திரை (இசைக்) கடலோடி 25 | கண்ணதாசனின் மதம் கடந்த கவித்துவம்!

திரை (இசைக்) கடலோடி 25 | கண்ணதாசனின் மதம் கடந்த கவித்துவம்!
Updated on
4 min read

திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தான் துணை.சோதனைச் சுழலில் சிக்கித் தவிக்கும் மனித குலத்துக்கு ஆறுதலும் ஆதரவும் தருவது இறை நம்பிக்கை ஒன்றுதான். எந்த மதத்தவராயினும் சரி, எந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும் சரி.. கஷ்டம் வரும்போது கடவுளை நினைக்கத்தான் வேண்டும். அப்படி பரமபிதாவின் அருளை ஒரு இளம்பெண் யாசிக்கும் பாடல் தான் 1964இல் வெளிவந்த 'கறுப்புப் பணம்' படத்தில் இடம் பெற்ற பாடல் முத்து.

ஜி. ஆர். நாதன் அவர்களின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்துக்குக் கதை, வசனம், பாடல்களை எழுதித் தயாரித்ததோடு நிற்காமல் ஒரு முக்கியக் வேடத்தில் நடித்தும் இருந்தார் கவியரசர் கண்ணதாசன். இந்தப் படத்தில் நடிகை சந்திரகாந்தா தேவாலயம் ஒன்றில் உள்ளம் உருக வேண்டிப் பாடும் பாடல் தான் 'உந்தன் ராஜசபை இங்கு வாராதோ' என்று மெல்லிசை மன்னர்களின் இசையில் இசைக்குயில் எஸ். ஜானகி உள்ளம் உருக்கும் குரலில் பாடிய பாடல். கிறிஸ்துவ மத நம்பிக்கைகளை கவியரசர் எவ்வளவு ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருந்தால் இவ்வளவு சிறப்பாக எழுதி இருப்பார் என்று வியக்க வைக்கிறது அவரது கைவண்ணம். மெல்லிசை மன்னரின் இசை வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் இசையை வெளிக்கொண்டுவருவதில் அவரது தன்னிகரில்லாத திறமைக்கு ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது.

பாடலின் தொடக்கத்திலேயே தேவாலய மணியின் ஓசையையும் ஆண்பெண் குரல்களின் கோரஸ் இசையையும் முன்னிசையாக அமைத்திருக்கிறார் எம்.எஸ்.வி. கோரஸ் முடியும் தருவாயில் ‘இறைவா இறைவா இறைவா..’ என்று எஸ். ஜானகியின் குரல் உச்சத்தை எட்ட.. அதற்கு இணையாக மீண்டும் அதே கோரஸ் குரல்கள் அகாரத்தின் வடிவாக அந்த வார்த்தைகளையே ஒற்றி எடுக்க.. கவியரசரின் இசைச் சாம்ராஜ்ஜியம் தொடக்கத்திலேயே மெல்லிசை மன்னரின் துணையோடு களைகட்ட ஆரம்பிக்கிறது.

கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளின்படி இறைவன் தனது நியாயத்தீர்ப்பு வழங்கும் நாள் உலகின் முடிவு நாளாகக் கருதப்படுகிறது. அன்று விசாரணை நடத்தி அவரவர் செய்த நல்வினை, தீவினைகளுக்கேற்ப நித்திய சொர்க்காத்துக்கோ அல்லது நிரந்தர நரகத்துக்கோ அனுப்பி வைப்பார் என்பது நம்பிக்கை. இதை உள்வாங்கிய கவிஞர் அற்புதமாக பாடலை தொடங்குகிறார்.

'உந்தன் ராஜசபை இங்கு வாராதோ
உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ
எங்கள் நாயகனே நீ வாராயோ
அடிமை குரலைக் கொஞ்சம் கேளாயோ'

இறைவனின் ராஜசபையை இப்போதே கூட்டப்படவேண்டும். தனக்கு நியாயம் அங்குதான் கிடைக்கும். தனது பிரச்சினைக்கு தீர்வு அங்குதான் கிடைக்கும் என்பதால் நியாயத் தீர்ப்பு வழங்கும் நாள் இங்கேயே இன்றே இப்போதே வரவேண்டும் என்கிற வேண்டுதலாக பாடலை தொடங்குகிறாள் அவள்.

