

நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டும் என்று இல்லாமல் முன்பின் அறிமுகமில்லாத சக மனிதர்கள் என்று பார்ப்பவர்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட புதிய ஆண்டில் நுழைந்திருக்கிறோம்.
ஏற்கெனவே மறக்க முடியாத திரை இசை தொடரில் புது வருட பாடல் பற்றி எழுதிவிட்டேன். ஆகவே இந்த புதிய ஆண்டுக்கு ஒரு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை திரை இசைக்கடலில் இருந்து தேடி எடுத்து பதிவிடலாம் என்று முடிவெடுத்தேன். ஆம். இதுவும் ஒரு பிறந்த நாள் தானே? புதிதாக ஒரு வருடமே அல்லவா பிறந்திருக்கிறது.
திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனின் இனிய இசையில் கவிஞர் வாலியின் பாடல் தான் இந்த வாரம் நாம் காணவிருக்கும் இனிய வாழ்த்துப்பாடல்.
1967ஆம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வெளிவந்த படம் தான் இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திரைக்கதை, வசனம், எழுதி இயக்கிய 'பேசும் தெய்வம்'.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.வி.ரங்காராவ், மலையாள நடிகர் சத்யன், சௌகார் ஜானகி ஆகியோரின் தலை சிறந்த நடிப்பில் வெளிவந்த படம் இது.
'ஒரு நல்ல படம் பார்த்தோம் என்று திருப்தி பட்டுக்கொள்ளும்படி அமைந்திருக்கிறது பேசும் தெய்வம்' என்று கல்கி பத்திரிகை பாராட்டி இருந்த படம்
இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு வாழ்த்துப் பாடல் தான் இந்த வாரம் திரை இசைக்கடலில் விளைந்த நல்முத்துப் பாடல்.
கதைப்படி திருமணமாகி குழந்தைப்பேறுக்காக ஏங்கித் தவித்துத் தவமாய்த் தவமிருந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள் கதாநாயகி.
அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவில் பாடப்படும் பாடல் இது. இந்தப் பாடலை ஹரி காம்போதி ராகத்தின் அடிப்படையில் அமைத்து சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, எல்.ஆர். ஈஸ்வரி, எஸ். சரளா ஆகியோரைச் சிறப்பாக பாட வைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
பாடலிலேயே காட்சி அமைப்பையும் சம்பந்தப்படுத்தி கவிஞர் வாலி அவர்கள் அற்புதமாக பாடலை புனைந்திருக்கின்றார். மிகவும் பழமையான வேதம் என்று கொண்டாடப்படும் வேதமான ரிக் வேதத்தில் ஆசி கூறி வாழ்த்தும் வாசகம் ‘ஸதமானம் பவதி ஸதாயுஸ்’ என்று தொடங்குகிறது. ‘நீடூழி நூறாண்டு வாழ்வீர்களாக’ என்பது இதன் பொருள்.
நூறாண்டு காலம் எப்படி வாழவேண்டும்?
அதை அடுத்த வரியாகச் சொல்கிறது ரிக் வேதம். இந்திரியங்கள் அனைத்தும் நல்லபடியாக இயங்கும் வகையில் - அதாவது எந்த நோய்க்கும் ஆட்படாமல் திடகாத்திரமாக வாழவேண்டும் என்றும் சொல்கிறது ரிக்வேதம்.
'புருஷஷ் ஸதேந்த்ர்ய ஆயுஷ் ஷேமேந்த்ர்ய ப்ரதி திஷ்டதி.'
இப்படி பூரண ஆயுள், பரிபூரண ஆரோக்கியம் இரண்டையும் முதலிடத்தில் வைத்துத் தொடங்கும் ரிக் வேதத்தின் இந்த ஆசி கூறும் வசனத்தை நச்சென்று மிகவும் எளிமையாக பல்லவியின் தொடக்கச் சொற்களாக வைத்து பாடலைத் தொடங்குகிறார் கவிஞர் வாலி.
'நூறாண்டு காலம் வாழ்க.
நோய் நொடி இல்லாமல் வளர்க'
அவ்வளவுதான். ரிக் வேதம் சொல்லும் ஆசீர் வசனம் ரத்தினச் சுருக்கமாக இந்த இரண்டே வரிகளில் வந்து விழுந்து விட்டது. எப்பொழுதுமே பாடல் சம்பந்தப்பட்ட வகையில் இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணனைப் பொறுத்தவரையில் எடுத்த எடுப்பிலேயே மனதைக் கவர்ந்து விடவேண்டும். அப்படி கவிஞர் தரும் முதல் பல்லவி பிடித்துப்போய்விட்டால் அவ்வளவுதான். ‘இதை விட சிறப்பாக இன்னொரு பல்லவி தருகிறேன்’ என்று பாடலாசிரியரே சொன்னால்கூட அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
'எனக்கு வேணுங்கிறதைக் கொடுத்துட்டே.. இது போதும். இதுக்கு மேலே எதாவது சொல்லணும்னா சுவற்றைப் பார்த்துச் சொல்லிக்க' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார் அவர். அந்த வகையில் கே.எஸ்.ஜி. அவர்களுக்கு தேவையான வாழ்த்தை முதல் இரண்டு வரிகளிலேயே ரிக் வேத மூலத்தை வைத்து எளிமையாகக் கொடுத்திருக்கிறார் கவிஞர் வாலி. சரி.. நூறாண்டு நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்தியாகி விட்டது.
அந்த வாழ்க்கை எப்படி அமைய வேண்டும்?
இதோ இரண்டு உவமைகள் மூலம் அடுத்த இரண்டு வரிகளில் சொல்கிறார் வாலி.
'ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே .. நூறாண்டு காலம் வாழ்க.' –
என்று வாழ்த்துகிறார் வாலி.
