டி.கே.ராமமூர்த்தி நூற்றாண்டு: மறக்க முடியாத மெல்லிசை மன்னர்!

டி.கே.ராமமூர்த்தி நூற்றாண்டு: மறக்க முடியாத மெல்லிசை மன்னர்!
Updated on
4 min read

ஐம்பதுகளின் முற்பாதி வரை தமிழ்த் திரையிசையில் கர்னாடக சங்கீதத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. பெரும்பாலான பாடல்கள் நாடக மேடையிலிருந்து வந்த ஜனரஞ்சகமான மெட்டுக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தன. அதேசமயம் இந்திப் படப் பாடல்களின் மெட்டுக்களைத் தழுவி இசையமைக்குமாறு இசையமைப்பாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இப்படியாக இரவல் மெட்டுக்களில் சிக்கிக்கொண்டு தமிழ்த் திரையிசை தத்தளித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு விடிவெள்ளியாக சி.ஆர். சுப்பராமன் தோன்றினார்.

கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை என்று அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த இசை மேதை யினால் திரையிசைப் புத்துணர்ச்சி பெற்றது. அவரது பாசறையில் பட்டை தீட்டப்பட்டு திரைவானில் ஒளிவீசிய பல வைரச் சுடர்களில் ஒருவர்தான் நூற்றாண்டு காணும் மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி. இருவரில் இளையவர் எம்.எஸ்.விஸ்வநாதன். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர், இசைப் பாரம்பரியத்தில் வந்தவர் டி.கே. ராமமூர்த்தி.

மலைக்கோட்டை கோவிந்தசாமி என்கிற புகழ்பெற்ற வயலின் ஜாம்பவானின் மகனாக 15.5.1922 அன்று பிறந்தார். அவரது தயார் நாகலட்சுமியும் ஒரு தேர்ந்த வயலின் கலைஞர்தான். பாட்டனார், தந்தை, தாய் ஆகிய மூவருமே வயலின் இசையில் விற்பன்னர்களாக இருந்ததால் பால்யம் முதலே அவர்களிடம் கர்னாடக இசையையும் வயலின் இசையையும் கற்றுத் தேர்ந்தார் ராமமூர்த்தி. தனது பன்னிரண்டாவது வயது முதல் தந்தையுடன் இணைந்து பல மேடைக் கச்சேரிகளில் வெகு இலகுவாக வாசிக்கத் தொடங்கினார்.

எச்.எம்.வி. இசைத்தட்டு நிறுவனத்தில் வயலின் வாசிக்கத் தந்தை சென்றிருந்தபோது அவருடன் போன ராமமூர்த்தி அங்கு துணை இசையமைப்பாளராக இருந்த சி.ஆர். சுப்பராமனின் கவனத்தை ஈர்த்தார். திறமை எங்கிருந்தாலும் அடையாளம் கண்டு அரவணைத்துக்கொள்ளும் சி.ஆர். சுப்பராமனுடன் இணைந்த ராமமூர்த்தி, ஒய்வு நேரத்தில் சுப்பராமன் பாடும் கச்சேரிகளில் அவருக்குப் பக்கவாத்தியமாக வயலின் வாசிக்கச் சென்றுவிடுவார்.

எச்.எம்.வி.யை விட்டு வெளியேறிய சி.ஆர். சுப்பராமன் பிரபல இசை அமைப்பாளராக வளர்ந்ததும் டி.கே. ராமமூர்த்தியை தனது வாத்தியக் குழுவில் இணைத்துக்கொண்டார்.இவருக்குப் பின்னர், கோவை ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்து சி.ஆர்.சுப்பராமனிடம் வந்து சேர்ந்தார் எம்.எஸ். விஸ்வநாதன். சீராகப் போய்க்கொண்டிருந்த இவ்விருவரின் தொடக்க கால திரையிசை வாழ்க்கையில் ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்து சேர்த்தது சி.ஆர். சுப்பராமனின் அகால மரணம்.

அவர் பாதியில் விட்டுச்சென்றிருந்த படங்களை முடித்துக் கொடுக்கவேண்டிய பொறுப்பு ராமமூர்த்தி - விஸ்வநாதன் இருவரிடமும் வந்து சேர்ந்தது. இவர்களை ‘விஸ்வநாதன்-ராமமூர்த்தி’யாக மாற்றியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். ‘நீ வயதில் சிறியவன்; ராமமூர்த்தி பெரியவர். அனுபவசாலி. உனக்குப் பின்னாலே இருந்து உன்னைத் தாங்கிப் பிடிச்சிக்குவாரு’ - பெயர் மாற்றத்துக்கு கலைவாணர் சொன்ன விளக்கம் இது. கலைவாணரின் ‘பணம்’ படம் தொடங்கி இருவரும் இணைந்த இசைப் பயணத்தில் காலத்தால் அழிக்கவே முடியாத எண்ணற்றப் பாடல்களைப் பொக்கிஷங்களாக கொடுத்துச் சென்றனர்.

