

மனிதனின் அடைப்படைத் தேவைகளை மூன்றாக வகுத்து உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்று வரிசைப்படுத்தும்போது அவற்றில் முதலிடம் உணவுக்குத் தான்.
அந்த உணவை ஒவ்வொரு மனிதனுக்கும் தானே வந்து உருவாக்கித் தர முடியாது என்பதற்காக கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி தான் மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடைய விவசாயப் பெருங்குடி மக்கள். அந்த உழவர் பெருமக்களின் சிறப்பை விளக்கும் வண்ணம் 1967ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த திரைப்படம் தான் தேவர் பிலிம்ஸின் 'விவசாயி'.
அந்த வருடம் ஜனவரி மாதம் சுடப்பட்டு மருத்துவமனையில் பேராபத்தான நிலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்தபோது, அவர் மீண்டு வருவாரா என்பதே சந்தேகத்துக்கு இடமாக இருந்த வேளையில் அவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து தனது அடுத்த படத்துக்கான முன்பணத்தை அவரிடம் கொடுத்து 'தைரியமா வாங்க. என் அடுத்த படத்துலே நீங்கதான் நடிக்கிறீங்க. படத்தோட பேரு 'விவசாயி' - என்று அவருக்கு தன்னம்பிக்கையை கொடுத்து மீள வைத்தது, அந்தப் படத்தைத் தயாரித்த சின்னப்பா தேவர் தான். அந்த வகையில் எம்.ஜி.ஆர். இக்கட்டில் இருந்த வேளையில் அவருக்கு ‘காட் ஃபாதர்’ போல செயல்பட்டவர் சாண்டோ சின்னப்பா தேவர்.
மக்கள் திலகத்துக்கு இணையாக புன்னகை அரசி கே.ஆர். விஜயா, எம்.என். நம்பியார், விஜயகுமாரி, நாகேஷ், மனோரமா, வி.கே. ராமசாமி, அசோகன், மேஜர் சுந்தரராஜன், எஸ்.என். லட்சுமி என்று பெரும் நட்சத்திரக் கூட்டம் இருந்தது.
பாடல்களை மருதகாசியும் உடுமலை நாராயண கவிராயரும் எழுதியிருந்தனர். திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் கிராமிய இசையை படம் நெடுக அள்ளித் தெளித்திருந்தார். கிராமிய இசையில் அவர் கொடுத்தது போல மாறுபட்ட இசைக் கோவைகளை வேறு எந்த இசையமைப்பாளரும் இதுவரைக் கொடுத்ததே இல்லை என்று தைரியமாகக் கூறலாம். ‘விவசாயி’ படத்தில் உடுமலை நாராயண கவி எழுதிய ஒரு சிறப்பான பாடல் முத்தைத்தான் இந்த உழவர் திருநாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
ஒரு விவசாயி பாடும் பாடல் என்பதை பாடலின் ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் உணர வைத்திருக்கிறார் கவிஞர். மக்கள் திலகம் பாடிய அறிவுரைப் பாடல்களில் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த பாடல் இது. பொதுவாக அவரது பாடல்கள் குழந்தைகளுக்கும், வளரும் இளைய தலை முறையினருக்கும் மட்டும் என்று இருக்கும். இந்தப் பாடலோ யார் கேட்டாலும் அவர்களுக்கு பொருந்தும் வண்ணம் இருக்கும். டி.எம்.சௌந்தரராஜனின் கம்பீரத் தொனி மக்கள் திலகம் அவர்களே பாடுவது போன்ற உணர்வைக் கேட்பவருக்குக் கொடுக்கும். டி.எம். எஸ்ஸின் தனிச் சிறப்பு என்னவென்றால், மக்கள் திலகத்திற்காகவும் நடிகர் திலகத்திற்காகவும் எண்ணிலடங்காப் பாடல்களை அவர் பாடியிருந்தாலும் ஒவ்வொன்றிலும் அந்தந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தும் வகையில் தனது குரலிலும் துல்லியமான மாறுபாட்டைக் கொடுத்துப் பாடி இருப்பார்.
குறிப்பிட்ட இந்தப் பாடலில், தொடக்கத்திலேயே கணீர் என்று ஒலிக்கிறது அவர் குரல்.
'நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்'
பல்லவியின் முதல் வரிகளிலேயே ஆழமான பொருள் பொதிந்த கருத்துக்களை எளிமையாக நம் மனங்களில் விதைத்து விடுகிறார் உடுமலை நாராயண கவி.
