Last Updated : 27 Jan, 2023 06:34 AM

 

Published : 27 Jan 2023 06:34 AM
Last Updated : 27 Jan 2023 06:34 AM

ஓடிடி உலகம்: வீரப்பண்ணையிலிருந்து ஒரு தமிழ்ச் செல்வி!

ஒடுக்குதலுக்கு நடுவே கனவைத் துரத்தும் பெண்களின் கதைகளை சற்று உரத்த குரலில் பேசத் தொடங்கியிருக்கிறது இந்திய வணிக சினிமா. இதுபோன்ற படங்களின் பெண் மையக் கதாபாத்திரங்களை, ஹீரோயிச சினிமாக்களில் மலிந்திருக்கும் அதே ‘சாகச’ சட்டகத்துக்குள் அடைத்துவிடுவார்கள். பெண் விடுதலை என்பதே சாகசம் செய்வதில்தான் அடங்கியிருக்கிறது என்கிற அவியலான புரிதலை இளம் பார்வையாளர்களுக்கு கடத்திவிடுபவை இத்தகைய படங்கள்.

இணையத் தொடர்கள் இவற்றிலிருந்து விலகி நிற்பது பெரிய ஆறுதல். மூன்று மணி நேர சினிமா என்கிற எல்லையிலிருந்து வெளியே வந்துவிடும் இத்தொடர்களில் படைப்பாளிகளால் பார்வையாளர்களுடன் சுதந்திரமாக உரையாட முடிகிறது.

தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘அயலி’யின் உரையாடல் சில போதாமைகளுடன் வெளிப்பட்டாலும் அதில் வரும் தமிழ்ச்செல்வியின் குழந்தைப் பருவத்தையும் குழந்தைமையையும் ஆண்கள் உருவாக்கிய உலகம் தட்டிப் பறித்துக்கொள்ளுவதை வலியுடன் உணர வைக்கிறது. ‘வீரப்பண்ணை’ என்கிற கிராமத்தின் பெயர், ஒடுக்குதல் என்பதை மரபணுக்களின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும் ஆண்களின் உலகத்தை குறியீடாகக் காட்டுகிறது.

கல்வியில் பெண்கள் சாதித்துக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வீரப்பண்ணை போன்ற ஒரு பின் தங்கிய கிராமத்தைக் காண முடியுமா என்கிற தர்க்க ரீதியான கேள்வி எழாமல் இல்லை. ஆனால், முன்னேறிய குடும்பங்களிலும் கூட ‘பருவமடைந்த’ பெண் பிள்ளைகள் நடத்தப்படும் விதம் பெரிய அளவில் மாறிவிடவில்லை என்பதையே ‘வீரப்பண்ணை’ என்கிற கற்பனை நிலத்துக்குள் நின்றுகொண்டு பேசியிருக்கிறார் இத்தொடரை சுவாரசியமாக இயக்கியிருக்கும் முத்துகுமார்.

பத்தாம் வகுப்பை எட்டும் முன்பே பருவமடைந்துவிடும் பெண்களை அந்த வருடமே திருமணம் முடித்துக்கொடுத்து அனுப்பி விடுவதை ஊர் வழக்கமாகக் கடைபிடிக்கும் அந்த கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் ஒரு மருத்துவ முகாம் நடக்கிறது. அதைப் பார்த்து, தானும் ஒரு மருத்துவராக வேண்டும் என்கிற கனவை வரித்துகொள்கிறாள் 8 ஆம் வகுப்பு படிக்கும் தமிழ்ச்செல்வி.

அந்த ஊர் மக்களால் வணங்கப்படும் அயலி என்கிற நாட்டார் தெய்வத்தை கேடயமாக வைத்துக்கொண்டு, ஆண்கள், பெண்களை ஆட்டி வைக்கிறார்கள். பிற்போக்குத்தனங்கள், மூடப் பழக்கவழக்கங்கள், சாதியின் பெயரால் நன்மை அடைய நினைப்பவர்கள் என பல தடைகளைக் கடந்து, தமிழ்ச் செல்வி பள்ளி இறுதி வகுப்பை முடித்து, மருத்துவர் கனவை எட்டிப் பிடித்தாளா, இல்லையா என்பது கதை.

தனது கிராமத்தின் ஆண் மைய முரண்பாடுகளுக்கு எதிராக சாதூர்யமாகப் போராடுவது, தன் வயதையொத்தச் சிறுமிகளுக்கு தன்னையே ஒரு பாதையாக மாற்றிக்காட்டுவது என தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தை உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார்கள் வீணை மைந்தன், சச்சின், முத்துகுமார் ஆகிய மூவரும். தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பு ‘அயலி’க்கு முதுகெலும்பு. ராம்ஜியின் ஒளிப்பதிவும் ரேவாவின் இசையும் தொடரின் பேசுபொருளை தூக்கிப் பிடித்திருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x