

“ஒரேயொரு ஐடியாவை மட்டும் எடுத்துக்கிட்டேன். அதையே வாழ்க்கையா மாற்றிக்கிட்டேன். அதுதான் என்னோட வெற்றி ரகசியம்” - இது ‘தனி ஒருவன்’ படத்தின் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் கூறும் தத்துவம்.
‘எம்.ஜி.ஆர்’ என்கிற ஐடியாவை மட்டும் எடுத்துக்கொண்டு, அதையே வாழ்க்கையாகவும் மாற்றிக்கொண்டு வாழ்ந்து மறைந்திருக்கிறார் மயில்சாமி.
ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் சரி, அவரோடு ஒரு நிமிடம் பேச நேர்ந்தாலும் சரி, சட்டென எம்.ஜி.ஆர். பற்றிய புகழுரை அவரது பேச்சின் இடையே தன்னிச்சையாக வெளிப்பட்டுவிடும். எம்.ஜி.ஆர். பேசிய வசனங்கள், அவரது நடிப்பு பாணி, அவரது கொடையுள்ளம் தொடங்கி, பொதுவெளிக்கு தெரிந்திராத எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்களை அவர் பகிர்ந்துகொள்ளும்போது, மயில்சாமி என்கிற தலைசிறந்த ‘எம்.ஜி.ஆர் பக்த’ரைக் காண முடியும். அதனால்தானோ என்னவோ, இவர் எல்லாருக்கும் பொதுவானவராக மாறிப்போனார்.
கோடம்பாக்கத்தில் செல்வாக்கு மிக்க நடிகர்களையும் இயக்குநர் களையும் சார்ந்து இயங்கும் பல ‘குழுக்கள்’ உண்டு. மயில்சாமிக்கு எல்லா குழுக்களிலும் இடம் இருந்திருக்கிறது. கமல், ரஜினி, சரத்குமார், சத்யராஜ், விவேக், வடிவேலு என எல்லாருக்கும் இணக்கமானவராக எந்தச் சிக்கலும் இல்லாமல் வலம்வந்தார். ஆனால், மயில்சாமியை நகைச்சுவை குணச்சித்திரம் என்பதற்கு அப்பால், கைதூக்கி உயர்த்த இந்தக் குழுக்கள் அனைத்துமே தவறிப்போனதுதான் துரதிர்ஷ்டம்.
1965இல் காந்தி ஜெயந்தி தினத்தில் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, நடிகராகும் கனவுடன் 1977இல் சென்னையில் காலடி வைத்தார். பலகுரல் திறமைதான் அவரது தொடக்க கால கையிருப்பு. வாழ்வாதாரத்துக்கு மாலை நேர உணவு விடுதியில் ‘வெயிட்டர்’ ஆக வேலை செய்துகொண்டு வாய்ப்புத் தேடினார்.
‘தாவணிக் கனவுகள்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. பாக்யராஜிடம் வாய்ப்புக்கேட்டு போனவர், அவரிடம் பத்து குரல்களில் பேசிக்காட்டினர். அதில் எம்.ஜி.ஆர். குரலுக்கு மயில்சாமி கொடுத்திருந்த உயிர் பாக்யராஜை சிலிர்க்கச் செய்தது. அன்றைய தினமே ‘தாவணிக் கனவுகள்’ (1984) படத்தில் நடிக்க வைத்தார். இரண்டாவதாக பாண்டியராஜனின் ‘கன்னி ராசி’ படத்தில் கவுண்டமணியுடன் வசனம் பேசி நடிக்கும் வாய்ப்பு அமைய, மெல்ல கவனிக்கப்பட்டார்.
அதன்பின்னர், பாக்யராஜ் படங்களில் தவறாமல் இடம் பிடித்த மயில்சாமிக்கு, பி.வாசு தொடங்கி பல இயக்குநர்கள் தொடர்ந்து வாய்ப்பளித்தார்கள். முதல் பத்து படங்களின் வழியாகக் கிடைக்காத புகழ், 1987இல் மயில்சாமியும் ‘லட்சுமண் ஸ்ருதி’ லட்சுமணணும் இணைந்து வெளியிட்ட ‘சிரிப்போ சிரிப்பு’ பல குரல் ஒலிநாடா மிகப் பெரிய வெற்றிபெற்றபோது கிடைத்தது. இதன்பின்னர், அடுத்து வந்த பத்தாண்டு காலம் மேடை நிகழ்ச்சிகள் மயில்சாமிக்கு வாழ்வளித்தன என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.
புத்தாயிரத்துக்குப் பின் விவேக்குடன் இணைந்து நகைச்சுவை வெளியைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கிய பின், மயில்சாமியின் திறமை வெவ்வேறு வண்ணங்களில் வெளிப்பட்டு நின்றதை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தார்கள். விவேக் - மயில்சாமி ‘கம்போ’வில் பல படங்கள் ‘அடல்ட்’ நகைச்சுவையின் இழையைக் கொண்டிருந்தாலும் அவற்றுக்குள்ளும் செய்தி சொல்லும் தன்மையை தனதாக்கிக் கொண்டார் மயில்சாமி.
ஒரு கட்டத்தில் வடிவேலுவுடனும் பயணம் செய்தவர், அவருக்காக சில படங்களில் அவருடைய குரலில் ‘டப்பிங்’ பேசியும் அசத்தியிருக்கிறார்.
சிறந்த டப்பிங் கலைஞர், சண்டைக் காட்சிகளில் வரும் சிறப்புச் சத்தங் களுக்கு வாய் வழியாகவே சத்தங்களை உருவாக்கிக் கொடுப்பதில் நிபுணர், சின்னத் திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர், ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவர் என பல களங்களில் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால், அவர் வாழ்ந்த காலத்திலும் மறைந்த பிறகும் தனது வருமானத்துக்கும் சக்திக்கும் மீறிச் செய்த கொடைகளால் அதிகமாக அறியப்படுகிறார். “நாம் செய்யும் உதவிகள் வழியாக எம்.ஜி.ஆர். நம்மோடு வாழ்கிறார் என்று நம்புகிறேன்” என்று அதற்கான காரணத் தையும் சொல்லிச் சென்றுவிட்டார்.