

என்.டி.டிவி.யில் காலம் சென்ற முதல்வரின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்த விவாதம். அதில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் கலந்துகொண்டபோது “நான் விவாதத்தில் கலந்துகொள்ள மாட்டேன். என் கருத்தை மட்டுமே சொல்வேன்” என்ற நிபந்தனையைத் தெரிவித்துத் தன் கருத்தைக் கூறினார். அப்போது ‘’நீங்கள் டெல்லியிலும் மும்பையிலுமாக இருந்துகொண்டு இந்த விஷயத்தை எந்தவித உணர்வொன்றுதலும் (passion) இல்லாமல் அணுகிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிகவும் உணர்ச்சிகரமான சப்ஜெக்ட்’’ என்று குற்றம் சாட்டும் தொனியில் பேசினார். உணர்ச்சிவசப்படாத அணுகுமுறை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பல சமயத்தில் அது சரியானதும் கூட, அல்லவா?
வசதியான வார்த்தை
புதிய தலைமுறை சேனலில் நடிகை கவுதமியின் பேட்டி. போயஸ் தோட்ட இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவகமாக்க வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதம் தொடர்பாகக் கேட்கப்பட்டது. ‘’இதுபோன்ற பொதுப் பிரச்சினைகளில் நான் ஏற்கனவே ஈடுபட்டிருக்கிறேன். எனவே இந்தக் கோரிக்கை புதிதல்ல’’ என்றார். இப்போதைக்கு எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து செயல்படும் எண்ணம் தனக்கு இல்லை என்பதையும் குறிப்பிட்டார். ‘இப்போதைக்கு’ என்பது வசதியான வார்த்தை.
புயலோடு விளையாடி...
பெரும்பாலான செய்தி சேனல்களின் செய்தியாளர்கள் புயல் கரையைக் கடக்கும் சற்று நேரம் முன்புவரை கடற்கரையில் நின்று கொண்டு அந்த பகுதியில் நடமாடியவர்களைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் செய்தியாளர் புயலோடு விளையாடினார் என்றே சொல்லாலாம். பழவேற்காடு பகுதியிலிருந்து வெளியேற மறுத்த மக்களை அரசு ஊழியர்கள் பேருந்துகளில் அப்புறப்படுத்திக்கொண்டிருக்க, அப்போது ஒரு மூதாட்டி யிடம் மைக்கை நீட்டி, “இப்ப என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்க, சோகம் கவ்விய முகத்துடன் “என்னத்தச் சொல்ல?” என்றார். உடனே செய்தியாளர். “இப்படிக் கவலையுடன் இந்தப் பகுதி மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி வருகிறார்கள்” என்று அந்தக் காட்சியையும் செய்தியாக மாற்றி அசர வைத்தார்.