

சென்ற வாரம் உழவர் திருநாளை ஒட்டிய பாடல் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட நான், இந்த வாரம் பொங்கல் பண்டிகையின் அடுத்துவரும் நாளை தனதாக்கிக்கொண்ட பாசுவின் பெருமையைப் பறைசாற்றும் ஓர் ஈடு இணையற்ற பாடலின் சிறப்பம்சங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
'திருவிளையாடல்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஏ.பி. நாகராஜன் தனக்கான களம் புராணப் படங்கள் தான் என்று முடிவெடுத்து அதில் அடித்து விளையாட ஆரம்பித்தார். புதுமைப்பித்தனின் குறுநாவல் ஒன்றுக்கு திரை வடிவம் எடுத்து 'சரஸ்வதி சபதம்' என்று பிரம்மாண்டமாக தயாரிக்க ஆரம்பித்தார்.1966 -ஆம் ஆண்டு வெளிவந்த 'சரஸ்வதி சபதம்' மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, பத்மினி, தேவிகா, சிவகுமார், கே.ஆர். விஜயா, நாகேஷ், மனோரமா என்று ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருந்தனர். கவியரசு கண்ணதாசன் பாடல்களை எழுத திரை இசைத்திலகம் கே.வி. மகாதேவன் அவர்களின் மகத்தான இசை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்தது. திருவிளையாடல் படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது படங்களை கே.வி.மகாதேவனின் இசையோடுதான் ஆரம்பிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார் ஏ.பி. நாகராஜன். அவரது அந்த சென்டிமென்டுக்கு என்றபடி சரஸ்வதி சபதமும் கே.வி மகாதேவனின் இசையில் அமைந்த பாடலுடன் தான் ஆரம்பமாகிறது.
கலைமகள் தனது சத்தியலோகத்தில் பசு வழிபாடு செய்வது போல காட்சியை ஏ.பி.நாகராஜன் வடிவமைக்க அதற்காக பசுவின் பெருமைகளைச் சொல்லும் பாடல் கவியரசரிடம் இருந்து பிறக்கிறது.
பாடலின் துவக்கத்தில் நடன மங்கையர் கலைவாணியின் புகழ் பாடுவது போல தொகையறாவாக பாடலை அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். பரத நாட்டியத்தில் புஷ்பாஞ்சலி என்று ஒரு அம்சம் உண்டு. அபிநயத்தின் மூலமாக இறைவனின் பாதங்களில் புஷ்பங்களை சமர்ப்பிப்பது. இந்தப் பகுதி பெரும்பாலும் விருத்தமாகவே (திரைப்பட மொழியில் இதனை 'தொகையறா' என்று குறிப்பிடுவார்கள்.) புஷ்பாஞ்சலி அமைப்புக்கு ஏற்றபடி நடன இயக்குனர் பி.எஸ். கோபால கிருஷ்ணன் காட்சிக்கேற்ற நடனத்தை அமைத்திருக்கிறார். இசையமைப்பாளர், இயக்குனர், நடன இயக்குனர் மூவரும் இணைந்து பேசி வைத்துக்கொண்டு அமைத்தார்களா இல்லை கே.வி.மகாதேவனின் இசைக்கேற்றபடி பாடலை வெற்றிப்பாடலாக்க மற்ற இருவரும் சேர்ந்து காட்சி அமைத்தார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அந்த அளவுக்கு பாடலுக்கான இசை, நடனம், இயக்கம் என்று அனைத்துமே இமாலயச் சிறப்பை எட்டிப்பிடித்த ஒரு பாடல் இது.
பாடலை கவியரசர் ஒரு மங்கல வாழ்த்துடன் ஆரம்பிக்கிறார்.
'கலை வாழ்க மலர் வாழ்க
கலைமகளின் திரு வாழ்க.
புலவர் திருநாவிற் பொருந்தும் தமிழ் வாழ்க
கன்னித் தமிழோடு கலந்த நற்கவி வாழ்க
அன்னைக் கலைவாணி வண்ணப்பெயர் வாழ்க வாழ்கவே.'