தனித்தன்மையும் பிரிவும்: “அப்பாவோட தனித்தன்மையே வயலின் வாசிப்புதான். அது மட்டுமல்ல; அவர் ஒரு பரிபூரணவாதி. எதையும் அரைகுறையாகவோ, மேலோட்டமாகவோ செய்கிறதென்பது அவரிடம் அறவே இருந்ததில்லை.” என்கிறார் அவருடைய மகள் ஜமுனா சிவசங்கர். ராகத்தின் அடிப்படையான ஜீவன் கெட்டுவிடாமல் மேற்கத்திய இசைக் கலப்புடன், கிளாசிகல் மெல்லிசையாகப் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைத்த இவர்களது பாணி, திரையிசையில் புதிய வரலாறு படைத்தது.

கவியரசு கண்ணதாசனால் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்று பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்ட இவர்களது நெடிய பயணத்தில்தான் எத்தனை எத்தனை முத்தான பாடல்கள்! அறுபதுகள் முழுக்கத் திரையிசையை தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள் இருவரும். கதைப் படங்களின் பொற்காலமாக வர்ணிக்கப்படும் இக்காலகட்டத்தின் பாடல்களில் பெரும்பான்மையும் இவர்களுடைய படைப்புகளாகவே அமைந்தன. ஆனால்.. யார் கண் பட்டதோ..? சிறு பொறியாகத் தோன்றிய ‘ஈகோ’ பிரச்சினை பிறரால் பெரிதாக்கப்பட்டு இவர்களைப் பிரிவு நோக்கித் தள்ளிக்கொண்டு போய்விட்டது.

1965 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு தனித்தனியே இயங்கத் தொடங்கினர். பிரிவிலும் இருவரும் கண்ணியம் காத்தனர். ஒருவர் மீது மற்றவர் குற்றம் சொல்வதையோ, புழுதி வாரித் தூற்றுவதையோ.. இருவருமே செய்யவில்லை. ‘இத்தனை நாள் சேர்ந்து இயங்கினோம்; இனி அவரவர் தனிப் பாதையில் பயணிப்போம்.’ என்பது போலத்தான் இருந்தது அவர்களின் பிரிவு.

துடிப்பும் துள்ளலும் மிகுந்த இசை: தனிப் பாதையைத் தேர்ந்தெடுந்த பின்னர் ராமமூர்த்தி இசை அமைத்த முதல் படம் திருமலை - மகாலிங்கம் இயக்கத்தில் 1966இல் வெளியான ‘சாது மிரண்டால்’. அந்தப் படத்தில் ‘அருள்வாயே நீ அருள்வாயே’ என்ற ஆலங்குடி சோமு எழுதிய பாடலை சிந்துபைரவி ராகத்தில் மெட்டமைத்து டாக்டர். எம். பாலமுரளி கிருஷ்ணாவைப் பாடவைத்தார் டி.கே.ராமமூர்த்தி. தனது இசையில் ஹவாயியன் கிட்டாரைப் பயன்படுத்திய முதல் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்திதான்.

முக்தா பிலிம்ஸின் ’தேன்மழை’ படத்தில் இடம்பெற்ற சிந்துபைரவி ராகப் பாடலான ’நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல’ பாடலுக்கு ராமமூர்த்தி அமைத்திருந்த இசையும் பி. சுசீலாவின் குரலும் சந்தேகமில்லாமல் செந்தேன் மழைதான். இந்தக் கட்டுரைக்காக ராமமூர்த்தி அவர்கள் தனித்து இசை அமைத்த படங்களின் பாடல்களை ஆய்வு செய்தபோது.. அவரது திறமை பிரமிக்கவைத்தது. பொதுவாக டி.கே. ராமமூர்த்தி என்றாலே கர்னாடக இசையில் அவரது புலமை, வயலின் கருவியில் மேதமை ஆகியவை மட்டுமே பெரிதாகப் பேசப்படும். ஆனால்.. அனைத்து வாத்தியங்களையும் தேவைக்கேற்ப கச்சிதமாக கையாளுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

படத்தின் டைட்டில் இசையைக் கதையின் தன்மைக்கு ஏற்பக் கொடுத்து பார்வையாளர்களைத் தயார்படுத்திவிடுவார். அதேபோல வேகம் கூடிய இசையும் அவரது தனித்தன்மைதான். ‘காதல் ஜோதி’ படத்தில் ‘சாட்டை கையில் கொண்டு’ பாடலைக் கூறலாம். ஓடும் ரயிலை விரட்டுவது போன்ற வேகத்தில் மாட்டு வண்டியைக் கதாநாயகன் செலுத்துகிறான். அது ஒரு நாட்டுப்புறப் பாடல்.