விதைகளை நிலத்தின் தன்மை, மண்ணின் பக்குவம் என்று எல்லாவற்றையும் பரிசீலித்து நல்ல நிலத்தில்தான் விதைக்க வேண்டும் என்கிற நிதர்சனத்தை முதல் வரியில் எடுத்து உரைத்தவர் அதே போல நாட்டு மக்களின் மனங்களில் நாணயத்தை வளர்க்கணும் என்கிறார்.
நிலத்துக்கு மட்டும் தரம் பார்த்து விதைக்கவேண்டும் என்று சொன்னவர் நாணயத்தை மட்டும் மக்கள் என்று அனைவருக்கும் பொதுவாக வளர்க்க சொல்கிறார். இங்கு நாணயம் என்று பொதுவாக சொன்னாலும் அது அனைத்து உயர்குணங்களையும் உள்ளடக்கியதுதான். மக்கள் அனைவருமே உயர்குணங்கள் நிரம்பப் பெற்றவராக இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்களில் ஒருவன் தலைமை ஏற்கும் போது அவனால் நாடே சிறக்கும்!
எவ்வளவு தீர்க்கமான சிந்தனையை ஒற்றை வரியில் எளிதாக நம் மனங்களில் விதைத்து விடுகிறார் பாருங்கள்! அடுத்த இரண்டு வரிகள் தற்காலத்திற்கு மிக மிக முக்கியமாகத் தேவைப்படும் வரிகள்.
'பள்ளி என்ற நிலம் தனிலே கல்விதனை விதைக்கணும்
பிள்ளைகளைச் சீர்திருத்திப் பெரியவர்கள் ஆக்கணும்."
பள்ளி என்ற நிலத்தில் நிலத்தில் விதைக்கப்படும் கல்வி என்ற விதையின் பலனை அனுபவிக்கப்போவது இளைய தலைமுறையினர் அல்லவா?
ஒரு நிலத்தை மண்வெட்டி, கடப்பாரை போன்ற கருவிகளை பயன்படுத்தி தூர்த்து கழிவு கசடுகளை அகற்றி மணலை பரப்பி டிராக்டர் போட்டு சமன்படுத்தி.. அப்பப்பா எத்தனை பாடுபடவேண்டியிருக்கிறது அந்த நிலம்! அதற்கு வாயிருந்தால் அழுதுவிடும். ஆனால் அனைத்தையும் தாங்கிக்கொள்ளும் நிலம்தான் பண்பட்ட நிலமாகிறது. அமோக விளைச்சலை தருகிறது. அதே போல மாணவச் செல்வங்களையும் நல்ல பாதையில் திருப்பி, கல்வியில் நாட்டம் கொள்ள வைக்க நிலத்தை சீர்படுத்துவது போல அவரவர் தன்மைக்கேற்ப பாராட்டி ஊக்குவித்தும், அதட்டி, மிரட்டி, தேவைப்பட்டால் அடித்தும் கூட ஆசிரியர்களும், பெற்றோர்களும் சீர்திருத்தி அவர்களை சமுதாயத்தில் முன்னணியில் நிற்கும் சான்றோர்களாக ஆக்க வேண்டும் என்கிற நுட்பமான உண்மையைச் 'சீர்திருத்தி' என்கிற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கி விடுகிறார் கவிஞர். மாணவர்களிடம் குரல் உயர்த்திப் பேசவே ஆசிரியர்களுக்கு அநேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் இக்காலத்தில் இந்த அறிவுரை எடுபடுமா என்பது சந்தேகமாத்தான் இருக்கிறது.
தொடரும் முதல் சரணத்தில் கட்டுப்பாடு என்ற விதையை முதலில் ஆண் - பெண் இருவரின் மனதிலும் விதைத்துவிட்டு அதன் பிறகு கற்பு நெறி தவறாத காதற்பயிரை வளர்க்கவேண்டும். அந்தக் காதல் திருமணத்தில் முடிந்து அன்னை, தந்தை என்று ஆகிவிட்டால் பிறகு மனங்களில் பொறுப்புணர்வை விதைக்கவேண்டும். அவர்களுக்கு பின்னால் வரும் தலைமுறையை பெயர் உயர வளர்க்கவேண்டும்’ என்று குடும்ப வாழ்க்கையின் பொறுப்புக்களை சுமப்பது என்பது சாதாரண விஷயமல்ல என்று சொல்லாமல் சொல்கிறார் கவிராயர்.