மன்னர் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைத்தான் ஆள முடியும். ஆனால் புலவர்கள் கைக்கொண்ட தமிழ் மொழியோ உலகத்தையே அதுவும் உலகம் உள்ள அளவும் ஆளும் வல்லமை வாய்ந்தது. அந்தத் தமிழ் மொழியைப்போல உலகம் உள்ள அளவும் நீடித்திருக்கும் பெரும்புகழோடு நீ வாழவேண்டும் என்று குழந்தையை வாழ்த்துகிறார் கவிஞர் வாலி.
சாதாரண ஒரு வாழ்த்தில் கூட தமிழ் மொழியின் சிறப்பை எளிமையான ஒற்றை வரியில் சொல்லி வியக்க வைக்கிறார் கவிஞர் வாலி.
தொடரும் விறுவிறுப்பான இணைப்பிசையோடு நம்மை அப்படியே கட்டிப்போடுகிறார் திரை இசைத் திலகம்.
இந்தப் பாடலுக்குத் திரை இசைத் திலகம் அமைத்திருக்கும் (Interlude) இணைப்பிசையைப் பற்றிக் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆகவேண்டும்.
விறுவிறுப்பான வயலின்களின் வீச்சு ஆரோகணத்தில் மந்தர ஸ்தாயி, மத்யம ஸ்தாயி, உச்ச ஸ்தாயி என்று ஸ்தாயிக்கு ஒன்றாக மூன்று ஆவர்த்தங்கள். ஒவ்வொரு ஆவர்த்தத்தின் முடிவிலும் முத்தாய்ப்பாக வரும் பியானோ இசையும் மூன்று ஸ்தாயிகளிலும் அதே ஆரோகணத்தில் பயணித்து உச்சத்தை எட்டி நிற்க..
நான்காவது ஆவர்த்தத்தில் வயலின்களின் விறுவிறுப்பான வீச்சு சூழல் பந்து வீச்சைப்போல வேகமாகச் சுழன்று கொண்டே அவரோகணத்தில் உச்சத்தில் இருந்து கீழே இறங்கி முடிவடையும் போது கிட்டாரின் மீட்டலோடு முடிவது பிரமிக்க வைக்கிறது.
பியானோவின் மீட்டல் உச்சத்தில் நிற்கும் இடத்தில் வயலின்களின் சுழற்சி மேலிருந்து கீழாக வருவது என்பது லேசான ஒன்றல்ல.
கொஞ்சமே கொஞ்சம் பியானோவுக்கான chord arrangement பிசகினால் கூட பாடலின் அழகே கெட்டுவிடும். கம்பிமேல் நடப்பது போன்ற இந்த அமைப்பை சர்வ சாதாரணமாக அமைக்க கே.வி.மகாதேவனுக்கு உறுதுணையாக இருந்த உதவியாளர் திரு. டி.கே. புகழேந்தி அவர்களின் உழைப்பும் கூர்நோக்கும் பிரமிக்க வைக்கிறது.
தொடர்ந்து வரும் சரணங்களில் உவமைகளாக அடுக்கிக்கொண்டே போகிறார் கவிஞர் வாலி.
குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கும் பிறை நிலவைப்போல, குவியாமல் மலர்ந்த நிலையில் இருக்கும் அல்லி மலர் போல, குறைந்தே போகாமல் வளர்ந்துகொண்டே இருக்கும் செல்வம் போல, வற்றாத ஜீவநதி போல நீ வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார் கவிஞர் வாலி.
‘குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவ நிதியாக .. குன்றாத நவ நிதியாக
துள்ளிக் குதித்தோடும் ஜீவநதியாக
நீ வாழ்க நீ வாழ்க நீ வாழ்க...’
தொடரும் இறுதி சரணத்தை கதாநாயகியின் நிலைமைக்குப் பொருந்தும்படி அமைத்திருப்பது கதையை எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டு ஒரு கவிஞர் பாடல் எழுதவேண்டும் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு.
அதே நேரம் தனது கவித்துவத்தைக் காட்ட கரடு முரடான இலக்கிய நயங்களை புகுத்தி எழுதாமல் எளிமையான வார்த்தைப் பிரயோகங்களை கையாண்டு எழுதி இருக்கிறார் கவிஞர் வாலி.
பெயர் சூட்டு விழாவுக்கான குழந்தை திருமணமாகி ஆண்டுகள் சென்று தவமாக தவமிருந்து ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்கித் தவிர்ந்து பெற்ற குழந்தை அது.
ஆகவே இப்படி எழுதுகிறார் கவிஞர் வாலி.
(அதுவரை)
‘விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக’
வந்த மகன் இவன். இவன் வந்ததால் அந்நாள் வரை மலடி என்று அவள் சுமந்து வந்த பெயரும் பொய்யாகப் போனது.
'மலடென்ற பெயரும் பொய்யாக
வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
நீ வாழ்க நீ வாழ்க நீ வாழ்க’
என்று இல்பொருளுவமை அணி நயத்துடன் அந்தத் தாயின் மனநிலையில் இருந்து வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார் கவிஞர் வாலி.
படம் வந்த புதிதில் இந்தப் பாடல் ஒலிக்காத திருமண வீடுகளோ, பிறந்த நாள் விழாக்களோ இல்லை.
கொரானாவின் புதிய அலை அச்சுறுத்தலோடு பிறக்கும் இந்தப் புத்தாண்டில் நாம் அனைவரும் நூறாண்டு காலம், நோய்நொடி இல்லாமல் வாழ இந்த மங்கல வாழ்த்துப்பாடல் நேர்மறை எண்ண அலைகளை நம் இல்லம் தோறும் கொண்டு வந்து சேர்க்கும் என்பது உறுதி.