

தமிழ்த் தொலைக்காட்சி ஆளுமையான மறைந்த பால கைலாசம் நினைவைப் போற்றும் வகையில் ஊடகத் துறையினருக்கான ஒரு விருதை நிறுவியிருக்கிறது சினிமா ராந்தேவூ (cinema rendezvous). சென்னையை மையமாகக்கொண்டு இயங்கிவரும் இந்தத் தன்னார்வ சினிமா இயக்கத்தின் நிறுவனர் ஷைலஜா ஷெட்லூரிடம் சமீபத்தில் நடந்துமுடிந்த இரண்டாம் ஆண்டு விருது விழா பற்றிப் பேசினோம்.
சினிமா ராந்தேவூ அமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?
சினிமா பற்றிய உண்மையான புரிதலையும் உலக சினிமா பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே எங்கள் இயக்கத்தின் நோக்கம். அதற்காகவே மாதம் ஒருமுறை சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துத் திரையிட்டுவருகிறோம். அந்தத் திரைப்படத்தை உருவாக்கிய ஆளுமைகளையும் அழைத்துத் திரையிடலின் முடிவில் கலந்துரையாடல்களை நடத்துகிறோம். நான்கு ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறோம்.
பால கைலாசம் பெயரால் விருது வழங்கும் எண்ணம் எப்படி வந்தது?
பால கைலாசம் அவர்களின் மறைவு சின்னத்திரைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. சின்னத்திரை மற்றும் ஆவணப்பட உருவாக்கத்தில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது. தனது ஆவணப்படங்களில் இருந்த சமூக அக்கறையைச் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கொண்டுவந்தார். சினிமா ராந்தேவூ சார்பில் விருது வழங்கலாம் என்று முடிவு செய்தபோது அந்த விருதுக்கு அவரது பெயர்தான் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. அதில் எங்களுக்கு மட்டுமல்ல இந்த விருதுக்கும், இந்த விருதைப் பெறுபவர்களுக்கும் பெருமை இருக்கும் என்று நம்புகிறோம்.
பால கைலாசம் அவர்களுடனான உங்கள் அனுபவம் ?
பால கைலாசத்தின் மின் பிம்பங்கள் நிறுவனம் தயாரித்த ‘சினிமா காரம் காபி’ நிகழ்ச்சியில் நான் வேலை செய்துள்ளேன். சின்னத்திரையில் அவர் பல புது முயற்சிகளை மேற்கொண்டார். அந்தச் சமயத்தில் யாரும் செய்திடாத வித்தியாசமான தொடர்களும் நிகழ்ச்சிகளும் மின்பிம்பங்கள் வழியாக வெளிவந்தன. துணிச்சலான தயாரிப்பாளராக இருந்த அவரைப் போன்ற ஒருவரால்தான் அவை சாத்தியமாயின. தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் அவர் பல விதங்களில் முன்னோடியாக இருந்தார்.
2016-ம் ஆண்டுக்கான பால கைலாசம் நினைவு விருதுகள் எந்தெந்தப் பிரிவின் கீழ் யார் யாருக்கு வழங்கப்பட்டன?
ஆவணப்படம், தொலைக்காட்சி, வானொலி, இணையம், அச்சு ஊடகம் என மொத்தம் ஐந்து பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது. தொலைக்காட்சிப் பிரிவில் என்.டி.டி.வி. இந்தி சேனலின் நிர்வாக ஆசிரியர் ரவிஸ்குமார், ஆவணப்படப் பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்த சந்திரசேகர் ரெட்டி, இணையதளச் செய்தியாளர் பிரிவில் எம்.ராஜசேகர், அச்சு ஊடகப் பிரிவில் பெண் பத்திரிகையாளர் மந்தாகினி கலோட் (Mandhakini Gahlot), தி இந்து ஆங்கில நாளிதழின் வித்யா கிருஷ்ணன் ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டது.
விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் குழுவில் ‘தி இந்து’வின் ரீடர்ஸ் எடிட்டர் பன்னீர் செல்வம், ‘பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’ சஷி, ‘எகனாமிக் டைம்ஸ்’ சுசீலா போன்ற மூத்த பத்திரிகையாளர்களும் ப்ரசன்னா ராமஸ்வாமி ஆர்.வி. ரமணி போன்ற ஆவணப்பட இயக்குநர்கள், சதாநந்தன் மேனன் ஆகியோரும் இருந்தார்கள்.
அச்சு ஊடகப் பிரிவில் தமிழ் ஊடகவியலாளர்கள் பெயர் இல்லையே... அவர்களை நீங்கள் கணக்கில் கொள்வதில்லையா?
நீங்கள் நினைப்பது தவறு. நாடு முழுவதும் பல பெயர்கள் முன்மொழியப்பட்டன. அச்சு ஊடகப் பிரிவின் கீழ் சில தமிழ் ஊடகவியலாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. பரிந்துரைக்கப்பட்டோரைத் தேர்வு செய்வது நடுவர்களே. விண்ணப்பிப்போர் எண்ணிக்கையும் பரிந்துரைக்கும் பெயர்களும் குறைவாக இருப்பதால் பலர் தெரியாமல் போவதற்கான வாய்ப்புண்டு. இந்த விருது பற்றி பரவலாகத் தெரியவரும்போது இந்நிலைமை மாறும் என்று நம்புகிறோம்.