கலக்கல் ஹாலிவுட்: இரண்டு படங்கள் ஒரே போஸ்டர்!

கலக்கல் ஹாலிவுட்: இரண்டு படங்கள் ஒரே போஸ்டர்!
Updated on
1 min read

“படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று ஜாக்கி சான் அறிவித்த பிறகுதான் அதிக படங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தி வருகிறார். காமெடி, அதிரடி சண்டைக் காட்சி ஆகிய அம்சங்களைச் சரிவிகிதம் கலந்து தரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களைத் தருவதில் வல்லவரான ஜாக்கி, தற்போது ‘குங்ஃபூ யோகா’ படத்தின் மூலம் இந்திய, சீன ரசிகர்களை ஸ்பெஷலாக மகிழ்விக்கத் தயாராகிவிட்டார். இந்திய - சீன கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சியாளர் ஜாக்கி சான். இந்தியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை அமைரா. இவர்களது குழு பழங்கால மகத நாட்டுப் புதையலைத் தேடிச் செல்கிறது. அப்படிப் போகும்போது அந்தப் புதையல் திபெத்தில் இருப்பது தெரியவருகிறது. அதைத் தேடிக் கண்டுபிடித்து, வசமாக்க ஜாக்கி சான் செய்யும் தந்திரங்கள், காமெடிகள், ஆக்‌ஷன்களின் கோவைதான் ‘குங்ஃபூ யோகா’வின் கதை.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவிலும் இந்தியாவிலும் படமாக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஜாக்கி சான் செய்யும் காமெடி கலந்த சேட்டைகள் ட்ரெய்லரிலேயே தெறிக்கவைக்கின்றன. அதுவும் பெரிய சிங்கம் ஜாக்கி சானோடு காரில் வரும் காட்சியும், அதோடு ஜாக்கி சான் செய்யும் நகைச்சுவைக் குறும்புகளும் ரசிகர்களை விலா நோகச் சிரிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய - சீனக் கூட்டுத் தயாரிப்பு என்பதால் பல இந்தியக் கலைஞர்களுக்கும் இந்தப் படத்தில் சிறப்பான இடம் கிடைத்திருக்கிறது.

‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனுஷ் கதாநாயகியை ஜாக்கி சானுடன் காணத் தமிழ் ரசிகர்களும் தயாராகிவிட்டார்கள். ‘சந்திரமுகி’, ‘கத்தி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்த சோனு சூட், இந்தப் படத்தில் ஜாக்கி சான் புதையலைக் கண்டுபிடிக்க உதவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு மேலும் பல இந்திய நட்சத்திரங்களும் ‘குங்ஃபூ யோகா’வில் பங்கேற்றிருக்கிறார்கள்.

படத்தைப் பிரபல சீன இயக்குநர் ஸ்டேன்லி டோங் இயக்கியுள்ளார். மாண்டரின், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் சுமார் 65 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு, வரும் ஜனவரி 28-ம் தேதி சீனா, இந்தியா உட்பட உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆனால் அதற்கு முன் டிசம்பர் 30-ல் ‘ரயில்ரோடு டைகர்ஸ்’ என்ற ஜாக்கி சானின் மற்றொரு அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் முந்திக்கொண்டு வெளியாகிறது. இப்படி அடுத்தடுத்து ஜாக்கியின் இரண்டு படங்கள் வெளியாவதால், இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் பிரபலப்படுத்தி வருகிறார்கள். இரண்டு படங்களுக்கும் ஒரே போஸ்டர் போட்டு அசத்தியுமிருக்கிறார்கள். அதைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in