

ஐபிஎல் போட்டிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு நடுவே, சினிமா நட்சத்திரங்கள் பங்குபெறும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ (CCL) போட்டிகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கும் சிசிஎல் போட்டிகளில் இந்தியாவின் 8 மாநிலத் திரையுலகத்தைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன, பெங்களூரு, ஹைதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் ஆகிய ஆறு நகரங்களில் மொத்தம் 19 ஆட்டங்கள் நடக்க இருக்கின்றன. தமிழ் சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சென்னை ரைனோஸ் அணிக்கு நடிகர் ஜீவா கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா உலகக் கோப்பையை வென்ற நிகழ்வைச் சித்தரித்த ‘83’ என்கிற விளையாட்டுத் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்திருந்தார்.
சென்னையில் வெனிசுலா படவிழா!
உலக சினிமா அரங்கில் தென் அமெரிக்கப் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. குறிப்பாக ஸ்பானிய மொழியில் எடுக்கப்படும் பொலிவிய சினிமாக்கள் பலமுறை கான் விருதுகளை வென்றுள்ளன. தற்போது பிப்ரவரி 20 முதல் 23 வரையிலான 3 நாள் வெனிசுலா படவிழா (Venezuela Film Festival 2023), சென்னை, நுங்கம்பாக்கம், கல்லூரிச் சாலையில் உள்ள அலியன்ஸ் பிரான்சேஸ் மையத்தில் நடக்கவிருக்கிறது. வெனிசுவேலா பொலிவாரியன் குடியரசின் தூதரகமும் - இண்டோ சினி அப்ரிசியேசன் பவுண்டேஷனும் இணைந்து இந்தப் படவிழாவை நடத்துகின்றன. பட விழா நடைபெறும் நாட்களில் மாலை 6.30 மணிக்கு திரையிடல் தொடங்கும். மொத்தம் 5 படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.
நானி - சந்தோஷ் நாராயணன் கூட்டணி!
மாஸ் நடிப்பையே இயல்பாக வெளிப்படுத்தும் நானியின் நடிப்பில் தெலுங்கில் உருவாகி, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது ‘தசரா’. தெலங்கானா மாநிலத்தில் வீரலப்பள்ளி என்கிற கிராமத்தின் அருகில் அமைந்திருக்கும் சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கம்தான் இப்படத்தின் கதைக் களம். சுரங்கத்தில் கடும் உழைப்பைக் கொடுக்கும் எளிய மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் கூட்டத்துக்கு எதிராக பொங்கியெழும் நாயகனின் கோபம்தான் கதை. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் சமுத்திரக்கனி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தற்போது ‘தசரா’ படத்தின் இரண்டாவது சிங்கிளாக ‘தீக்காரி தூரம் ஆக்குறியாடி’ என்கிற ஒரு மென்சோகக் காதல் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் நானியுடன் சந்தோஷ் நாராயணனும் திரையில் தோன்றி ஆடியிருக்கிறார்.
சொந்த அனுபவமே பாடம்!
‘குடியின் தீமைகளை விளக்கி எப்போதாவது படங்கள் வருவதுண்டு. ஆனால், ‘கிளாஸ்மேட்ஸ்’ இதற்கு முன் வந்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது’ என்கிறார் படத்தை எழுதி, இயக்கி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி. இவரது இயக்கத்தில் வெளியாகும் நான்காவது படம் இது. “மூன்று வருடங்களுக்கு முன்பு வரை, நான் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அந்தப் பழக்கத்தால் இழந்தது நிறைய.. அதிலிருந்து வெளியேற நினைத்தபோது எனக்கு உதவிய அமைப்பு ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (Alcoholics Anonymous). அது நடத்தும் கூட்டங்களுக்குச் சென்று, அங்கே குடியிலிருந்து மீண்டவர்கள் தங்கள் சொந்த அனுபவத்தைப் பகிர்வதைக் கேட்டுக் கேட்டு நானும் அதிலிருந்து மீண்டேன். அப்படி நான் கேட்ட உண்மைக் கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, எனது சொந்த அனுபவத்தையும் சேர்த்து ஒரு முழுநீள நகைச்சுவை விழிப்புணர்வுத் திரைப்படத்தை எடுத்திருக்கிறேன்” என்கிறார்.