

சினிமா வரலாற்றில் மறக்கப்பட்ட கலைஞர்கள், மறக்கப்பட்ட திரைப்படங்கள் குறித்த தரவுகள் அரிதானவை. அவற்றைத் திரட்ட முற்படுவது கடும் உழைப்பையும் தேடலையும் கோரும் பணி. தமிழ் சலனப் படங்கள் குறித்து தமிழில் பலர் குறிப்பிடத்தக்கப் பதிவுகளைக் கொடுத்திருந்தாலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உருவான பிராந்திய மொழிப் படங்களைக் குறித்தோ, கலைஞர்களைக் குறித்தோ தமிழ் வாசகர்களுக்கு யாரும் அவ்வளவாக அறியத் தரவில்லை.
அந்த அரிய தேடலை மேற்கொண்டு, புதையல்போல் அள்ளித் தந்திருக்கிறது ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம். நாட்டின் வெவ்வேறு மாநிலத் திரையுலகங்கள் எப்படி உருவாகின, அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனத் தகவல்களின் பெட்டகமாக ‘காமதேனு’ இதழில் சோழ. நாகராஜன் எழுதி வரவேற்பைப் பெற்ற தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு மாநிலத்தின் தனித்த பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய அம்சங்களும் இதில் இயல்பாகப் பதிவாகியிருக்கின்றன.
அந்தந்த மொழியின் வரலாறு, அது பேசப்படும் மக்களின் பண்பாட்டுச் சூழல், பிராந்திய மொழி சினிமாவின் பாதைக்கு அது அடித்தளமிட்ட பின்னணி என அடுக்கடுக்கான விஷயங்களை உரிய ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறார் சோழ. நாகராஜன்.
இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ வெளியானபோது ரசிகர்கள் அதை எப்படி உள்வாங்கிக்கொண்டனர், ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்கள் திரையரங்கில் காட்சியுடன் ஒலித்தபோது அதை எப்படியெல்லாம் ரசித்தனர் என்பன உள்பட பல ‘லேண்ட் மார்க்’ திரைப்படங்கள் உருவாக்கிய தருணங்களை சுவாரசியம் குன்றாமல் தொகுத்திருக்கிறார்.
தவிர, அக்காலகட்டத்தின் புகழ்பெற்ற திரைக்கலைஞர்கள் முதல் புகழ்பெற முடியாமல் சில படங்களோடு முடங்கியவர்கள் வரை, அவர்களது தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட சவால்கள், சமூக அங்கீகாரத்தை வென்றெடுத்த போராட்டம் நிறைந்த கலை வாழ்வு என உத்வேகமூட்டும் திரைப்பட வரலாறு, நதியினூடே பளபளக்கும் கூழாங்கற்களைப் போல் பதிவாகியிருக்கிறது.
மௌனம் கலைத்த சினிமா
சோழ. நாகராஜன்
பக்கங்கள்: 128
விலை ரூபாய்: 140
புத்தகத்தைப் பெற: 74012 96562 / 74013 29402 என்கிற எண்ணுக்கு அழையுங்கள்.
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications