திரை (இசைக்) கடலோடி  27 | இருவரும் ஒருவரில் பாதி!

திரை (இசைக்) கடலோடி  27 | இருவரும் ஒருவரில் பாதி!
Updated on
3 min read

வாழ்த்து என்பது பொதுவாக மனத்துக்கு உற்சாகத்தையும் நிறைவையும் தரக்கூடியது. அதிலும் திருமண வாழ்த்து என்பது புதிதாக இல்லறத்தில் நுழையும் இளம் தம்பதிகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர், உற்றார் உறவினர் என்று இரு தரப்பு குடும்பங்களுக்குமே மனமகிழ்ச்சியைத் தரக்கூடியது.

புதிதாக இன்னொரு வீட்டுக்கு தங்கள் மகளை அனுப்பி வைக்கும் பெற்றோர்களின் மனதில் மகளைப் பிரியும் சோகம் இருந்தாலும் அதனை மீறி தங்கள் கடமையை நல்லபடியாக நிறைவேற்றிவிட்டோம் - நல்ல குடும்பத்திடம் அவளை ஒப்படைத்துவிட்டோம் என்ற நிறைவையும், அவளை வாழவைக்கும் அந்த வீட்டு மனிதர்களுக்கு தங்கள் குலம் விளங்க வைக்க ஒரு நல்ல குணவதி கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சியையும் தரவைக்கும் வலிமை வாழ்த்துக்களுக்கு உண்டு.

தனது படங்களில் நல்ல கருத்துக்களையும், நேர்மறையான எண்ண அலைகளையும் பரவ வைக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திருமண தம்பதிகளை வாழ்த்துவதற்கான வாழ்த்துப்பாடலையும் அருமையாகக் கொடுத்து இருக்கிறார்.

1972 -ஆம் ஆண்டு வெளிவந்த 'இதய வீணை' படத்தில் அந்த அருமையான மணவிழா வாழ்த்துப்பாடல் அமைந்திருக்கிறது. பாடலுக்குள் நுழைவதற்கு முன் 'இதய வீணை' படத்தைப்பற்றி சில தகவல்கள் முன்னிசையாக:

பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான 'இதயம் பேசுகிறது' மணியன் அவர்கள் முதல் முதலாக ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக திரை உலகில் கால் பதித்த படம்தான் 'இதய வீணை'. மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நேரத்தில் வெளிவந்த படம் நூறு நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் இது. ஆனந்த விகடன் பத்திரிகையில் மணியன் அவர்கள் எழுதி ஏற்கெனவே மக்கள் மனதில் நிலைத்திருந்த கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் அவற்றை ஏற்று நடித்த அனைத்து நட்சத்திரங்களும் உயிர் கொடுத்திருந்தனர்.

காஷ்மீரில் ஆரம்ப காட்சிகளையும், ஒரு கனவுப்பாடலையும் எடுத்திருந்தனர்.

மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களுடன், மஞ்சுளா, சிவகுமார், லட்சுமி, எம்.என். நம்பியார், எம்.ஜி. சக்கரபாணி ஆகியவர்களும் நடித்திருந்தனர். மொத்தம் இடம் பெற்ற ஆறு பாடல்களில் ஐந்து பாடல்களை கவிஞர் வாலி எழுத ஒரு பாடலை புலமைப்பித்தன் எழுதி இருந்தார். அனைத்துப் பாடல்களையும் வெற்றிப் பாடல்களாக்கி பின்னணி இசையிலும் கலக்கி இருந்தார்கள் இரட்டை இசை அமைப்பாளர்களான சங்கர் - கணேஷ். ‘பொன் அந்தி மாலைப்பொழுது' பாடலுக்காக அவர்களைக் கிட்டத்தட்ட ஐம்பது அறுபது மெட்டுக்களை போடவைத்து எம்.ஜி.ஆர் ட்ரில் வாங்கியது தனிக்கதை. அந்த கடின உழைப்பு அவர்களை அடுத்து இசை அமைத்த படங்கள் வரை தாக்குப்பிடிக்க வைத்தது என்பது வியக்கத்தக்க விஷயம்.

