அஞ்சலி: பாலமுருகன் | அன்புக் கரங்கள்

‘பட்டிக்காடா பட்டணமா’ படப்பிடிப்பில் இயக்குநர் பி.மாதவன், சிவாஜி கேணசன், பாலமுருகன்
‘பட்டிக்காடா பட்டணமா’ படப்பிடிப்பில் இயக்குநர் பி.மாதவன், சிவாஜி கேணசன், பாலமுருகன்
Updated on
4 min read

சிவாஜியின் திரைப்பட வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயர் பாலமுருகன். சிவாஜிக்காக எழுதிய கதாசிரியர்களில் இவரும் ஒருவர். 40 ஆண்டுகாலத் திரைத்துறை வாழ்வில் இரண்டு படங்களை இயக்கி, ஏறத்தாழ ஐம்பது திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பாலமுருகன், சிவாஜிக்கு பன்னிரண்டு படங்களுக்குக் கதை - வசனம் (இரண்டு படங்களுக்கு வசனம் மட்டும்) எழுதியுள்ளார்.

அதிகமான பாடல்கள் இடம்பெற்ற தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டத்தில், 1930களில், கதாசிரியர் இளங்கோவன் வசனம் எழுதிய படங்கள் வெளிவந்ததும் தமிழ் வசனங்களின் ருசி அதைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டன. இளங்கோவன் போட்டுக்கொடுத்த ராஜபாட்டையின் வழியே சி. என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, சக்தி. கிருஷ்ணசாமி, ஏ. பி. நாகராஜன் உள்ளிட்ட பல கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள் புகழ்பெற்றார்கள். அந்த வழியில் வந்தவர்தான் பாலமுருகன். திராவிடப் பாரம்பரியத்தில் வந்த அவர், அண்ணாவின் நாடக எழுத்துக்களுக்காக அவரிடம் சில காலம் உதவியாளராகவும் இருந்தவர்.

21. 4. 1937 ஆண்டிபட்டியில் பிறந்த சுந்தரபாண்டியன் என்கிற பாலமுருகனின் திரை வாழ்க்கை, 1947இல் அவரது பத்தாவது வயதில் தொடங்கியது. தன் மகனைக் கலைஞனாக்க வேண்டும் என்கிற அவருடைய தாய் காளியம்மாளின் முயற்சியே அதற்கு முழு முதல் காரணம்.

அம்மா கொடுத்த பெயர்

மதுரை சித்ரகலா மூவிடோன் நிறுவனம் தயாரித்த ‘குமரகுரு’ படத்தில் அவர் பாலமுருகனாக நடித்தார். பாலமுருகனாகவே தன் மகனை திரையில் பார்த்த அவரது தாய், “இனிமே, உம் பேரை பாலமுருகன்னே மாத்திக்கப்பா” என்றார். பின்பு, 11வது வயதில் ‘தாய்நாடு’ என்கிற படத்தில் நடித்தார். தொடர்ச்சியாகத் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமையாததால் அவருடைய தாய் அவரை பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார்.

அங்கு சில காலம் நாடகங்களில் நடித்த பின்பு சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். இளைஞனான பின், இவருக்கு உள்ள கதை எழுதும் ஆர்வத்தைப் பார்த்த அவரது குருவான பி.எஸ். சிவானந்தய்யா, நாடகங்களுக்குக் கதை - வசனம் எழுதுமாறு கூறுகிறார். அதை ஏற்றுக்கொண்ட பாலமுருகன், நடிப்போடு பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு கதை - வசனம் எழுதினார். மதுரை சக்தி நாடக சபாவுக்காக அவர் எழுதிய முதல் நாடகத்தின் பெயர் ‘அமைதி’. அடுத்து, அவர் எழுதியது ‘கவியின் கனவு’.

