

திரைப்படங்கள், நாடகங்கள், சின்னத்திரை என 40 ஆண்டுகள் நடிகராகப் பயணப்பட்டவர் பன்முகக் கலைஞர் சிவகுமார். திரையுலகில் நுழையும் முன்பே ஓர் ஓவியராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். 64 வயதில் இனி நடிப்பதில்லை என்று முடிவெடுத்தவர் அடுத்து வெற்றிகரமான எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் உருவெடுத்தார். கம்பராமாயணத்தின் மொத்தக் கதையையும் 100 பாடல்கள் வழியாக விளக்கிப் பேசி, கேட்போரை கிறங்க வைத்தார்.
பின்னர் மகாபாரதத்தை 2 மணி நேரத்துக்குள் விளக்கிப் பேசி வியக்க வைத்தார். தற்போது நான்கு வருடம் ஆய்வு செய்து, தற்காலத் தலைமுறைக்கு சென்று சேர வேண்டிய 100 திருக்குறள்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு வாழ்ந்த, வாழும் வெற்றி மனிதர்களின் வாழ்க்கைக் கதையுடன் பொருத்திக் காட்டி ஈரோடு புத்தகக் காட்சியில் இவர் ஆற்றிய உரை, புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் ஒளிபரப்பாகிறது.
இதற்கிடையில் சிவகுமார் எழுதி, இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ள புத்தம் புதிய புத்தகம் ‘திரைப்படச் சோலை’. பொது வாழ்க்கையுடன் இணைந்த தனது கலை வாழ்க்கையை இதில் பொக்கிஷ நினைவுகளாக மீட்டுப் பதிவு செய்திருக்கிறார் சிவகுமார். 1964இல் தாம் முதன் முதலில் ஏவி.எம் ஸ்டுடியோவில் ‘மேக்கப் டெஸ்ட்’ போட்டது, ‘கந்தன் கருணை’யில் முருகாவதார வேடம் பூண்டு தமிழ் ரசிகர்களின் மனதை ஆண்டது தொடங்கி, தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமைகளுடனும் நட்சத்திரங்களுடனும் பழகிய அனுபவங்களை சிந்தாமல் சிதறாமல் அவர்களின் குணசித்திரத்தையும் திரையுலக வாழ்க்கைப் பயணத்தையும் அவர் பரிமாறியிருக்கும் அழகினை ’திரைப்படச் சோலை’ புத்தகத்தில் வாசிக்க வாசிக்க இன்னும் இன்னும் எழுத மாட்டாரா என ஏங்க வைத்திருக்கிறார். 50 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல், தமிழ் சினிமா வரலாற்றின் விடுபட்ட பக்கங்களை நிரப்பும் அரிய சாட்சியம்.
சிவகுமாரின் ‘கொங்கு தேன்’, ‘சித்திரச் சோலை’ ஆகிய நூல்களையும் 46வது சென்னை புத்தகக் காட்சியில் எண்: 505, 506, 563, 564 ஆகிய நான்கு அரங்குகளில் வாங்கலாம். இந்து தமிழ் திசை வெளியீடுகளில் தமிழ் சினிமாவின் முதுபெரும் திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் சித்ராலயா கோபு தனது திரைப் பயணத்தை இனிக்கும் நகைச்சுவை நடையில் பதிவு செய்துள்ள ‘சி(ரி)த்ராலயா, இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் எனக் கொண்டாடப்பட்டு வரும் பிரபுதேவா எழுதியுள்ள அவரது வாழ்க்கைக் கதை நூலான ‘இதுதான் நான்’, தமிழ் - இந்தி திரைப்படப் பாடல்களுக்கு இடையிலான கலாச்சார, கற்பனை வீச்சின் உறவை ஒப்பிட்டுப் பார்க்கும் எஸ்.எஸ்.வாசனின் ‘மொழி பிரிக்காத உணர்வு’, சினிமா வரலாற்றின் தொடக்க வரலாற்றை சுவாரஸ்யமாகப் பதிந்துள்ள சோழ நாகராஜனின் ‘மௌனம் கலைத்த சினிமா’, கண்ணதாசனின் பாட்டுத் திறம் எவ்வாறு தமிழ் வாழ்க்கையின் அறத்தை தூக்கி நிறுத்தியது என்பதைப் பேசும் ‘காலமெலாம் கண்ணதாசன்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரைப் பயணத்தை அரிய புகைப்படத் தொகுப்புகளுடன் அணுவணுவாகப் பதிந்துள்ள ‘சூப்பர் ஸ்டார் 45’ சிறப்பு மலர், வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன், தான் கண்ட எம்.ஜி.ஆர் குறித்து பகிர்ந்துள்ள ‘மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்’ உள்ளிட்ட புத்தகங்களை சிறப்புத் தள்ளுபடி விலையில் வாங்கலாம்.