சங்கர் - கணேஷ் இசையில் டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் நெஞ்சை அள்ளும் கம்பீரமும் இனிமையும் கலந்த குரலில் வெளிவந்த 'திருநிறைச் செல்வி' என்று தொடங்கும் மங்கள மணவிழா வாழ்த்துப்பாடல் தான் இந்த வாரம் திரை இசைக்கடலில் தேர்ந்தெடுத்த ராசி முத்து.

இனி பாடலின் நயம் தரங்களுக்குள் ...

கதைப்படி தந்தையால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட கதாநாயகன் பல வருடங்களுக்கு பிறகு தனது உடன் பிறந்த தங்கையை அறிந்துகொள்ள நேருகிறது. அவளை அவளது மனம் கவர்ந்த காதலனுடன் சேர்த்து வைக்க மாறுவேடமிட்டு பெற்றோரை சந்தித்து திருமணத்தையும் நிச்சயம் செய்ய வைக்கிறான். சகோதரியின் அந்த திருமணத்திற்கு மாறுவேடத்தில் வந்து இளம் தம்பதிகளை வாழ்த்திப்பாடுவதாக காட்சி அமைப்பு.

பாடல் ஒரு தொகையறாவாக தொடங்குகிறது.

'இன்று போல என்றும் வாழ்க எங்கள் வீட்டுப் பொன்மகளே
வாழைக்கன்று போல தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே'

முதல் வரியிலேயே அசத்திவிடுகிறார் கவிஞர் வாலி.

யாரோ ஒரு அந்நியன் போல வந்திருந்தாலும் அவன் அவளது சொந்தக் சகோதரன் தானே. ஆகவே 'எங்கள்' வீட்டுப் பொன்மகளே என்று அவன் தனது உறவு முறையையும் மறைமுகமாக உணர்த்துவதுபோல வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார் கவிஞர் வாலி.

வாழைக்கன்று எப்படி தாய் வாழையைச் சார்ந்து நின்றிருக்கிறதோ அதுபோல தனது நாயகன் அருகில் அவள் நின்றுகொண்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அந்தச் சகோதரன் மறைமுகமாக அவளை மணந்துகொண்டு மணாளனுக்கு இனி இவளிடம் அன்பு செலுத்துவதில் அன்னையாகவும் நீயே இருக்கவேண்டும் என்று அவனது பொறுப்பையும் இந்த உவமை மூலம் உணர்த்தி பாடலை ஆரம்பிக்கிறார் கவிஞர் வாலி.

'திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக - என்
இருவிழிபோலே இருவரும் இங்கே
இல்லறம் காணட்டும் நலமாக.'

தங்கையையும், அவளை மணந்த நாயகனையும் தனது இருவிழிகளாக கருதி எனக்கு என் தங்கை மட்டுமல்ல அவளை மணந்த நீயும் இன்னொரு கண்போன்றவன் தான் என்று இருவரையும் ஒன்றாகப் பார்க்கும் ஒரு சகோதரனின் மனநிலையை பாடலின் ஆரம்பத்திலேயே எடுத்துக்காட்டி விடுகிறார் கவிஞர் வாலி.

சரணம் முடிந்ததும் வரும் இணைப்பிசையாக சங்கர்-கணேஷ் பயன் படுத்தி இருக்கும் வயலின் பிரயோகங்கள் - பாங்கோஸோடு இணைந்து இனிமையாகச் செவிகளை நிறைக்கின்றன. இந்த இனிமை தான் இவர்கள் இசையின் தனித்தன்மை. இனி அடுத்த சரணத்தில் வாலி அவர்களின் உருவக அணி நயம் பிரமிக்க வைக்கிறது.