ஆரம்பத்திலேயே அற்புதமாக அசத்துகிறார் கவியரசர்:
'கலைமகளின் திரு - அதாவது கலைவாணியின் செல்வம் என்று கூறியவர் அது என்ன என்பதை அடுத்த வரியில்
புலவர் திருநாவிற் பொருந்தும் தமிழ் என்று கூறி தமிழ் மொழியை சரஸ்வதி தேவியின் செல்வம் என்று கோபுரத்தில் ஏற்றிய தீபமாக ஒளிர வைக்கிறார் கவியரசர்.
'தொகையறா' முடிந்ததும் திரை இசைத்திலகத்தின் இசைச்சாம்ராஜ்யம் தொடங்குகிறது பாருங்கள். செண்டை, மிருதங்கம் , தபேலா ஆகியவற்றின் சேர்க்கையோடு ஒரு தனி ஆவர்த்தனம் சரியாக ஒரு நாற்பத்து மூன்று வினாடிகளுக்கு அப்படியே இசையோடு நம்மைக்காட்டிப்போட்டு அவர் ஏற்படுத்தும் அதிர்வலைகள் வேறு யாரும் கற்பனை கூட செய்துபார்க்க முடியாத ஒன்று.
அந்தத் தனி ஆவர்த்தனம் முடிய ...
இசை அரசி பி. சுசீலாவின் தேன்குரல் ‘கோமாதா...எங்கள் குலமாதா’ என்று ஆரம்பிக்கும் எடுப்பே ஆபேரி ராகத்தில் (இதனை பீம்ப்ளாஸ் என்றும் சொல்வதுண்டு.) நம்மை கட்டிப்போட்டு விடுகிறது. 'குலமாதர் நலம் காக்கும் குண மாதா' என்கிற வரிகளுக்கு பிறகு ஒரு சிறு ஆலாபனை அதை தொடரும் வீணையின் துரித கால பிரயோகம். கலைமகள் பாடுவதாக காட்சி அமைப்பு என்றால் அவளது கைப்பொருளான வீணை இல்லாமல் இருக்குமா.? வீணையில் கே.வி. மகாதேவன் வெளிப்படுத்தும் ராக சஞ்சாரங்கள் கேட்கக் கேட்கத் திகட்டாத ஒன்று.
ராகம், தானம் இரண்டும் முடிந்த பிறகு இப்போது பல்லவி ஆரம்பமாகிறது.
'கோமாதா எங்கள் குல மாதா
குலமாதர் நலம் காக்கும் குண மாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திரு மாதா
வண்ணக் கோ மாதா..'
பல்லவி முடிந்த பிறகு தொடரும் இணைப்பிசை இருக்கிறதே.. வீணையும், நடன இசையும் ஒன்றுக்கொன்று இசைவாக .. பிரம்மாண்டத்தை உணரவைக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக - அதே சமயம் வெகு அனாயாசமாகக் கையாண்டு அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
கலைமகள் நடத்தும் பூஜையில் நடன மாதர் நாட்டியம் என்றால் அது பிரம்மாண்டமாக அமைந்தால் தானே காட்சி சிறக்கும். அதனை உள்வாங்கிக்கொண்டு கே.வி. மகாதேவன் அமைத்த இசைதான் இந்த இணைப்பிசை.
தொடரும் சரணங்களில் கோமாதாவின் சிறப்புகளை வெகு அருமையாக பட்டியலிடுகிறார் கவியரசர்.
'பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே.
பழகும் உறவிலே பிள்ளை நீயே.
கருணை மழையிலே கங்கை நீயே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே.
ஆம். கங்கை நதி வேண்டியவர் வேண்டாதவர், நல்லவர் கேட்டவர், ஆண் பெண் என்றெல்லாம் எந்தப்பேதமும் பார்க்காமல் எப்படி தன்னிடம் நீராட வருபவர் யாராக இருந்தாலும் அவர்களது பாவங்களை களைந்து உடலையும் அவர்கள் மனத்தையும் தூய்மை ஆக்குகிறதோ..அதுபோல பசுவும் எந்தப்பாகுபாடும் கருதாமல் எல்லோருக்கும் தனது பாலைக் கொடுத்து அவர்களது பசியைத் தணிக்கிறது. ஆகவே கருணையை மழையாகப் பொழிவதில் கோமாதா கங்கைக்கு நிகரானவள் என்கிறார் கவியரசர்.
