

‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் சண்டைக் காட்சியில் நாசர் முகத் தில் பிரபு குத்தும்போது சரியான டைமிங்கில் நாசர் திரும்பாததால் அவரது மூக்கில் அடிபட்டு ரத்தம் வடிந்தது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விஜயா மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றோம். மருத்துவர்கள், ’சிறிய காயம்தான். ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஒரு நாள் முழுக்க ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்!’ என்று கூறி நாசருக்கு சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவர் எங்களிடம், ’படப்பிடிப்பை தொடர்வோம்!’ என்றார். ‘இன்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் காட்சியை நாளை எடுத்துக் கொள்வோம்!’ என்று கூறி அடுத்த நாள் சண்டைக் காட்சியை டைமிங்கில் எடுத்து முடித்தோம்.
வில்லனாக அன்று நடித்த நாசர் இன்றைக்கு பலவிதமான கதாபாத்திரத் தில் சிறந்த குணச்சித்திர நடிகராகப் பயணித்து வருகிறார். அவரது நடிப்பில் ‘ஓவர் ஆக்டிங்’ என்பதே பார்க்க முடி யாது. கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ? அதை இயற்கை யாக வெளிப்படுத்தக் கூடியவர். உலக நாயகன் கமல்ஹாசனுக்குப் பிடித்த நடிகர். கமல் வித்தியாசமான முயற்சியில் இறங்கும் படங்களில் எல்லாம் நாசரும் இருப்பார். நாசரின் திரைப் பயணத்துக்கு மிகவும் துணையாக இருப்பவர், அவரது மனைவி கமீலா நாசர்.
ஏவி.எம் நிறுவனத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கால்ஷீட் இருந்தது. எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தைத்தான் கொடுக்க வேண் டும் என்பதில் ஏவி.எம் நிறுவனம் தீர்மான மாக இருக்கும். படத்தின் டிஸ்கஷனுக்கு முன், ‘என்ன கதை பண்ணலாம்? என்பதற்கே ஒரு டிஸ்கஷன் நடக்கும். அப்படி ஒரு விவாதம் நடந்தபோது ஏவி.எம்.சரவணன் சார் அவர்கள், ‘‘என் மனசுல ஒரு அபிப்ராயம் இருக்கு. சொல் லட்டுமா?’’ என்றார். ‘‘என்ன சார்.. சொல் லுங்க?’’ என்று ஆர்வமாக கேட்டோம். அதுக்கு அவர், ‘‘ரஜினி மீது தமிழ்நாட்டு குழந்தைகளுக்கெல்லாம் அளவற்ற பாசம் இருக்கு. குழந்தைகளை சந்தோஷப்படுத்துற மாதிரி ஒரு படம் எடுக்கலாம். படத்தில் ரஜினியோடு குழந்தைகளையும் நடிக்க வைக்கலாம். அப்படி செய்தால் நிறைய குழந்தைகள் படம் பார்க்க வருவார்கள். குழந்தைகள் வந்தால் உடன் அவர்களுடைய அம்மாக் களும் வருவார்கள். குழந்தைகள், அம்மாக்கள் வந்தால் நிச்சயம் அப்பாக் களும் தியேட்டருக்கு வருவார்கள்!’’ என்றார்.
இந்த யோசனை எங்கள் எல்லோருக் குமே பிடித்திருந்தது. அப்போது எங்களுடன் இருந்த பஞ்சு அருணாசலம் அவர்கள், ‘‘கதை தயார் செய்ய நான் கொஞ்சம் டைம் எடுத்துக்கிறேன்!’’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். பஞ்சு அவர்கள் எப்போதுமே என்ன களம் என்று முடிவாகிவிட்டால் ஒரு வாரத்துக்குள் படத்தோட சப்ஜெக்ட் என்ன என் பதை சொல்லிவிடுவார். குழந்தை களையும், ரஜினியையும் இணைத்து எடுக்க திட்டமிட்ட அந்த கதையை ரஜினியிடம் போய் சொன்னோம். அவரும், ‘‘நல்லா இருக்கே. செய்வோம் சார்!’’ என்றார். அப்படி உருவான படம்தான், ‘ராஜா சின்ன ரோஜா’
படத்தில் ரஜினி கிராமவாசி. அதுவும் கலை உணர்வுள்ள கிராமவாசி. அந்த ஊரில் கூத்து நிகழ்ச்சி நடக்கும். ரஜினி அந்த கூத்தில் ‘கள்ளப் பார்ட்’ நடனம் ஆடி பெயர் வாங்குவார். ‘இவ்வளவு நல்லா நடனம் ஆடுறியே!... நீ மட்டும் பட்டணத்துக்கு போனால் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் மாதிரி பெரிய நடிகனா வருவே’’ என்று ஊர் மக்கள் ரஜினிக்கு நடிக்கும் ஆசையைத் திணிப்பார்கள்.
அதை கேட்டதும் ரஜினி, ஊரில் உள்ள டைலரிடம் சென்று ‘‘பேண்ட், ஷர்ட் … தைக்கணும்’’ என்று சொல்வார். டைலரும் அப்படி, இப்படின்னு வேடிக் கையாக அளவெடுத்து பயங்கர லூஸா பேண்ட், ஷர்ட் தைத்து கொடுப் பார். அதைப் போட்டுக்கிட்டு பட்டணத் துக்குப் புறப்படுவார் ரஜினி. அந்த டைலர் கதாபாத்திரத்தில் நடித்தவர், எங்கள் யூனிட் மேக்கப் மேன் முத்தப்பா. அவர் நடித்தால் தனக்கு ராசி என்று, தான் நடிக்கும் படங்களில் எப்படியும் ஒரு கதாபாத்திரம் வாங்கிக் கொடுத்துவிடுவார், ரஜினி.
