

‘கன்னிராசி’, ‘தர்மபிரபு’ ஆகிய படங்களை இயக்கிய முத்துக்குமரன், மூன்றாவதாக இயக்கி வரும் படம் ‘சலூன்’. மிர்ச்சி சிவா, யோகி பாபு, நயன் கரிஷ்மா, வாகை சந்திரசேகர், கவிதா பாரதி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இயக்குநர் முத்துக்குமரனுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
படத்தின் முதல் தோற்றத்தில் இரண்டு ஆங்கிலேயர்கள் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தின் கதை எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது?
இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது. மிர்ச்சி சிவா, தாத்தா - பேரன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 1980இல் நடப்பது பேரனின் கதை. தனது தாத்தாவைப் பற்றி அவர் கேள்விப்பட்டதும் 1937இல் நடக்கும் ப்ளாஷ் பேக் கதை ‘ஓபன்’ ஆகும். தாத்தா, பேரன் இரண்டு பேருமே சலூன் வைத்திருப்பவர்கள். பேரனிடம் ஊழியராக வேலை செய்கிறார் யோகி பாபு.
என்ன கதை?
தாத்தா ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பிடித்தமான முடி திருத்தும் கலைஞராக இருந்தவர். குறிப்பாக ஆங்கிலேயக் கலெக்டரின் அன்பைப் பெற்றவர். முடி திருத்துதல் என்பதைத் தாண்டி, அவர் ஒரு சிறந்த கை வைத்தியராகவும் பெயர் பெற்றிருப்பார். தாத்தாவின் அருமை தெரியாத பேரன், அவரைப் பற்றி அலட்சியமான எண்ணம் கொண்டிருப்பார். அதைத் தெரிந்துகொண்டதும் தாத்தா என்ன செய்ய விரும்பினாரோ அதைப் பேரன் எப்படி நிறைவேற்றுகிறான் என்பதுதான் கதை.
கதைக்குள் உள்ளார்ந்து என்ன இருக்கிறது?
இதுவொரு அரசியல் நையாண்டி நகைச்சுவைத் திரைப்படம். இரண்டு முக்கியமான விஷயங்கள் கதைக்குள் இருக்கின்றன. முடி திருத்துவது ஓர் அழகுக் கலை. அதை மட்டுமே முடிதிருத்தும் கலைஞர்கள் அன்றைக்குச் செய்யவில்லை. உடல் ஆரோக்கியத்துக்கு கை மருத்துவமும் செய்தார்கள். அதனால்தான் அவர்களை மருத்துவர் சமூகம் என்று அழைத்தோம்.
அதேபோல், ஆங்கிலேயர்கள் என்றால், நம்மை அடிமைப்படுத்தியவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள், நமது வளங்களைக் கொள்ளையடித்தவர்கள் என்று மட்டுமே பலரும் நினைக்கிறோம். அவர்கள் உருவாக்கிய பல அடிப்படைக் கட்டுமானங்கள் இன்றைக்கும் நமக்கு அடித்தளம்போல் இருக்கிறன. ‘மெக்காலே கல்வித் திட்டம்’ என்று கிண்டல் அடிக்கிறோம். அதுதான் கல்வியைப் பரவலாக்கியது. சமூக நீதிக்கும் அவர்கள் கொண்டுவந்த சட்டங்கள்தான் தொடக்கம். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அரசு இயந்திரம் என்பதைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் தங்கள் செல்வத்தை இங்கே கொண்டுவந்து கொட்டி, வாழ்ந்த நிலத்துக்கு நன்மை செய்துவிட்டுப்போன பென்னிகுவிக், ஜான் சல்லிவன் போன்ற ஆங்கிலேய அதிகாரிகளை இன்றைக்கும் கொண்டாடுகிறோம். இந்தப் படத்திலும் அப்படியொரு ஆங்கில அதிகாரியையும் அவரது மனைவியையும் பார்க்கலாம். ஆங்கிலேயர்கள் சட்டபூர்வமாகச் செய்துவிட்டுப்போன பல சீர்த்திருத்தங்களைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளும்போது, எதிரிகள் எடுக்கும் சில முடிவுகள் கூட பல சமயம் நமக்கு சாதகமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
படக்குழு பற்றி..
ரேதன் சினிமாஸ் நிறுவனத்தின் இந்தர்குமார் படத்தைத் தயாரித்திருக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். யுகபாரதியும் ‘எஞ்சாய் எஞ்சாமி’ அறிவும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கலை இயக்கத்தை பாலசந்தர்.சி.எஸ்ஸும் படத்தொகுப்பை சான் லோகேஷும் செய் துள்ளனர்.