

திரையில் கதாநாயகிகளைக் கண்டு ரசிகர்கள் உருகுவது இருக்கட்டும். ஸ்ரீதர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணி ரத்னம், இப்போது கௌதம் மேனன் என கதாநாயகிகளை தேவதைகள் போல் சித்தரிக்கும் இயக்குநர்கள் நம்மிடம் நிறைய பேர் உண்டு. ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக பாலிவுட்டுக்கு ஒரே ஒருவர்தான்! அவர்தான் யஷ் சோப்ரா.
சின்னஞ் சிறு மஞ்சள் பூக்கள் சிதறிய நட்சத்திரங்கள் போல் பசுமையான சணல் வயலெங்கும் மின்னிக்கொண்டிருக்க, சட்டகத்தை நிறைக்கும் அந்த வயலின் நடுவே, காதல் பாடலைப் பாடிக்கொண்டு மெல்லோட்டமாக வரும் கதாநாயகிகளைப் பார்த்தால் அது யஷின் ‘ஷாட் கம்போஸிங்’ என்று கூறி விடுவீர்கள்.
காதலெனும் உணர்வை தலைமுறைகள் தோறும் இந்தித் திரை வெளியில் பொங்கி வழியச் செய்தவர். இவரது காட்சிகளில் ஆர்.டி.பர்மன் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான் வரை காதலின் கீதங்களை இசைத்துக் களித்திருக்கிறார்கள். வணிக சினிமா அம்சங்களோடு காதலின் அமரத்துவம், அதன் கண்ணியம், ஊதாரித்தனம், கண்முடித்தனம் என எல்லா உணர்வுகளையும் தனது ‘ரொமாண்டிக்’ வகை சினிமாக்கள் வழியாகப் பேசியவர்.
அவர் மறைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்திய மனநிலை மீதும் வெகுமக்கள் கலாச்சாரத்தின் மீதும் அவரது படங்கள் செலுத்தி வரும் தாக்கம் தொடரவே செய்கிறது. இது குறித்து அவருடன் பணியாற்றிய நட்சத்திரங்கள் தங்கள் நினைவுகளை மீட்டிப் பேசியிருக்கும் ஆவணப் படத் தொடர் ‘தி ரொமாண்டிக்ஸ்’ (The Romantics). 4 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரை இயக்கியிருப்பவர் ஸ்மிருதி முந்த்ரா.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்படங்களின் வழியாக ஒரு நிலைத்த பண்பாட்டின் மீது தொடர்ச்சியாக தாக்கம் செலுத்த ஒரு தனி மனிதரால் முடியும் என்பதற்கான அடையாளமாக விளங்குபவை யஷ் சோப்ராவின் படங்கள். அதை ரசனையாக எடுத்துக்காட்டுகிறது இந்த ஆவணப்படம்.
- ரசிகா