இதுநாள் வரை தங்கள் வீட்டில் நிலவாக பிரகாசித்துக் கொண்டிருந்தவள் இன்று முதல் இன்னொரு வீட்டில் விளக்காக ஒளிவீசப்போகிறாள். எங்கள் குடும்பத்தில் எங்கள் கண்ணின் மணியாக இருந்தவள் இனி இன்னொரு வீட்டுக்கு கண்ணாகப் போகிறாள். யாரோ ஒரு பரதேசி போல வந்திருந்தாலும் அவன் அவளது சகோதரன் தானே ஆகவே 'எங்கள் வானத்து வெண்ணிலவு' 'எங்கள் குடும்பத்தின் கண்மணி' என்று தன்னையும் மறைமுகமாக அந்தக் குடும்பத்துடன் இணைத்து பாடுவது போல பாடலில் கதையையும் புகுத்தி நயமாக வரிகளை செதுக்கி இருக்கிறார் கவிஞர் வாலி. அதே நேரத்தில் மணமகளை வெண்ணிலவாகவும், ஒளிவிளக்காகவும் உருவாகப் படுத்தி இருக்கும் நயம் அற்புதமான ஒன்று..

இதோ அந்த வரிகள்:

'எங்கள் வானத்து வெண்ணிலவாம் - இவள்
இன்னொரு வீட்டுக்கு விளக்கானாள்
எங்கள் குலம் வளர் கண்மணியாம் - இவள்
இன்னொரு குடும்பத்தின் கண்ணானாள்'

அதோடு விடவில்லை தனது சகோதரியின் நற்பண்புகளை அவளை மணந்தவனுக்கு எடுத்துரைத்து பெருமிதம் கொள்ளும் ஒரு சகோதரனை இந்தச் சரணத்தில் பார்க்கிறோம். அந்தப் பெருமிதத்தையும் சந்தோஷத்தையும் பங்கோசில் ஒரு துரித காலப் பிரயோகத்தின் மூலம் இசையிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இன்னிசை வேந்தர்கள்.

'தாய் வழி வந்த நாணமும் மானமும்
தன்வழி கொண்டு நடப்பவளாம்
கோவிலில் இல்லை கும்பிடும் தெய்வம்
கொண்டவன் என்றே நினைப்பவளாம்.'

அடுத்த சரணத்திற்கான இணைப்பிசையை முதல் சரணத்தில் இருந்து முற்றிலும் மாறுபடுத்தி அமைத்து புல்லாங்குழலையும் வயலினையும் கச்சிதமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் சங்கர்-கணேஷ்.

தொடரும் இறுதிச் சரணத்தில் தம்பதிகள் எப்படி வாழ்ந்து உயரவேண்டும் என்று ஒரு சகோதரன் கூறும் அறிவுரையாக சரணத்தின் முதற்பகுதியை அமைத்திருக்கிறார் கவிஞர் வாலி.

'ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு - வரும்
சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று - இங்கு
இன்புற வாழட்டும் பல்லாண்டு'

முதற்பகுதி முடிந்து இரண்டாம் பகுதி ஆரம்பிக்கும் முன்பாக இரண்டையும் இணைக்கும் கிட்டாரின் சிறு மீட்டல் சங்கர் - கணேஷின் திறமைக்கு ஒரு சான்று.

சரணத்தின் பிற்பகுதியை இல்லறம் சிறக்க உலகப்பொதுமறையின் முப்பால்களையும் இணைத்து ஒரு மங்கல வாழ்த்தோடு பாடலை முடிக்கிறார் கவிஞர் வாலி.

'குறள் வழி காணும் அறம் பொருள் இன்பம்
குறைவின்றி நாளும் வளர்ந்திடுக
தென்னவர் போற்றும் பண்புகள் யாவும்
கண்ணெனப் போற்றி வாழ்ந்திடுக'

அருமையான இந்தத் திருமண வாழ்த்துப்பாடல் திருமண விழா வீடுகளில் ஒலிபெருக்கியில் ஒலிக்கத் தவறாத பாடல்.

டி.எம். சௌந்தரராஜன் என்ற உன்னதப் பாடகர் நேர்மறை எண்ண அலைகள் மிகுந்த இந்தப்பாடலை நன்றாக அனுபவித்து உணர்வுபூர்வமாகப் பாடி இருக்கும் அழகு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கேட்டுத்தான் உணரமுடியும்.

மிகச் சிறப்பான நேர்மறை எண்ண அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்தப் பாடல் முத்து மணமக்களுக்கு ஒரு ராசிப் பாடல் என்பதில் சந்தேகமே இல்லை.

(தொடர்ந்து முத்தெடுப்போம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in