

சென்னையை நோக்கி விரையும் கன்டெய்னர் லாரியை மடக்கிப் பிடிக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. கோடிக்கணக்கில் பணம் கடத்தப்படுவதைக் கண்டுபிடித்து குற்ற வாளி தருண் அரோராவைச் சிறையில் அடைக்கிறார். ஜெகபதி பாபுவின் தங்கை தமன்னாவைக் காதலிக்கிறார் விஷால். பிறகு ஜெகபதி பாபு கடத்தப் படுகிறார். கடத்தலின் பின்னணியில் ஜெகபதி பாபுவின் வேறொரு முகம் தெரியவருகிறது. ஜெகபதி பாபுவைக் காப்பாற்றும் விஷால் அவர் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பிக்கிறார். உண்மையில் விஷால் யார்? யாருக்காக இதையெல் லாம் செய்கிறார்? இதற்கான பதில்தான் ‘கத்தி சண்டை’.
இயக்குநர் சுராஜின் 10-வது படம் இது. மக்கள் பணத்தைக் கொள்ளையடிப் பவர்களை ஏமாற்றி, அவர்கள் பணத்தை எடுத்து மக்களுக்கு நன்மை செய்யும் கதையைக் கொண்ட பல படங்களின் சாயல் இந்தப் படத்தில் உள்ளது. பல படங்களில் இருந்த காட்சிகளில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்தால் புதிய திரைக்கதையாகிவிடும் என்று இயக்குநர் சுராஜ் நம்பியிருக்கிறார். அந்த நம்பிக்கை பலிக்கவில்லை.
முன் ஜென்மக் கதை, நினைவு இழத் தல் ஆகியவற்றுக்கான சம்பவங்களை, காட்சிகளை நிறுவிய விதம் பெரும் சோர்வை அளிக்கிறது. ஆங்காங்கே திருப்பங்கள் இருந்தால் போதும் என இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால், அர்த்தமற்ற திருப்பங்களால் சுவையைக் கூட்ட முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். முதல் பாதியில் வரும் அசட்டுத்தனமான காதல் முயற்சிகள் படத்தின் மீது கடும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
விஷால் எப்படி சூரியைத் தேடி வருகிறார்? தன் தங்கையின் காதலுக்காக விஷாலைப் பற்றி விசாரிக்கும் ஜெகபதி பாபுவுக்கு அவருடைய பின்னணி தெரி யாமல்போவது எப்படி? இரண்டாம் பாதி யிலும் எப்படி சொல்லி வைத்தாற்போல யாருமே விஷாலை சந்தேகப்படாமல், கண்காணிக்காமல் இருக்கிறார்கள்? கேள்விகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.
வாட்டசாட்டமான ஒரு ரவுடி வானத்தில் பறந்து வந்து விழுகிறார். அடுத்த கணம் விஷால் திரையில் தோன்றுகிறார். இப்படிப்பட்ட மலினமான அதிரடிகளை நம் நாயகர்கள் எப்போது கைவிடுவார்கள்?
காதலிக்கிறேன் என்று துரத்துவது, இல்லாத பொய் சொல்லி நம்ப வைப் பது, வில்லன்களைப் பறந்து பறந்து புரட்டியெடுப்பது, டூயட் ஆடுவது என வழக்கமும் பழக்கமுமான கதா பாத்திரம்தான் விஷாலுக்கு. சாகச ஹீரோ வுக்கான பிரயத்தனங்களைச் செய்யும் விஷால், ஏன் கற்பனைக் கதையிலும் கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்? இதுவும் சாகசத்தில் ஒரு பகுதி என்று நினைக்கிறாரோ?
தமன்னா அழகுப் பதுமையாக வருகிறார். பாடல் காட்சிகளில் ஈர்க் கிறார். அதோடு சரி. சூரியின் பெண் வேடக் காட்சிகள் எரிச்சலை வரவழைக் கின்றன. வெற்றுவேட்டு ரவுடி வேடத்தை எல்லா நகைச்சுவை நடிகர்களும் சலிக்கச் சலிக்கப் பயன்படுத்திவிட்டார்கள் என் பதை சூரிக்கு யாராவது சொன்னால் நல்லது.
வடிவேலுவின் மறுவருகை மதிப்புக் கும் மகிழ்ச்சிக்கும் உரியது. அவருடைய முத்திரைப் பேச்சும் சேட்டைகளும் உடல் மொழியும் பத்திரமாக இருக்கின்றன. சில இடங்களில் ரசிக்கவைக்கிறார். ஆனால், அவருக்கான களம் சரியாக அமையாததால் அவரது பங்களிப்பு எடுபடவில்லை.
ஜெகபதி பாபு, தருண் அரோரா, சௌந்தர் ராஜா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கதாபாத்திரங்களுக்குப் பொருந்திப் போகிறார்கள். ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்துக்குக் கைகொடுக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையில் ‘நான் கொஞ்சம் கறுப்புதான்’ பாடல் மட்டும் கவனம் ஈர்க்கிறது. ஆங்காங்கே திடீரெனக் குதிக்கும் பாடல்கள் தூக்கம் வரவழைப்பதில் திரைக்கதையோடு போட்டிபோடுகின்றன.
அரதப் பழசான கதை, பலவீனமான திரைக்கதை, நம்பகத்தன்மை இல்லாத காட்சி அமைப்புகளால் கத்தி சண்டை வெறும் அட்ட கத்தியின் ஜிகினா சலசலப்பாக ஏமாற்றுகிறது.