

இரு வரித் திருக்குறள் ஒன்றின் ஆன்மாவையும் 30 நொடி விளம்பரம் ஒன்றின் மூலம் பெற்ற தாக்கத்தையும் வைத்துக் கொண்டு, விலகல் இல்லாத ஒரு திரைப்படத்தை உருவாக்குவது சாத்தியமா? சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.
அறத்துப்பால் அதிகாரத்தில் நிலையாமை, பிறப்பு குறித்து எடுத்துக்காட்டும் ‘உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி / விழிப்பது போலும் பிறப்பு’ என்கிற அந்தக் குறள்தான் படத்தின் மையச் சரடு. அதேபோல் 2005இல் வெளிவந்த ‘கிரீன் பிளைவுட்’ விளம்பரத்தில், பெற்றோருடன் பேருந்தில் சுற்றுலா வரும் ஒரு சீக்கியச் சிறுவன், ஜன்னலுக்கு வெளியே கண்ணில் பட்ட ஒரு செட்டிநாட்டு பங்களாவைப் பார்த்துவிட்டு திடீரென்று தமிழில் பேசியபடி இறங்கி ஓடுவார். அந்த விளம்பரத்தின் பொறியை, திருக்குறளின் ஆதாரக் கருத்துடன் தோய்த்தெடுத்த இருமொழிக் கலாபூர்வம் இப்படைப்பு.
கே. பாலசந்தரின் ‘மரோ சரித்ரா’ (1978), ஜி. அரவிந்தனின் ‘சிதம்பரம்’ (1985) சத்யன் அந்திக்காடின் ‘மழவில் காவடி’ (1989) போன்ற வெகுசில படங்கள் போலவே சகோதர மொழியினர் புரிந்துகொள்ளுமாறு மலையாளம், தமிழ் என இரு வேறு கலாச்சாரங்களை அன்பெனும் ஒற்றைப் பேரிழையில் இணைத்திருக்கிறது லிஜோவின் திரைமொழி.
ஒப்புவித்த சூப்பர் ஸ்டார்! - ஓர் எளிய திரைப்படம் மாபெரும் ரசவாதமாக மாறிவிடும் மாயம் எல்லா தருணங்களிலும் நிகழ்ந்துவிடாது. மம்மூட்டி போன்ற ஒரு முன்னணி நட்சத்திரம், ஒரு சாமானியக் கதாபாத்திரத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருப்பதால் அதன் சாத்தியம் உறுதி செய்யப்பட்டுவிடுகிறது.
மூன்று தேசிய விருதுகள், 400 திரைப்படங்களைக் கடந்து 71 வயது இளமையுடன் வலம் வரும் மம்மூட்டியே இதன் தயாரிப்பாளர். இவரை முகமாக வைத்துக்கொண்டு, இருமுறை கேரள சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர், திரைக்கதாசிரியர் எஸ். ஹரிஷ், கடந்த பத்தாண்டுகளில் அதிக கவனம் பெற்றுள்ள ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், 12 வருடங்களாக, வணிக சமரசமற்ற 10 திரைப்படங்கள் மூலம் வழமையான கட்டுச் சுவர்களை தகர்த்த, சமகால மலையாள சினிமாவின் கலகக்கார இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஆகியோர் இணைந்து ‘நண்பகல் நேரத்து மயக்க’த்தில் நம்மை ஒன்றே முக்கால் மணிநேரம் ஆழ்த்திவிடுகிறார்கள்.
வாழ்க்கையே ஒரு நாடகம்: படத்தின் தலைப்பை மலையாளத்திலும் அதனடியில் நிழல் போலத் தமிழிலும் காண்பித்திருப்பதில், கதையின், அது நிகழும் களத்தின் வசீகர இரட்டைத் தன்மை நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.
வேளாங்கண்ணிக்கு வேன் ஒன்றில் சுற்றுலா சென்று திரும்புகிறது ஒரு மலையாள நாடகக்குழு. திரும்பும் வழியில் பின்மதியப் பொழுதில், ஒரு சாலையில் வேன் நிற்கிறது. அதில், உறங்கி விழிக்கும் ஜேம்ஸ் (மம்மூட்டி) மட்டும் அருகிலிருக்கும் சிறு கிராமத்துக்குள் நுழைகிறார்.
அதன் பின்னர் அங்கு நடக்கும் மாயங்களும் அந்த மலையாள நாடகக் குழுவுக்கும் அந்த சிறு கிராமத்து மக்களுக்குமிடையே நடைபெறும் சுவாரஸ்யங்களும் குழப்பங்களும் தான் கதை.
