

‘ஜிகர்தண்டா’ படத்துக்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றவர் பாபி சிம்ஹா. அவரது பல ‘கெட்டப்’ நடிப்பில் 6 வருடங்களுக்கு முன் உருவாகி, கடந்த மாதம் வெளியான ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக வெளியாகவிருக்கிறதாம் ‘வசந்த முல்லை’. “இதில் மிக வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
இனி மிக கவனமாக படங்களைத் தேர்ந்தெடுப்பேன் என ரசிகர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசினார் பாபி சிம்ஹா. அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் கஷ்மீரா பர்தேசி.ஆர்யாவும் ‘777 சார்லி’ புகழ் ரக் ஷித் ஷெட்டியும் நட்புக்காகச் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
பள்ளி ஆசிரியர் தனுஷின் பதிலடி! - சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் தயாரிப்பில், தனுஷ் நடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழியில் வெளியாகவிருக்கும் படம் ‘வாத்தி’. தெலுங்குப் படவுலகின் புதிய தலைமுறை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக் குழுவினரோடு, தன்னுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு வந்து விழாவில் பங்கேற்றார் தனுஷ்.
அதற்குக் காரணம், தன் மகன்களைப் போன்ற வயதுடைய மாணவர்களின் பள்ளி வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படம் என்பதைக் காட்டுவதற்காக என்றார்கள். அதற்கேற்ப “கரோனா பெருந்தொற்றால் பள்ளிக் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் ‘வாத்தி’ கதை உருவாகக் காரணம்” என்று பேசினார் இயக்குநர் வெங்கி.
விழாவில் தனுஷின் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. பள்ளிக் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளதை கண்டிக்கும் பள்ளி ஆசிரியர் வேடத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடித்திருப்பதையும் சில கல்வி வியாபாரிகளுக்கு தனுஷ் தரும் பதிலடியும்தான் படம் என்பதையும் படத்தின் டீசர் எடுத்துக்காட்டியிருக்கிறது.
இளைஞர்களின் உருவாக்கத்தில் ‘ஸ்ட்ரைக்கர்’ - ‘காஞ்சனா’, ‘மெட்ராஸ்’ உள்படப் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜஸ்டின் விஜய், ‘ஸ்ட்ரைக்கர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடன இயக்குநர் ராபர்ட், கஸ்தூரி, அபிநயா நடித்திருக்கிறார்கள்.
படத்தை எழுதி இயக்கியுள்ள எஸ்.ஏ. பிரபு கூறும்போது, “கதையைக் கேட்ட ஜஸ்டின் விஜய், அதை விட்டுவிட மனமில்லாமல், நண்பர்களின் உதவியுடன் அவரே தயாரிக்க முன் வந்தார். இன்றைய நவீன இளைஞர்களின் காதலையும் அதிலிருக்கும் ஆபத்தான ‘யூடர்ன்’ வளைவுகளையும் சுற்றிக் கதையை அமைத் துள்ளேன்.
‘பேரா சைக்காலஜி ஹாரர்’ வகையில் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கதையில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது. விஜய் சித்தார்த் என்கிற திறமையான இளைஞரை இசையமைப்பாளராகவும் ஹரிசங்கர் ரவீந்திரன் என்கிற மற்றொரு திறமையான இளைஞரைப் பாடலாசிரியராகவும் அறிமுகப்படுத்துகிறோம். பல இளைஞர்களின் கூட்டுழைப்பில் உருவாகியிருக்கும் இப்படம் எல்லா வயதினரையும் கவரும்” என்கிறார்.