பாலமுருகன்
பாலமுருகன்

சிவாஜியின் அங்கீகாரம்

ஒரு சமயம் திருச்சிக்கு அருகேயுள்ள மணப்பாறையில் ‘முருகன் கோயில்’ என்கிற பாலமுருகனின் நாடகம் நடத்தப்பட்டு வந்தது. அப்போது சிவாஜியின் படப்பிடிப்பும் அருகே நடந்துகொண்டிருந்தது. படப்பிடிப்பிலிருந்த சிவாஜி, தன் ரசிகர் ஒருவர் மூலமாக நாடகத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் பார்க்க வந்தார். “யாருடைய நடிப்பைப் பார்த்து இளம் வயதில் நான் மகிழ்ந்து வியந்திருந்தேனோ அவரே எனது நாடகத்தைப் பார்க்க வருகிறார் என்கிற செய்தி கிடைத்ததும் சந்தோஷத்தில் எனக்குத் தலை கால் புரியவில்லை” என்று அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார் பாலமுருகன்.

மதுரையில் நாடகங்களை நடத்திக்கொண்டிருந்த பாலமுருகனுக்கு அப்போதைய திமுக பிரமுகர் மதுரை முத்து ஒரு யோசனை சொன்னார். “நீ மதுரையிலேயே நாடகங்களை நடத்திக்கிட்டு இருந்தா, உன்னை யாருக்கும் தெரியாது. நீ பிரபலமாகவும் முடியாது, நான் அண்ணாவுக்கு ஒரு லெட்டர் தரேன், நீ அவரைப் போய் பாரு, அவர் உனக்கு உதவுவார்” என்று கடிதம் தந்து அனுப்பினார்.

கடிதத்துடன் சென்னைக்கு வந்த பாலமுருகன், இராம. அரங்கண்ணலின் வழியே அண்ணாவின் எழுத்து வேலைக்கு உதவியாளராகச் சில காலம் இருந்திருக்கிறார். நாடகங்கள் எழுதும் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபட்ட அந்நேரம், சக்தி நாடக சபா மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தது. அந்தக் குழுவில் நடிகர்களாக இருந்த தோடனேரி ராஜூ, கருப்பு சுப்பையா இருவரும் பாலமுருகனின் நெருங்கிய நண்பர்கள்.

அவர்கள் பாலமுருகனின் நாடக எழுத்துத் திறமையைப் பற்றி சிவாஜியிடம் பேசினார்கள். ஏற்கனவே பாலமுருகனை அறிந்திருந்த சிவாஜி, “சரி, அவரிடம் ஒரு நாடகம் எழுதச் சொல்லி கேளுங்கள்” என்று சம்மதம் தந்தார். நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியாக பாலமுருகனிடம் வந்து சிவாஜிக்கு ஒரு நாடகம் எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். உடனே ‘நீதியின் நிழல்’ என்கிற நாடகத்தை எழுதி முடித்து அதை சிவாஜியிடம் சென்று படித்துக் காண்பித்தார்.

நாடகத்தைக் கேட்ட சிவாஜி, “உன் நாடகம் நல்லா இருக்குப்பா அடுத்த மாசம் இத பம்பாயில அரங்கேற்றம் பண்ணிடுவோம்” என்றார். பம்பாயின் சண்முகானந்தா கலை அரங்கில் ‘நீதியின் நிழல்’ நாடகம் அரங்கேறி பெரும் வரவேற்பைப் பெற்றது. “இந்த நாடகத்தை எழுதியது தம்பி பாலமுருகன்” என்று அவையோர் முன் அறிவித்து அவரை மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து அங்கீகரித்தார் சிவாஜி.

‘அன்புக்கரங்கள்’ படத்தில் அண்ணனாக சிவாஜி,<br />தங்கையாக மணிமாலா..
‘அன்புக்கரங்கள்’ படத்தில் அண்ணனாக சிவாஜி,
தங்கையாக மணிமாலா..

நடிகர் திலகத்துடன் முதல் படம்

சிவாஜி உட்பட பல நடிகர்களுக்கு நாடகங்கள் எழுதிக்கொண்டிருந்த பாலமுருகனை ஒரு முறை சிவாஜி பிலிம்ஸ் நிர்வாகி கண்ணன் சந்தித்தார். சாந்தி பிலிம்ஸ் நிறுவனர் பெரியண்ணாவிற்கு ஒரு கதை தேவைப்படுகிறது, அவரைப் போய்ப் பாருங்கள் என்றார். பாலமுருகன் பெரியண்ணாவை சந்தித்துக் கதை சொன்னார். கதையைக் கேட்ட பெரியண்ணா, “கதை நல்லாயிருக்கு, உடனே சிவாஜியை பார்த்துக் கதையைச் சொல்லு” என்று பாலமுருகனை அனுப்பினார்.