நாடகம் போன்ற நிலைத்த சட்டகத்தினுள்ளே தொடர்ந்த அசைவுகள் கொண்ட தூரத்து, அலாதியான காட்சியமைப்புகள், மனித வாழ்க்கையே ஒரு நாடகம் என்கிற உணர்வுடன் நம்மை இணைத்துவிடுகின்றன. நாடகங்களின் கூறுகள் சார்ந்தே காட்சிகள் மாறுவது, நவீன தொழில்நுட்பத்தின் நெருக்கடிகளைத் தவிர்த்திருப்பது என காட்சியமைப்பின் தீர்மானம், நம்மை பிரமிக்க வைக்கிறது. பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு ஆகியவற்றுக்குப் பதிலாக, கதை நிகழ்ந்தபடியிருக்கும் சூழலில் மிகுந்த ஒத்திசைவோடு பயணிக்கும் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களும் திரைப்பட வசனங்களும் பொருந்துவது பிரமாதமானதொரு குறியீட்டு முயற்சி. குறிப்பாக, ‘திருவருட்செல்வர்’, ‘அவன் பித்தனா’, ‘பழனி’, ‘ரத்தக் கண்ணீர்’ தொடங்கி ‘சுமைதாங்கி’, ‘கௌரவம்’, ‘புதிய பறவை’, ‘கலையரசி ’, ‘பாத காணிக்கை’ வரை பல கிளாசிக் படங்களின் முக்கிய வசனங்களையும் பாடல்களையும் அவ்வளவு பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். ‘இருக்கும் இடத்தை விட்டு’, ‘வீடு வரை உறவு’ போன்ற கடந்த காலத்தின் பொக்கிஷங்கள், ஒரு நிகழ்காலப் படத்தில் பொருந்திப் போவது திரைப்படங்களில் மட்டுமே நடக்கக்கூடிய அலாதியான மாயம்.
வேறொரு காட்சியில், வேன் ஒட்டுநர் “நாடகமே உலகம் என்பதை நீ கேள்விப்பட்டதில்லையா?” எனப் போகிற போக்கில் கதையின் மையப் புள்ளியைத் தற்செயலாகத் தொட்டுவிடுகிறார். தமிழ் வசனங்களை ஜெயக்குமார் மண்குதிரை நேர்த்தியும் இயல்பும் கலந்து எழுதியிருக்கிறார். அதில் திண்டுக்கல் வட்டாரத் தன்மைக்கும் இடமளித்திருக்கிறார்.
கூட்டுழைப்பின் கலை: இக்கதைக்கு ஓர் உச்ச நட்சத்திரத்தின் தேவையை நியாயப்படுத்தி, அதில் நடிகராகவும் அதே சமயம் இதுவொரு படைப்பு என்பதை அறிந்து, வணிக சமரசங்கள் விலக்கி இப்படத்தின் தயாரிப்பாளராகவும் மம்முட்டி மிளிர்கிறார். சாலியாக வரும் மலையாள நடிகை ரம்யா, பூங்குழலியாக வரும் ரம்யா பாண்டியன், அளிக்கப்பட்டச் சின்னக் கதாபாத்திரத்தில் அழுத்தம் பதிக்கும் மறைந்த கலைஞர் ‘பூ’ ராம், அவரது பேத்தியாக நடித்துள்ள சிறுமி, பார்வைக் குறைபாடுள்ள முதிய பெண்மணி தொடங்கி துணைக் கதாபாத்திரங்களில் வருகிறவர்கள் கதைக் களத்துக்குள் வெகு இயல்பாக பொருந்தியிருக்கிறார்கள்.
எடிட்டர் தீபு ஜோசப், ஒலி வடிவமைப்பாளர் ரெங்கநாத் ரவி ஆகிய இருவரது தொழில்நுட்ப பங்களிப்பும் படத்தின் ஆன்மாவைத் தொட்டு வெளிப்பட்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காட்சியின் சட்டகத்தினுள்ளே, ஜன்னலில் ஒரு தாயும் மகளும் வெளியே வாசலில் இன்னொரு தாயும் மகனும் மெளனமாக பொதுவான கவலையில் அமர்ந்திருக்கும் உறைந்த தோற்றம், காட்சியமைப்பின் உச்சம்.
எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர் ஆகியோர், வெகு நுட்பமாக ஒரு பொதுவான கதைசொல்லல் புள்ளியில் இணைத்து கூட்டுழைப்பின் வழியாக ஒரு சிறந்த படைப்பை சாத்தியப்படுத்த முடியும் என்பதற்கு இப்படம் ஓர் உதாரணம்.
தமிழ் மரபுக் கதையான விக்ரமாதித்தனின் கனகமணி சிம்மாசனம் தொடங்கி நவீன சினிமா வரை ‘பிளவுபட்ட’ மனிதர்கள், ஆளுமைகள் பற்றிய கதைகள், நகைச்சுவை, திகில் கலந்து சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தப் படம், சாதாரண புலனறிவிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஒரு கனவு போலும் ஆளுமைகளையும் அனுபவங் களையும் முன்வைக்கிறது.
கடந்த கால் நூற்றாண்டாக மலையாள சினிமா, தமிழர்களைப் பற்றிய தவறான கற்பிதங்களை காட்டி வந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நவீன இயக்குநர்களின் படங்களில் இந்தக் கற்பித மயக்கம் குறைந்துவருவது ஆறுதல்.
வெகு சில படங்களே வெற்றி, தோல்வி, பிரமாதம், மோசம் என்கிற தீர்மான வட்டங்களுக்குள் அடக்கி வைக்கமுடியாத முழுமையான திரை அனுபவமாக அமைந்துவிடுகின்றன.
ரசிகர்களுக்காக எடுக்கிறேன் என்று கலையை மலினப்படுத்தாமல், கதைக் களத்தில் நிகழ்வதில் விடுப்பட்ட உண்மைகளை ரசிகர்களின் புரிதலுக்கு விட்டுவிடுவதுதான் இப்படைப்பின் தனிச்சிறப்பு. அந்த வகையில் பார்வையாளர்களை பங்கேற்கச் செய்யும் இது, இந்திய சினிமாவில் ஒரு முக்கிய, அசாதாரண மான திரைப்படம்.
- டோட்டோ | ottokv@gmail.com