

“அனைத்து மனிதர்களுமே ஒரு கட்டத்தில் அன்பானவர்களாகவும், ஒரு கட்டத்தில் நான் எடுத்த முடிவு சரி என அசராதவர்களாகவும், ஒரு விஷயத்தில் நான் செய்வதுதான் சரி என அடங்காதவர்களாகவும் இருப்பார்கள். இதை வைத்துக் கதாபாத்திரங்களாகப் பிரித்து உருவாக்கியதுதான் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'” என்று பேசத் தொடங்கினார் தற்போது சிம்புவை இயக்கிவரும் ஆதிக் ரவிச்சந்திரன்.
சிம்புவின் மூன்று கதாபாத்திரங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...
1980-களில் வருவது போன்று மதுரை மைக்கேல் கதாபாத்திரத்தை வடிவமைத்தேன். அந்தக் காலகட்டத்தில் வரும் கேங்கஸ்டராக நடித்திருக்கிறார். அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தைப் பொறுத்தவரை மதுரை மைக்கேல் கதாபாத்திரத்துக்கு அப்படியே நேர்மறையானவர். கதாபாத்திர வடிவமைப்பு, உடல் அசைவுகள் என அனைத்து விஷயங்களிலும் இந்தப் பாத்திரத்துக்காக சிம்பு வித்தியாசப்படுத்தியிருக்கிறார். அஸ்வின் ரொம்ப அதிகமாக பேசாமல், பொறுமையாக விஷயங்களைக் கையாள்வார்.
முற்றிலும் புதுமையானது மூன்றாவது கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரம் திரையில் வரும்போதெல்லாம் ஒரு அழகான பூனையைக் கையில் வைத்திருக்கும். ரொம்ப சாந்தமாக இருப்பவர், யாருக்குமே கெடுதல் நினைக்காதவர். அந்தக் கதாபாத்திரத்தை எப்போது இயக்குவோம் என்ற ஆவல் எனக்கே அதிகமாக இருக்கிறது. அந்த அளவுக்கு சிம்புவுக்குச் சவாலாக இருக்கப் போகிறது. சரியான நேரத்துக்கு வந்து அன்றைக்கான காட்சிகள் முழுவதையும் படப்பிடிப்பு நேரம் முடிவதற்குள் ஒரே டேக்கில் செய்து முடித்துக் கொடுத்துவிடுகிறார் சிம்பு. எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. அதையும் தாண்டி இக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்துக்குக் கிடைத்த விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொண்டது என்ன?
நான் நினைத்ததை விட குறைந்த அளவுக்குத்தான் விமர்சனத்தில் திட்டியிருந்தார்கள். ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' மாதிரியான கதையை முதல் படமாக எடுக்கும்போதே, வெளியீட்டுக்குப் பிறகு எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால், விமர்சனத்தில் நான் எதிர்பார்த்த அளவுக்கு யாருமே திட்டவில்லை. ஒருவேளை முதல் பட இயக்குநர் என்று மன்னித்துவிட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன். ஆனால், எனது அடுத்தடுத்த படங்களைப் பார்த்துவிட்டு என்னைப்பற்றிய முடிவுக்கு வாருங்கள்.
முதல் படத்தில் மிகவும் குறைந்த அளவே கதாபாத்திரங்கள். ஆனால், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் அதிகக் கதாபாத்திரங்கள். படப்பிடிப்பு கடினமாக இருந்ததா?
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' கதையில் ஒரு பயணம் இருக்கிறது. ஒரு சிம்புவோடு இருக்கும் கதாபாத்திரங்களுக்கும் ஏனைய சிம்பு பாத்திரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. ஒரு கதாபாத்திரத்தைப் படம் முழுவதும் வைத்துக்கொள்வது எளிது. ஆனால், இதில் ஒரு கதாபாத்திரத்தின் கதை முடியும்போது, சுற்றி இருக்கும் கதாபாத்திரங்களின் பங்கும் முடிந்துவிடும். அந்த விஷயத்தில் கஷ்டப்பட்டேன் என்றாலும் அனைவருமே தேர்ந்த நடிகர்கள் என்பதால், இதுதான் தேவை என்றவுடனே நடித்து என்னை அசரடித்துவிட்டார்கள்.
இரண்டு படங்களிலுமே உங்களது அப்பாதான் உங்களுக்கு முதல் உதவி இயக்குநர் என்று தெரியும். அவருடைய பின்னணி என்ன?
அனைவருமே வெற்றியாளர்களின் பெயர்களைச் சொல்லி, இவர்களால்தான் நான் சினிமாவுக்கு வந்தேன் என்பார்கள். ஆனால், எனக்கு எங்கப்பாதான். பிறந்ததிலிருந்தே சினிமாவுக்கு வர வேண்டும் என்ற வெறி எல்லாம் எனக்குத் துளியும் கிடையாது. எங்கப்பா என்ன வேலை செய்கிறார் என்று எங்கம்மா எங்களிடம் சொல்லாமல்தான் வளர்த்தார்கள். விவரம் தெரிந்தவுடன்தான் அப்பா சினிமாவில் இருக்கிறார் என்று தெரியும். வீட்டு வாடகை, என்னையும் தம்பியும் படிக்க வைக்க பணம், வீட்டுச் செலவு என அனைத்தையும் கடந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம்.
தினமும் காலையில் ஒரு கதாபாத்திரம் குளித்துச் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றுவிட்டு, இரவு சோகமாக வரும். இதைத் தினமும் பார்க்கும்போது எவ்வளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பேன். ஏனென்றால் அவர் சினிமாவில் தினமும் தோல்வியை சந்திக்கிறார். அது என்னை மிகவும் கோபமாக்கியது. கல்லூரி முடிந்தவுடன், என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ என்றார்கள். கல்லூரி முடித்தவுடன், “இவ்வளவு வருஷமா ஒருத்தனை அடிச்சீங்க இல்ல... இதோ வர்றேன்” என்ற எண்ணத்தில்தான் சினிமாவுக்கு வந்தேன். எங்கப்பா ஒரு வெற்றி பெற்ற இயக்குநராக இருந்திருந்தால், எனக்கு சினிமாவுக்கு வரத் தோன்றியிருக்காது. எங்கப்பா வைத்திருக்கும் கதையையெல்லாம் பார்க்கும்போது, நானெல்லாம் ஒன்றுமே இல்லை.
எங்கப்பாவுடன் கதை விவாதத்துக்கெல்லாம் போயிருக்கிறேன். அப்போது கதை என்றால் இப்படி இருக்க வேண்டும், திரைக்கதை என்றால் இப்படி என நிறைய விஷயம் பேசுவார்கள். அப்படியா அதெல்லாம் உடைக்கிறேன் என்று இயக்கிய படம்தான் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா'. அனைத்து இலக்கணத்தையும் உடைத்து ‘ஏ' சான்றிதழ் படம்தான் முதல் படம் என்று இயக்கினேன். எங்கப்பாதான் எனக்குத் தூண்டுகோல், வேறு யாரும் காரணமல்ல. என் படத்தைப் பார்த்துவிட்டுப் பலர் காரசாரமாகத் திட்டினார்கள். ஆயினும் அது வெற்றி பெற்றது. என் அப்பாவுக்குக் கிடைத்த வலிதான் அப்படிப்பட்ட ஒரு படத்தை நான் எடுப்பதற்குக் காரணம் என்பதை நான் சொல்லியாக வேண்டும்.