அதைப் போலத் துரித கதியில் அமைந்த பாடல் வேறு எதையுமே குறிப்பிட முடியாது. ஒவ்வொரு முறை பல்லவியை முடிக்கும்போது வரும் வேகமான ரயிலின் கூவல், அதற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வயலின்களின் வீச்சுக்களும், சாட்டைப் பிரயோகமும் சீர்காழி கோவிந்தராஜன் ஒரே மூச்சில் பாடும் வண்ணமாக அமைந்த சங்கதிகளும் சேர்ந்து ஒரு விரைவு ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை இப்பாடல் கொடுக்கிறது.

டி.கே. ராமமூர்த்தி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ராமண்ணாவின் படமான ‘நான்’. ‘ராஜா கண்ணு போகாதடி’ தெம்மாங்குப் பாடலை டி.எம். எஸ். பாடி இருக்கும் விதமும் பாடலை ராமமூர்த்தி அமைத்திருக்கும் வேகமும்.. அப்பப்பா.. இடையிசைகளில் விறுவிறுப்பு, உச்சஸ்தாயி பிரயோகங்கள், இதற்காக டி.எம்.எஸ்.ஸுக்கு அமைத்திருக்கும் சுருதி.. என எல்லா அம்சங்களுமே அதை மாபெரும் வெற்றிப் பாடலாக்கி விட்டன.

பிரசித்தி பெற்ற ‘அம்மனோ சாமியோ’ பாடலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். திரையரங்குகளில் பெண் ரசிகர்கள் பலரைச் சாமியாட வைத்த பாடல். ‘நீலகிரி எக்ஸ்பிரஸ்’ படத்தில் ‘திருத்தணி முருகா’ என்கிற சூலமங்கலம் ராஜலட்சுமி - பி. சுசீலா இணைந்து பாடும் நடனப் பாடலை சிந்துபைரவி ராகத்தைப் பயன்படுத்தி கர்னாடக இசைப் பாடலாகக் கொடுத்திருப்பார் டி.கே. ராமமூர்த்தி.

கண்ணாடி அல்ல; வைரம்: கலைஞரின் ‘மறக்க முடியுமா?’ படத்துக்கு இவர் கொடுத்த இசையை மறக்கவே முடியாது. ‘வசந்த காலம் வருமோ’ என்கிற பி.சுசீலா - கே.ஜே. ஜேசுதாஸ் பாடும் பாடலில் ‘எனையே தேடி..’ என்று சரணத்தை பி.சுசீலா முடிக்கும் இடத்தில் கொடுக்கும் சிறு ஆலாபனையும் அதைத் தொடரும் வீணை இசையும் மனதை அப்படியே மயக்கும். இந்தப் பாடலின் இடையிசையில் வரும் வயலின் பிரயோகங்களில் டி.கே. ராமமூர்த்தியின் தனித்த முத்திரைகள் குறிப்பிடப்பட வேண்டியவை.

‘சங்கமம்’ படத்தில் இடம்பெற்ற ‘தன்னந்தனியாக’ ‘ஒரு பாட்டுக்கு பல ராகம்’ ஆகிய பாடல்களில் ஜெமினி கணேசனுக்கு டி.எம்.எஸ்ஸை தனித்த குரலில் பாடவைத்திருப்பார் டி.கே. ராமமூர்த்தி. ‘சக்தி லீலை’ படத்தில் ‘மலர்கள் எங்கே’ பாடலை ஆனந்த பைரவி ராகத்தில் அமைத்தவர், இணைப்பிசையாக ‘பராத்பரா’ என்கிற பாபநாசம் சிவனின் வாசஸ்பதி ராகக் கீர்த்தனையை நாதஸ்வரத்தில் அமைத்து சரணத்துக்கு வரும்போது ஆனந்த பைரவிக்கு மாறும் அவரது லாகவம் வியக்க வைக்கும்.

இசையமைத்த படங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறாமல் போனதால் அளப்பரியத் திறமைசாலியாக இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டவர் டி.கே. ராமமூர்த்தி.அது அவர் குற்றம் அல்ல. வைரக்கல்லை அடையாளம் கண்டுகொள்ளாமல் போனால் அது கண்ணாடிக் கல்லாகி விடுமா என்ன? வைரம் என்றுமே வைரம் தானே. உன்னதமான இசையை நேசிக்கும் யாரும் டி.கே. ராமமூர்த்தி இசையமைத்த திரையிசைப் பாடல்களை ஒருமுறை கேட்டுப் பார்த்தால் அவர்களது மனங்களில் ஒரு கோஹினூர் வைரமாக பிரகாசிப்பார் இந்த மெல்லிசை மன்னர். - பி.ஜி.எஸ்.மணியன், pgs.melody@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in