

விளையாட்டையும் நட்பையும் மைய மாக வைத்து ‘சென்னை 600028’ படத்தை எடுத்த இயக்குநர் வெங் கட்பிரபு, அதே விஷயங்களை வைத்து மீண்டும் களம் இறங்கியிருக்கிறார்.
இம்முறை அவர்கள் ஒன்றிணைவது தேனியில் நடைபெறும் ரகுவின் (ஜெய்) திருமணத்துக்காக. குடும்பத்துடன் தேனி செல்லும் நண்பர்கள் அங்கே மணப்பெண் (சனா அல்ஃதாப்) வீட்டில் தங்குகிறார்கள். அந்த ஊரில் எலியும் பூனையுமாக இரண்டு கிரிக்கெட் அணிகள். உள்ளூர் அடாவடி இளைஞரான மருதுவை (வைபவ்) கேப்டனாகக் கொண்டது முதல் அணி. அவரது அணியிடம் தொடர்ந்து தோற்றுவரும் இரண்டாவது அணியின் கேப்டன் அரவிந்த் (அரவிந்த் ஆகாஷ்).
நண்பனின் திருமணத்துக்காக ஒன்று சேர்ந்தவர்கள் மற்றொரு நண்பனின் வேண்டுகோளுக்காக நீண்ட இடை வெளிக்குப் பிறகு ஆடுகளத்தில் இறங்குறார்கள். அவர்கள் அரையிறுதில் ஆட முடியாதவாறு மருது செய்யும் சூழ்ச்சி, ரகுவின் திருமணத்தையே நிறுத்திவிடுகிறது. நின்ற திருமணம் நடந் ததா? கிரிக்கெட்டால் உயிர் நண்பர்கள் ஆன அவர்கள் மீண்டும் வென்றார்களா?
முதல் பாகத்தின் பாத்திரங்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவே அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், அந்தக் கதைகள் சுவாரஸ்யமாகவே இருக்கின்றன. திருமணம் நின்ற பிறகு படம் சூடுபிடிக்கிறது. இந்தப் பிரச்சினையையும் கிரிக்கெட் ஆட்டத்தையும் ஒன்றாக இணைத்த விதம் திரைக்கதைக்குச் சுவை கூட்டுகிறது. கலகலப்பான வர்ணனையுடன் கிரிக்கெட்டைக் காட்சிப்படுத்திய விதம் அருமை.
முதல் பாகத்தில் மந்தைவெளி நண்பர்களைக் கலங்க அடித்த சிறுவர்களின் அணி களம் இறங்கும்போது திரையரங்கமே அதிர்கிறது. கணவர்களைத் திட்டித் தீர்க்கும் மனைவிமார்கள் ஒரு கட்டத்தில் கோச்களாக மாறும்போதும் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். இளவரசுவின் பாத்திரத்தைச் சரியான விதத்தில் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர். வசனங்களில் கிண்டலும் கேலியும் கொப்பளிக்கின்றன.
நட்புக்கு இணையாகக் குடும்ப உறவு களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக் கிறார் இயக்குநர். நண்பர்களின் மனைவிமார்களின் மூலம் படத்துக்குக் கூடுதல் வண்ணம் சேர்க்கிறார். குடும்ப உறவுகளுக்கும் நட்புக்கும் இடையேயான முரண்களையும் காட்டுகிறார். திருமணத் துக்குப் பிறகு ஆண்களின் நட்பு, விளை யாட்டு முதலான ஆர்வங்கள் ஆகியவை பாதிக்கப்படுவதாகவும் படம் சொல்கிறது. இதே விஷயங்களைத் திருமணத்துக்குப் பின் பெண்களும் இழந்துவிடுவது குறித்துப் பேச்சே இல்லை.
படத்தின் முக்கியமான திருப்பம் சொப்பன சுந்தரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் நிகழ்கிறது. இந்த இடம் செயற்கை யாகத் திணிக்கப்பட்டதாக, பலவீனமாக இருக்கிறது. இரண்டாம் பாதியின் தொடக் கத்திலும் படம் நகராமல் சண்டித்தனம் செய்கிறது. இளைஞர்கள் பாதி நேரம் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். படத்தின் முடிவு அதற்கு முந்தைய காட்சிகளில் இருந்த விறுவிறுப்பைக் கொஞ்சம் நீர்த்துப்போகச்செய்கிறது.
மிர்ச்சி சிவாவின் மூலம் யுடியூப் முதலான தளங்களில் சினிமா விமர்சனம் செய்பவர்களை இயக்குநர் கிண்டலடிக்கிறார். இந்தப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தும் சிவா, மைதானத்திலும் அதற்கு வெளியிலும் தன் பேச்சுக்களின் மூலம் சிரிக்க வைக்கிறார்.
விஜய் வசந்த், நிதின் சத்யா, அர்விந்த், வைபவ், விஜயலட்சுமி, அஞ்சனா, சாந்தினி என ஒவ்வொருவருக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் உள்ளது. அவர்களும் தங்களுக்குத் தரப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள்.
ஜெய்யின் திருமணத்தை மையப் படுத்திக் கதை நகர்ந்தாலும் அவருக்கும் அவரது காதலி சனாவுக்கும் இடையிலான காட்சிகள் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. பிரேம்ஜி அமரனின் நகைச்சுவை வெடிகளை பெரும்பாலான நேரங்களில் மற்றவர்கள் வெடித்துவிடுகிறார்கள் என் றாலும் அவரைக் கண்டாலே ரசிகர்கள் சிரிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படம் முழுவதும் இழைந்து கதை சொல்கிறது. ஓரிரு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பெரும் வரவேற்பைப் பெற்ற படத்துக்கு இரண்டாம் பாகம் எடுப்பது மிகவும் ஆபத்தான சாகசம். அதைத் துணிச்சலாக எதிர்கொண்டு கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறார் வெங்கட்பிரபு.