கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது முழு வீச்சில் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வரும் இப்படத்தின் முதல் தோற்றத்தை கமல் விரைவில் வெளியிடுகிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈடுபாடு காட்டியபடி, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவரும் கமல் வெளியிடும் படத்தின் முதல் தோற்றத்தை இயக்குநர் வடிவமைத்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் கதையை நகர்த்திச் செல்லும் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன.

மருமகனுக்கு கதை எழுதிய ஆக்‌ஷன் கிங்! - தமிழ் சினிமாவில் ‘ஜெய்ஹிந்த்’ என்கிற வார்த்தையை, தான் எழுதி, இயக்கி, நடித்த படங்களின் வழியாக ஒலிக்கச் செய்தவர் ஆக் ஷன் கிங் அர்ஜுன். தற்காலிகமாக நடிப்பதைக் குறைத்துக்கொண்ட அவர், தற்போது தன்னுடைய அக்காள் மகன் துருவா சார்ஜா நடிக்கும் ‘மார்டின்’ என்கிற பான் இந்தியா படத்துக்காகக் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் உதய் கே. மேத்தா தயாரித்துள்ள இப்படத்தை ஏ.பி. அர்ஜுன் இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் பெங்களூருவில் நடந்த இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ஆக் ஷன் கிங் அர்ஜுன் பேசும்போது “என்னைப் பொறுத்தவரை பான் இந்தியா படம் என்ற ஒன்று கிடையாது. மக்களுக்கு ஒரு படம் பிடித்தால், அது தீயைப் போல் மாறி முழு இந்தியாவையும் ஆக்கிரமித்துக்கொள்ளும். அதை அடக்கக்கூட முடியாது. அதுதான் பான் இந்தியா படம். அப்படியொரு படத்துக்கான முயற்சியே ‘மார்டின்’” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in