அடுத்த வரியில் கிறிஸ்தவ மத நம்பிக்கை மிகவும் ஆழமாக வெளிப்படுகிறது.

ராஜ சபை - கூட்டப்படவேண்டும் என்றால் அங்கு அமரும் ராஜா - அதாவது ஆள்பவர் எத்துணை கம்பீரமாக - பாரபட்சமற்றவராக இருக்கவேண்டும். அவர் பேசும் வார்த்தைகள் பிரபஞ்சக் கருணையை வெளிப்படுத்துவதாக அல்லவா இருக்க வேண்டும் இங்கு தான் அடுத்த வரியில் கவிஞர் நம்மை ஏமாற்றி விடுகிறார்.

ராஜ சபை வந்தாலும் நீ அங்கு யாருமே எளிதில் அணுகமுடியாதபடி கடுமையாக இருக்கக்கூடாது. உன் வார்த்தைகள் அன்பானவையாக, பாவியரான அனைவரையும் மன்னிக்கக்கூடிய அளவுக்கு கருணை நிறைந்தவையாகத்தான் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட கருணை வார்த்தைகளைத்தான் நாங்கள் கேட்கவேண்டும். இதைத்தான் வேண்டுதலாக அடுத்த வரியாக அமைத்திருக்கிறார் கவியரசர்.

'உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ'

ஆம். கிறிஸ்துவ மத நம்பிக்கைப்படி நிரந்தர நரகம் என்று ஒன்று உண்டுதான். ஆனால் அது எப்போதுமே காலியாகத்தான் இருக்கும். ஏனென்றால் சர்வ வல்லமை வாய்ந்த இறைவன் கருணையோடு, அனைத்து பாவங்களையும் மன்னித்து அனைத்து ஆன்மாக்களையும் நிரந்தர சொர்க்கத்திற்க்கே அனுப்பி வைத்துவிடுகிறார். அப்படி அனுப்புபவர் கருணை மிகுந்த அன்பில் தோய்ந்தவராகத்தானே இருக்கமுடியும். அப்படிப்பட்ட அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கருணை மொழியாகத்தானே இருக்க முடியும். ஆகவே உனது கருணை மொழி கேளாதோ என்று ஏங்குகிறாள் அவள்.

'எங்கள் நாயகனே இங்கு வாராயோ
அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ'

தொடரும் சரணத்துக்கு முன்பாக இணைப்பிசையாக மீண்டும் தேவாலய மணி - ஆண்-பெண் இரு குரல்களின் சேர்ந்திசை - அது முடியும் இடத்தில் முத்தாய்ப்பாக கிட்டார் மீட்டல் .. என்று தேவாலயச் சூழலையே கேட்பவர் மனதுக்குக் கடத்துவதில் தான் மன்னர் தான் என்று நிரூபித்துவிடுகிறார் மெல்லிசை மன்னர். இந்த இசையில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால் முன்னிசையிலும் சரி, இணைப்பிசையிலும் சரி தாளவாத்தியக்கருவிகள் ஒன்றுமே பயன்படுத்தப்பட்டிருக்காது.

பாடலுக்கு மட்டும் தாளக்கட்டிற்கு ஒரே ஒரு பாங்கோஸை பயன்படுத்தி மெல்லிசை மன்னர்கள் இசை அமைத்திருக்கிறார்கள்.

'எந்தன் அறிவெனச் சொல்வது நீயல்லவோ - இங்கு
அசைவன யாவும் நீயல்லவோ - எங்கள்
திருச்சபை வானத்து மீனல்லவோ - அங்கு
தேவனின் தூதுவன் நீயல்லவோ.'

‘மனிதர்களாகிய நாங்கள் அறிவின் துணை கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்று கர்வத்தோடு இருக்கிறோம். ஆனால் அந்த அறிவு என்ற ஒன்றாக நீதானே எங்களுக்குள் இருக்கிறாய். நீ இல்லாமல் எதுவுமே அசையாது. ஆகவே அசையும் எல்லாவற்றின் உள்ளேயும் நீயே இருக்கிறாய்.’ என்று ‘நானே சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்’ என்று வாசகத்தை உள்வாங்கி கவியரசர் எழுதிய வரிகள் இவை.

