Published : 06 Dec 2016 06:54 am

Updated : 06 Dec 2016 06:56 am

 

Published : 06 Dec 2016 06:54 AM
Last Updated : 06 Dec 2016 06:56 AM

திரை விமர்சனம்: மாவீரன் கிட்டு

இயக்குநர் சுசீந்திரனும், விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கும் 3-வது திரைப்படம் இது. கிரிக்கெட் விளை யாட்டில் இருக்கும் சாதி அரசியலை ‘ஜீவா’ திரைப்படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்த சுசீந்திரன், இத்திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைப் பற்றி பேசியிருக்கிறார்.

புதூர் என்ற கிராமத்தில் 1980-களில் நடக்கும் சாதியப் பாகுபாடுகளைப் பின்னணி யாக வைத்து இந்தப் படம் பயணிக்கிறது. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் தெருவின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும் அவலத்தைக் காட்டும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. தொடர்ந்து சாதிப் பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்கள் கையாளப்படுகின்றன.


12-ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுகிறான் கிட்டு (விஷ்ணு விஷால்). கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் சின்ராசு (ராதாகிருஷ்ணன் பார்த்திபன்), கிட்டுவை கலெக்டருக்குப் படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துகிறார். கல்லூரியில் சேரும் கிட்டுவும் கலெக்டராகும் லட்சியத்துடன் படிக்கிறான். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் படித்து முன்னேறுவதை விரும்பாத அந்த ஊர் ஆதிக்கச் சாதியினர் கிட்டு மீது கொலைப் பழி சுமத்தி, சிறைக்கு அனுப்பப் பார்க் கின்றனர். கிட்டுவைக் கொலைப் பழியில் இருந்து விடுவிக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது உரிமைகள் கிடைக் கவும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறார் சின்ராசு. அந்தப் போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா என்பதுதான் ‘மாவீரன் கிட்டு’.

1980-களின் பின்னணியில் எடுக்கப்பட்டிருந் தாலும், சமகால சாதிய வன்முறை நிகழ்வு களின் தாக்கத்தையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களின் இறுதி ஊர் வலம் பொதுவழியில் நடைபெறாமல் தடுக்கும் ஆதிக்கச் சாதியினர், அதற்கு உறு துணையாகச் செயல்படும் காவல் துறை யினர், ஆணவப் படுகொலைகள் ஆகியவற்றின் பிரதிபலிப்புகள் படத்தில் உள்ளன. ஒரு குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியைக் கொண்டாடி, தொடர்ச்சியாகப் படமெடுக்கும் இயக்குநர்கள் மத்தியில், ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைப் பதிவுசெய்ய முயன்றிருக்கும் சுசீந்திரனை நிச்சயம் பாராட்டலாம்!

தான் சொல்லவந்த கருத்தை வசனங்கள், காட்சிகள், பாத்திர வார்ப்புகள் மூலமாக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் சுசீந் திரன். இளைஞர்கள் மத்தியிலும் சாதி உணர்வு ஆழமாக வேரோடியிருப்பதையும் காட்டுகிறார். பாம்புக் கடிபடும் பெண்ணைக் காப்பாற்ற, சாதியைத் தூக்கி எறிந்துவிட்டு மாணவர்கள் களமிறங்கும் காட்சி நெகிழவைக்கிறது.

எந்தவித சிக்கலும் இல்லாமல் முதல்பாதி திரைக்கதை யதார்த்தமாகவும், சீராகவும் பயணிக்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையில் அழுத்தம் இல்லை. தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க சின்ராசு போடும் திட்டம் வலுவானதாக இல்லை. கிட்டு தலைமறைவாக இருக்கும்போது வரும் ‘டூயட்’ பாடல்கள் கதைப் போக்கைப் பலவீனப்படுத்துவதுடன், பொறுமையை சோதிக்கின்றன.

படத்தின் முடிவு அதிர்ச்சிகரமாக இருந் தாலும் ஏற்கத்தக்க விதத்தில் உள்ளது. மாவீரன் என்று சொல்லப்படும் பாத்திரம் எடுக்கும் முடிவு, உண்மையில் எது வீரம் என்னும் கேள்வியை எழுப்புகிறது.

கிட்டு கதாபாத்திரத்துக்கு இணையான வலிமையுடன் சின்ராசு கதாபாத்திரமும் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. விஷ்ணுவும், பார்த்திபனும் தங்களது பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கின்றனர். திவ்யா படம் முழுக்க வந்தாலும் கோமதி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதாக மனதில் பதியவில்லை. காவல் துறை அதிகாரியாக ஹரீஷ் உத்தமன் மிரட்டியிருக்கிறார்.

பாடலாசிரியர் யுகபாரதி முதல்முறையாக இந்தப் படத்தில் வசனம் எழுதியிருக்கிறார். யதார்த்தமும் கூர்மையும் கொண்ட வசனங்கள் பல இடங்களில் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள், சமூகத் துக்கு கேட்கும் வகையில் பிரச்சினை வலுவாகக் கையாளப்பட்டிருக்கிறது. இரண் டாம் பாதியை மேலும் கவனமாகச் செதுக்கி யிருந்தால் படம் சொல்லும் செய்தி சரியான வீச்சுடன் பார்வையாளர்களைச் சென்று சேர்ந்திருக்கும்.மாவீரன் கிட்டு விமர்சனம்இயக்குநர் சுசீந்திரன்விஷ்ணு விஷால்ஸ்ரீதிவ்யாசூரிபார்த்திபன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x