இந்தச் சரணம் முடிந்த பிறகு வரும் இணைப்பிசை.. அப்பப்பா. வேறு எந்த இசையமைப்பாளரும் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத ஒன்று.
தொடரும் சரணத்தில் சுப சகுனமாக கோமாதா வரவேற்கப்படுவதை அழகாக சுட்டிக்காட்டுகிறார் கவியரசர்.
இரக்க சுபாவமே இல்லாத ஒரு மனிதன். அவனை விட்டால் உதவுவதற்கு வேறு ஆளே இல்லை. அப்படிப்பட்ட ஒரு மனிதனை காண்பதற்காக வீட்டிலிருந்து இன்னொருவன் கிளம்புகிறான்.
அவன் புறப்படும் நேரத்தில் எதிரே ஒரு பசுமாடு வருகிறது.
'ஆ. கோமாதா எதிரில் வருகிறாள். நல்ல சகுனம். தைரியமா போய்வாருங்கள்.' என்று அவன் மனைவி சொல்கிறாள். அதே போல அவனும் செல்கிறான். என்ன அதிசயம். யாருக்கும் உதவாத மனிதனின் மனம் இணங்கி இவனது எதிர்காலமே பிரகாசமாகி விடுகிறது.
இப்படி ஒரு சம்பவத்தை இரண்டே வரிகளில் அழகாக அமைத்துவிடுகிறார் கவியரசர்.
'இணங்காதோர் மனம் கூட இணங்கும் - நீ
எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்.'
அதோடு நிற்கவில்லை. யாருக்கும் தலை வணங்காதவன் கூட எதிரே பசுமாடு வந்துவிட்டால் அவன் தலை கூட அவனையும் அறியாமல் வணங்கிவிடும். அப்படிப்பட்ட உன்னை வலம் வந்தால் நன்மை எல்லாமே வந்து சேர்ந்துவிடும் என்கிறார் கவியரசர்.
'வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும் - உன்னை
வலம் வந்தால் நலமெல்லாம் விளங்கும்.
வண்ணக்கோமாதா.."
இதோ சரணங்கள் முடிவுக்கு வந்துவிட்டன.
இறுதியாக உலகில் உள்ள அனைத்தையுமே கோமாதாவின் வடிவமாக காண்கிறார் கவிஞர்.
'நலம் நீயே
வளம் நீயே
நதி நீயே
கடல் நீயே
அருள் நீயே பொருள் நீயே
உடல் நீயே உயிர் நீயே'
என்று மாறி மாறி வரும் இந்த வரிகளை ஆரம்பத்தில் பி.சுசீலா அவர்களே முழுவதுமாக பாடுவதாக வடிவமைத்திருந்தார் கே.வி.மகாதேவன். ஆனால் ஒலிப்பதிவு நேரத்தில் குழுவினரும் பங்கு கொண்டால் இன்னும் அதிகமாக சுசீலாவின் குரலினிமை வெளிப்படும் என்று தோன்றவே கோரஸ் பாடகியரையும் பாடவைத்து பாடலை பதிவாக்கினார் திரை இசைத்திலகம்.
பாடல் முடிவை நெருங்கும்போது கடைசி வரியை
'உலகம் யாவும் கருணையோடு பெருகி வாழ அருள்வாயே' என்று பி. சுசீலாவின் குரலை உச்சத்தில் ஏற்றி நிறுத்தி பாடலை முடிக்கிறார் கே.வி. மகாதேவன்.
வாழ்த்தோடு மத்யம ஸ்ருதியில் துவங்கும் பாடல் படிப்படியாக மேலேறி 'அருள்வாயே' என்று வேண்டுதலோடு உச்சத்தில் முடிகிறது.
ஆனால் கேட்பவர் மனமெல்லாம் பேரானந்தத்தில் திளைத்துக்கொண்டே இருக்கிறது.
அப்படிப்பட்ட அற்புதமான நல்முத்தான பாடல் இது.
(தொடர்ந்து முத்தெடுப்போம்..)