ஏசு கிறிஸ்து பிறந்த செய்தி அறிந்து அவரைக் காண மூன்று தென்திசை ஞானிகள் ஜெருசலேம் நோக்கி வந்துகொண்டிருந்த நேரத்தில் வானில் புதிதாகத் தோன்றிய நட்சத்திரம் ஒன்று அவர்களுக்கு ந் வழிகாட்டியதாக கிறிஸ்துவம் கூறும். அந்த சம்பவத்தை வைத்து ‘எங்கள் திருச்சபை வானத்து மீனல்லவோ’ என்கிறார் கவியரசர்.

தொடரும் இணைப்பிசை மீண்டும் தேவாலய மணி, குழுவினரின் சேர்ந்திசை.. (அதிலும் பெண்குரல்கள் முன்னணியில் இசைக்க ஆண்குரல்கள் பின்னணியில் மந்தர ஸ்தாயியில்) அவை முடியும் இடத்தில் கிட்டார் மற்றும் தேவாலய மணியோசை இணைந்து இசைக்க.. மனதில் அமைதியும் கருணையும் ஏற்படும் வகையில் காட்சிக்கேற்ற மனநிலையை மனதில் பரவ விடுகிறார் மெல்லிசை மன்னர்.

இறைவனின் கருணையை யாசிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டுமல்லவா.?

அவற்றை அடுத்த சரணத்தில் பட்டியலிடுகிறார் கவியரசர்.

பொதுவாக நம்மிடம் இருப்பதை விட இல்லாததையே பெரிய குறையாகக் கருதி நமது மனம் சலனப்பட்டு அமைதி இழந்து தவிக்கும். அப்படிப்பட்ட தவிப்பு இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் 'நமது என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பது எதுவுமே நம்முடையதல்ல. இறைவனுக்கே சொந்தமானது என்ற எண்ணம் வந்துவிட்டால் அந்த மனதில் எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும். அந்த இதயம் எங்களுக்கு இருக்கிறது. இது போதாதா உன் கருணையை யாசிக்க’ என்று சொல்லாமல் சொல்கிறார் கவிஞர்.

‘இங்கு எமக்கென ஏதொன்றும் இல்லை இல்லை - எங்கள்
இதயத்தில் சலனங்கள் ஏதும் இல்லை - உந்தன்
கோவிலில் ஆடும் மலர்கள் எல்லாம் - உன்
பூஜை கொண்டாடும் அலைகள் அல்ல’

ஒவ்வொரு சரணத்தின் இறுதியிலும் 'அடிமை குரலை கொஞ்சம் கேளாயோ' என்ற வார்த்தைகளை எஸ்.ஜானகி அவர்களை இருமுறை பாடவைத்து .. இறைவா இறைவா இறைவா.. என்று எஸ். ஜானகியின் குரலை உச்சத்திலேற்றி பாடலை முடிக்கின்றனர் மெல்லிசை மன்னர்கள்.

இந்தப்பாடலில் எஸ். ஜானகியைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டே ஆகவேண்டும். அவர் ஒவ்வொரு வரிகளிலும் வெளிப்படுத்தும் சின்னச் சின்ன சங்கதிகள்… 'கொஞ்சம் கேளாயோ' என்ற வரிகளை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு விதமான உணர்வு மனதில் பரவும். பணிவு, ஆற்றாமை, சோகம், வேண்டுதல் என்று ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு வித உணர்வை கேட்பவர் மனதில் ஊடுபாவாக பரவ விட்டிருப்பார் அவர்.

கிறிஸ்தவர்கள் மட்டும் என்று அல்ல, இனம், மதம், மொழி கடந்து இறை நம்பிக்கை உடைய யாருமே தவறவிடக்கூடாத கவியரசரின் இந்தப் பாடல் முத்து .. காலத்தின் கொடுமையினாலும், படம் தோல்வி அடைந்தாலும் திரை இசைக்கடலின் ஆழத்தில் சென்று புதைந்து விட்டிருக்கிறது.

தேடி எடுத்துக்கொண்டு வந்து சிறப்புகளை வெளிப்படுத்திவிட்டேன்.

கேட்டு அனுபவித்து இறைவனின் கருணையை யாசிப்போம் நண்பர்களே. ஏனென்றால் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது புனித பைபிளின் வாக்கு அல்லவா? எனவே. கேட்போம். அவன் அருளைப் பெறுவோம்.

(தொடர்ந்து முத்தெடுப்போம்..)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in