பாலமுருகனை வீட்டில் பார்த்த சிவாஜி, “என்ன? பாலமுருகா என்ன சேதி?” என்று விசாரிக்க, பாலமுருகன் வந்த விஷயத்தைச் சொன்னார். “சரி வா.. காருல ஏறு..” என்று பாலமுருகனை காரில் ஏற்றிக்கொண்டு பெங்களூருவில் உள்ள தன் தங்கை வீட்டுக்குப் புறப்பட்டார். “கதையை ஆரம்பி..” என்றார் சிவாஜி. சென்னையிலிருந்து பெங்களூரு போவதற்கும் பாலமுருகன் முழுக்கதையைச் சொல்லி முடிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது. “கதையும் தலைப்பும் நல்லா இருக்கு, உடனே வேலைகளை ஆரம்பிக்கலாம்ன்னு பெரியண்ணாட்ட சொல்லு” என்று சொல்லி சிவாஜி - பாலமுருகனை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

ஒரு திரைப்படத்துக்கு கதை - வசனம் எழுத வந்த முதல் வாய்ப்பே ‘அன்புக் கரங்கள்’ என்கிற சிவாஜி படமாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார் பாலமுருகன். அப்படத்தின் மையக் கரு கோபம். கோபத்தால் ஒருவனுடைய வாழ்க்கை எப்படிச் சீரழிகிறது என்பதைச் சித்தரிக்கும் படம்.

அப்படத்தின் ஒரு காட்சியில் சிவாஜி, குனிந்தபடி சுவரில் சாய்ந்து நிற்கும் நாகேஷைப் பார்த்து, “டேய் திருப்பதி.. நிமிர்ந்து நில்டா..” என்று சொல்ல “முடியலையே..” என்று நாகேஷ் பதிலளிப்பார். அதற்கு சிவாஜி, “கடமையிலிருந்து தவறுற யாரும் நிமிர்ந்து நிற்க முடியாது, இப்படி குனிஞ்சு வளைஞ்சுதான் நிக்கணும்” என்று சொல்வார். அதன் பின் சிவாஜிக்காக பாலமுருகன் எழுதிய படம் ‘எங்க ஊர் ராஜா’.

அது சிவாஜியின் 123வது படம். அப்படம் இயக்குநர் பி. மாதவனின் தயாரிப்பு, இயக்கத்தில் சிவாஜி நடித்த முதல் படம். அதன் பின் ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘வசந்த மாளிகை’, ‘கண்ணே பாப்பா’ என்று 14 படங்களுக்கு எழுதிய பாலமுருகன், தன் வாழ்வில் பல கலைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்து உதவியுள்ளார். கவிஞர். முத்துலிங்கத்தை இயக்குநர் பி. மாதவனிடம் அறிமுகப்படுத்தி அவர் பாடலாசிரியராக அறிமுகமாகக் காரணமாக இருந்தவரும் அவரே.

மனித உறவின் மேன்மையைத் தனது நாடக, திரை எழுத்துகள் வழியாக தூக்கிப்பிடித்த பாலமுருகன், “பாசத்தையும் அன்பையும் அழிக்க நினைச்சுட்டா இந்த உலகமே மயான பூமியா மாறிடும்” என்றொரு வசனம் எழுதியிருக்கிறார். அன்பைத் தவிர வேறு எதுவொன்றையும் பெரிதெனக் கருதாதவர்.

பாலமுருகன், அவரது வசனத்தை தங்கள் சொந்த வாழ்விலும் கடைபிடித்த அவருடைய மனைவி நவமணியும் சந்திரமோகன், சிவானந்தம், பூபதிராஜா, ராஜேஷ், என்ற பிள்ளைகளும் கற்பகம் என்கிற மகளும் அவர் இருந்த வரை அவ்வளவு அன்புடன் கவனித்துக்கொண்டார்கள். மூப்பின் காரணமாக தமிழ் கடவுள் பெயர் கொண்ட பாலமுருகன், தமிழர் திருநாளில் 15. 1. 2023 நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டுவிட்டார்.

படங்கள் உதவி: ஞானம்

- ரவிசுப்பிரமணியன்; ravisubramaniyan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in