'கன்னியர்க்கும் காளையர்க்கும் கட்டுப்பாட்டை விதைத்து,
கற்பு நிலை தவறாத காதல் பயிர் வளர்த்து,
அன்னை தந்தை ஆனவர்க்குத் தன்பொறுப்பை விதைத்து,
பின்வரும் சந்ததியைப் பேருயர வளர்த்து..’
அதோடு விட்டாரா கவிராயர்?
செல்வம் இருப்பவர்கள் இதயங்களில் இரக்கத்தை விதைத்து அதன் பயனாக அடிமட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையில் இன்பம் என்னும் பயிரை வளர்க்கவேண்டும் என்று இந்தச் சரணத்தை முடிக்கிறார் அவர்.
'இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்
இல்லாதார் வாழ்க்கையிலே இன்பப்பயிர் வளர்க்கணும்'
இப்படி முதல் சரணத்தை மாணவர்களுக்கும், இரண்டாவது சரணத்தை குடும்பத்திற்கும் விதைத்தவர் கடைசி சரணத்தை உலக மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். உலகம் முழுவதும் மனித குலத்திற்கான நற்பண்புகளை விதைத்து , பாமர மக்களின் மனங்களில் நல்லவை, கெட்டவைகளைப் பகுத்து அறியும் அறிவை வளர்க்கவேண்டும். அதே போல போருக்காக அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை அறிவாற்றலைப் பயன்படுத்திக் கண்டுபிடிப்பவர்களின் கண்டுபிடிப்பவர்களின் மனங்களில் தத்தம் நாட்டு விவசாய நிலங்களை தர மேம்படுத்த யுக்திகளை விதைக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்வுக்காக முறையான உடற்பயிற்சிகள் மூலம் உடலினை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களை ஈன்ற தாய் நாட்டின் மீது பக்தியை விதைக்க வேண்டும். அப்படி பக்தியை விதைத்த பிறகு அவர்கள் மனங்களில் பேதமில்லாத ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும் என்று பாடலை முடிக்கிறார் உடுமலை நாராயண கவி.
'பார் முழுதும் மனித குலப் பண்புகளை விதைத்து,
பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து,
போர்முனையைக் கண்டவர்க்கு ஏர்முனையை விதைத்து,
சீர்பெருக தமது தேகமதை வளர்த்து,
பெற்ற திருநாட்டினிலே பக்திதனை விதைக்கணும்
பக்திதனை விதைத்துவிட்டு நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்.'
அப்பப்பா! விதைப்பதற்கும் வளர்ப்பதற்கும் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்று வியக்க வைக்கும் கவிராயரின் அற்புதமான வார்த்தைகளைக் கேட்கும் ஒவ்வொருவர் மனத்திலும் அழுத்தமாக பதியன் போடும் விதமாக இசைக்கோர்வைகளைச் செதுக்கி இருப்பார் நமது திரை இசைத் திலகம்.
பல்லவியின் முதல் இரண்டு வரிகள் முடியும் இடத்தில் முத்தாய்ப்பாக தபேலாவில் கொடுக்கும் அந்த 'தொம் தொம் தொம் தக்கிட தகதோம்' கேட்கும் மனங்களை ஒரு துள்ளாட்டம் போடவிடாமல் இருக்காது.
இந்தப் பாடலில் இரண்டாவது மூன்றாவது சரணங்கள் ஆறு வரிகள் கொண்ட சரணங்கள். அவற்றில் முதல் நான்கு வரிகள் நிறுத்தற்குறிகளுடனும் அமைந்து ஐந்தாவது வரி முற்றுப்புள்ளியுடன் முடியும்.
அதற்கேற்ப பாடலில் மெட்டும் ஒவ்வொரு வரியும் முடியும்போது அரை மாத்திரை நிறுத்தி நான்காவது வரி முடியும் இடத்தில் அக்கார்டியனில் ஒரு சின்ன சுழலிசைக்குப் பிறகு - அந்த இடத்தில் தாள வாத்தியமான தபேலாவின் வீச்சும் ஒரு எடுப்பைக் கூட்ட – ஐந்தாவது வரியை அழகாக முடித்து மிக அற்புதமாகத் திரும்பத் திரும்பக் கேட்கும் வகையில் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து வெற்றி மகசூலை அள்ளிக் குவித்திருக்கிறார் திரை இசைத் திலகம் திரு. கே.வி. மகாதேவன்.
(தொடர்ந்து முத்தெடுப்போம்)