

யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம் என்ற சூழ்நிலை இப்போது உருவாகிவிட்டது. ஆனால் எடுத்த படம் எப்படியிருந்தாலும் அதை ரசிகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் மிகப் பெரிய சவால். ரசிகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதன் பின்னணியில், சாதகமான வெளியீட்டுத் தேதியை முடிவுசெய்வது, படத்துக்குச் சரியான எண்ணிக்கையில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வது, வெளியீட்டுக்கு முன் படத்தைப் பற்றிய நம்பிக்கையை ரசிகர்களிடம் உருவாக்குவது, வெளியான பிறகு ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டால், அதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்காவது ஓட வைப்பது போன்றவை உள்ளன. இவற்றுக்கு மிகச் சரியான திட்டமிடலும் மார்க்கெட்டிங் திறமையும் தேவைப்படுகின்றன.
ஏற்கெனவே ரசிகர்கள் கொண்டாடிய பல படங்களை வாங்கி வெளியிட்டும், படங்களைத் தயாரித்தும் முன்னணியில் இருந்துவரும் ‘க்ரீன் ஸ்டூடியோ’ ஞானவேல் ராஜா, தற்போது விநியோக முறையில் ஒரு புதிய முயற்சியாகத் தன்னுடன் இன்னும் ஐந்து தயாரிப்பாளர்களை இணைத்துக்கொண்டு ‘ட்ரீம் ஃபேக்டரி’ என்னும் புதிய நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்.
இந்தக் கூட்டணியில் ஸ்டுடியோ கிரீனுடன், சி வி குமாரின் ‘திருக்குமரன் எண்டெர்டெயின்மென்ட்ஸ்’, சஷிகாந்த்தின் ‘ஓய் நாட் ஸ்டுடியோ’, எல்ரெட் குமாரின் ‘ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட்’, அபினேஷின் ‘அபி&அபி’ மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் ‘லக்ஷ்மண் குமார்’ ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். ஞானவேல் ராஜாவுடன் இணைந்திருக்கும் மற்ற ஐந்து தயாரிப்பாளர்களும் தொடர்ந்து வெற்றிப் படம் கொடுத்து வருபவர்கள்.
தற்போது இந்த ‘ட்ரீம் ஃபேக்டரி’ முதல் கட்டமாக ‘சரபம்’, ‘மெட்ராஸ்’, ‘யான்’, ‘காவியத் தலைவன்’, ‘லூசியா’ ஆகிய படங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படிப் பல தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரே நிறுவனத்தின் கீழ் இயங்கத் தொடங்கியிருப்பது தமிழ் சினிமா உலகில் இதுதான் முதல்முறை. தமிழ் சினிமாவுக்கு இது ஊட்டச்சத்தாக அமையுமா?