அப்படி கிராமத்தில் இருந்து சென் னைக்கு வரும் நாயகன் ரஜினிக்கு சினிமாவில் சேரணும்னு சொன்னதும் வாடகைக்கு வீடு கிடைக்காது. சினிமாக்காரர்களுக்கு வீடு கிடைக்காது, திருமணத்துக்கு பெண் கிடைக்காது. பயங்கர தேடலுக்குப் பிறகு நடிகர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு கொடுக்கும் ஜெய்கணேஷை சந்திப்பார். அந்த ஸ்டார் ஹவுஸில் வாடகைக்கு தங்குவார் ரஜினி. ஜெய்கணேஷின் மகள் கவுதமி. சினிமா என்றால் கவுதமிக்கு அப்படி ஒரு வெறி. ரஜினியின் சினிமா ஆசையை கேட்டதும் கவுதமிக்கு அவர் மீது காதல் வரும்.
அந்தக் காதல் சூழலுக்கு ஒரு பாடல். ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்!’ என்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய அந்தப் பாடலின் பல்லவியை ரஜினி கேட்டதும், ‘‘என்ன சார் என்னையே நான் பெருமையா சொல்ற மாதிரி இருக்கே!’’ என்றார். ‘‘இல்லை ரஜினி. நாயகி கற்பனையில் உன்னை நினைத்து பாடுற மாதிரி அமையும் பாட்டு இது!’’ என்று அவரிடம் விஷயத்தை சொல்லி சம்மதிக்க வைத்தேன்.
அந்தப் பாடலில் புதிதாக ஏதாவது செய்யலாம் என்று என் மனதில் தோன்றியது. அப்படி என்ன செய்தோம்? எப்படிச் செய்தோம் என்பதை வரும் வாரம் சொல்கிறேனே.
என்னை இயக்கச் சொன்ன அம்மையார்!
சாதனை செய்து சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்ட மதிப்புக்குரிய ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இயற்கை எய்தியதை எண்ணி அழுதுகொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களோடு சேர்ந்து என் கண்ணீரையும் காணிக்கையாக்குகிறேன்!
ஏவி.எம். நிறுவனமும், ஜே.ஆர்.மூவிஸும் தயாரித்து என் குரு ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய படம் ‘எங்க மாமா’. அண் ணன் சிவாஜி அவர்களும், ஜெயலலிதா அம்மையாரும் நடித் தார்கள். அப்படத்தில் உதவி இயக்குநராக நான் பணிபுரிந் தேன். அம்மையார் ஒரே ரிகர்சல், ஒரே டேக்கில் ஓ.கே செய்து விடுவார். படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் தொடர்ந்து புத்தகம் படிப்பார். டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்களும் புத்தகப் பிரியர் என்பதால், இருவரும் புத்தகங்களைப் பரிமாறிக்கொள் வார்கள். படித்ததினாலேயே இருவரும் மேதையானார்கள்!
அம்மையார் நடிப்பதற்காக வி.சி.குகநாதன் ஒரு கதை யைச் சொன்னார். அதில் நடிக்க ஒப்புகொண்ட அம்மையார் ‘‘அந்தப் படத்தை எஸ்பி.முத்துராமனை இயக்கச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நான் நடித்த ‘எங்க மாமா’படத்தில் அவர் உதவி இயக்குநராக பணியாற்றியதை பார்த்திருக்கிறேன். அவரையே டைரக்ட் செய்யச் சொல்லுங்கள்’’ என்று கூறினார். அந்தப் படம் ‘அன்புத் தங்கை’. அந்த வாய்ப்பை எனக்கு வழங்கியவர் அம்மையார் அவர்கள்தான். அது எனக்குக் கிடைத்த பெருமை. அந்தப் படத்தில் தன் நடிப்பாலும், நட னத்தாலும் ஜெயலலிதா அவர் கள் எல்லோருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தார்கள்.
தஞ்சாவூரில் அம்மையார் நடத்திய உலக தமிழர் மாநாட் டுக்காக தமிழ் இலக்கியங் களில் இருந்து ஐந்து சம்பவங்களை ஐந்து படங்களாக ஐந்து இயக்குநர்கள் இயக்கினார்கள். அந்தப் பணிகளை ஒருங் கிணைக்க ஒரு குழுவை உருவாக்கினார்கள். அதில் ஏவி.எம். சரவணன் சார், ரமேஷ் பிரசாத் ஆகியோரோடு நானும் இருந்தேன். அந்தப் படங்கள் இலக்கியச் சோலை என்ற பெய ரில் மாநாட்டில் வெளியிடப்பட்டது. மாநாட்டுக்கு எங்களை அழைத்து விருது கொடுத்து பாராட்டினார்கள். ‘ஒரு பெண் ணால் முடியுமா?’ என்று கேட்பவர்களுக்கு ‘என்னால் முடி யும்’ என்று நிரூபித்து காட்டியவர். அவர் இன்று நம்மிடம் இல்லை. ஆனாலும் அவருடைய சாதனைகள் சரித்திரமாகத் தொடரும். அதனை பாடமாக எடுத்துக்கொண்டு அவரைப் போல் சாதனைகள் படைக்க பெண்கள் முயற்சிக்க வேண்டும்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு!
- இன்னும் படம் பார்ப்போம்… | படங்கள் உதவி: ஞானம்