

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் குணச்சித்திர நடிகராக, பன்முகக் கதாபாத்திரங்களில் தன் இருப்பைப் பதிந்து அழுத்தமாக அதை தக்கவைத்திருப்பவர் எம்.எஸ்.பாஸ்கர். அப்படிப்பட்டவரைக் கதாநாயகனாகக் கொண்டு ‘அக்கரன்’ என்கிற படத்தை எடுத்து முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் கே.பிரசாத். அவருடன் ஒரு சிறு உரையாடல்:
எம்.எஸ்.பாஸ்கரை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?
முதல் படம்தான் ஒவ்வொரு அறிமுக இயக்குநருக்கும் அடையாளம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றுடன் ஒரு தலை சிறந்த நடிகரின் பங்களிப்பும் அந்த அடையாளத்தில் இருக்கும்போது இன்னும் கூர்ந்து கவனிக்கப்படுவோம் என்று நினைத்தேன்.
அப்படி நினைத்தபோது என் நினைவில் முதலில் வந்து நின்றவர் எம்.எஸ்.பாஸ்கர் சார்தான். ‘வாய்ஸ் ஆர்டிஸ்ட்’டாக வாழ்க்கையைத் தொடங்கிய அவரது நடிப்புத் திறமைக்கு இணையாக பாலிவுட்டில் கூட நடிகர்கள் கிடையாது என்று சொல்வேன். அதனால்தான் அவருக்குக் கதை செய்தேன்.
அவரிடம் கதையைச் சொன்னபோது என்ன சொன்னார்?
அவர்தான் ஹீரோ என்று நான் அவரிடம் சொல்லவில்லை. கதை சொல்ல நேரம் கேட்டுப் பெற்றுக்கொண்டு போனேன். கதையைக் கேட்டு முடித்ததும் ‘இதில் யார் அந்த அப்பா ரோலில் நடிக்கப் போகிறார்கள்?’ என்றார். நீங்கள்தான் என்று அப்போதுதான் சஸ்பென்ஸ் உடைத்தேன். ‘உனக்கு எத்தனை நாள் கால்ஷீட் வேண்டுமோ எடுத்துக்கொள் தம்பி’ என்று கட்டிப் பிடித்துக்கொண்டார்.
‘அக்கரன்’ என்கிற தலைப்பு அத்தனை அக்கறையுடன் வைக்கப்பட்டதுபோல் தெரியவில்லையே?
இதுவொரு தூயத் தமிழ்ச் சொல். அக்கரன் என்றால் அழிவில்லாதவன், தீயவர்களைத் தேடித் தேடி அழிப்பவன் என்று பொருள். எம்.எஸ்.பாஸ்கர் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் தன்மையை முன்னிட்டே இந்தத் தலைப்பு.
கதை என்ன; எங்கே நடக்கிறது?
கதை மதுரையில் நடக்கிறது. அங்கே ஓர் எளிய விவசாயியாக வாழ்ந்து வருவார் எம்.எஸ்.பாஸ்கர். அவருடைய இரண்டு மகள்கள்தான் அவரது உலகம். எதிர்பாராமல் நடக்கும் ஒரு அரசியல் நிகழ்வின் விளைவாக அவருடைய இளையமகள் கொல்லப்பட்டுவிடுகிறார்.
அதை விபத்து என மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இதை தனியொரு ஆளாகத் துப்பறிந்து தெரிந்துகொள்ளும் அப்பா, அதன்பிறகு எப்படிப்பட்ட வேட்டைக்காரனாக மாறினார் என்பதுதான் கதை. எத்தனையோ படங்களில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர அப்பாவாக வந்த எம்.எஸ்.பாஸ்கரா இவர் என்று வியந்து போவீர்கள்.
படப்பிடிப்பில் நடிப்பில் வெளுத்துக்கட்டிய அவர், ‘டப்பிங்’கில் தனது நடிப்பை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். அவர் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்பதை ‘அக்கரன்’ சொல்லும்.