

தருமபுரி இளவரசன் - திவ்யா திருமணத்தால் ஏற்பட்டக் கலவரத்தையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த இளவரசனின் மரணத்தையும் தாக்கமாகக் கொண்டு ‘எட்டுதிக்கும் பற’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் வ. கீரா. தற்போது நரிக்குறவர் சமூகத்தின் பின்னணியில் உருவாக்கியிருக்கும் ‘இரும்பன்’ படத்துடன் திரும்ப வந்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
நரிக்குறவர் மக்களின் பிரச்சினைகளைப் பேசும் படமா?
இல்லை. இதுவொரு ‘சர்வைவல்’ காதல் கதை. நரிக்குறவர் இன மக்கள், வேட்டையாடுதலை கைவிட்டபிறகு, கைவினைப் பொருட்கள், தேன், மூலிகை போன்ற பொருட்களை விற்பனை செய்து தற்சார்பு வாழ்க்கையில் வெற்றிபெற்று விட்டார்கள். அந்தச் சமூகத்திலிருந்து படித்து பல பட்டதாரிகள் உருவாகிவிட்டார்கள். என்றாலும் அவர்கள் மற்ற சமூகங்களுடன் கலந்து பழகுவது கிடையாது.
அவர்களுக்குள்ளாகவே பெண் எடுப்பது, கொடுப்பது என்றே வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த நாயகனுக்கும் உயர்தட்டு வகுப்பைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையில் உருவாகும் காதலை பேசும் படம்.
அந்தக் காதலில் என்னப் பிரச்சினை?
இயற்கைதான் பிரச்சினை. நாயகி தன்னிடம் மனம் விட்டுப் பேசி அக்கறை காட்டுவதை காதலென்று தவறாக நினைத்துக்கொள்ளும் நாயகன், தன்னுடைய மீனவ நண்பனின் உதவியுடன் நாயகியைப் படகில் கடத்திக்கொண்டு நடுக்கடலுக்குச் சென்றுவிடுகிறான்.
அங்கே திடீர் புயலை எதிர்கொள்ளும் அவர்கள் ஆள் அரவமற்ற தீவு ஒன்றில் கரை ஒதுங்குகிறார்கள். இயற்கையால் தனித்துவிடப்பட்ட நிலையில், அதே இயற்கையின் உதவியுடன் நாயகியை எப்படிப் பொத்தி வைத்து காப்பாற்றி அவளது காதலைப் பெறுகிறான் என்பதுதான் கதை.
யாரெல்லாம் நடிகர்கள்?
ஜூனியர் எம்.ஜி.ஆர். ‘அபீஸ்’ என்கிற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா தத்தா நாயகி. பீட்டர் என்கிற மீனவ நண்பனாக யோகி பாபு நடித்துள்ளார். தவிர, சென்ராயன், ஷாஜி தொடங்கி படம் முழுவதும் பெரிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களோடு சென்னை குரோம்பேட்டையில் முகாம் அமைத்து வாழும் நரிக்குறவர் சமுதாய மக்களில் சுமார் 100 பேர் வரை நடிக்க வைத்திருக்கிறோம்.
‘ஒளி விளக்கு’ படத்தில் இடம்பெற்ற ‘நாங்க புதுசாக் கட்டிகிட்ட ஜோடி தானுங்க’ பாடலை முறையாக அனுமதி பெற்று ரீமிக்ஸ் பாடலாகப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். காந்த் தேவா இசையமைத்திருக்கிறார். லெமூரியா மூவீஸ் சார்பில், தமிழ் பாலா, வினோத் குமார் இணைந்து படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.