இயக்குநரின் குரல்: கலாச்சார அதிர்ச்சியுடன் கிளைமாக்ஸ்!
ஒரே கதைக் களத்தில் மூன்றுவிதமான கதாபாத்திர பரிமாணங்களில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் ‘வி3’. அப்படத்தை எழுதி, இயக்கியுள்ள அமுதவாணனுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
‘வி3’ என்கிற தலைப்பின் விரிவாக்கம் என்ன? - வித்யா, விக்டிம், வெர்டிக்ட் ஆகிய மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்தின் சுருக்கமே ‘வி3’. திரைக்கதையில் கையாளப்பட்டுள்ள பிரச்சினையின் முக்கியத்துவம் கருதியும் பார்வையாளர்களின் கவன ஈர்ப்பைப் பெறவுமே இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையில் பெண்களே போராளிகளாக இருக்க வேண்டியிருப்பதால் இதை ஆண்களுக்கான பெண் மையக் படமாக உருவாக்கியிருக்கிறோம். ஆண்கள்தான் டார்கெட் ஆடியன்ஸ் என்றாலும் பெண்கள் அனைவருக்கும் இப்படம் பற்றித் தெரிய வரும்போது கட்டாயம் பார்க்க வந்துவிடுவார்கள்.
வரலட்சுமி சரத்குமார் சமீப காலமாக பல எதிர்மறை வேடங்களில் நடித்திருந்தார். இதில் எப்படி? - நிகழ்காலத்தில் ஒரு ‘ஸ்டேஷனரி ஷாப்’பில் விற்பனை மேற்பார்வை அதிகாரியாக இருப்பார். கடந்த காலத்தில் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்திருப்பார். இன்னொரு கால கட்டத்தில் மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக் குழு அதிகாரியாக வருவார். ‘இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர்’ படமாக உருவாக்கியிருக்கிறோம். மனித உரிமை ஆணையத்தின் அதிகாரமும் சக்தியும் என்ன என்பதை எடுத்துக்காட்டும் கதை இது.
கதைக் களம் எதைப் பற்றி.. சினிமாவுக்கான மொழிக்காக அளவான கற்பனை இருக்கும். மற்றபடி இது நம் பெண்கள் எதிர்கொண்ட, இன்னும் ஈரமும் வலியும் காயாத, அதைக் கடந்துபோக முடியாத, இந்தியாவில் சமீப ஆண்டுகளில் நடந்த கூட்டுப் பாலியல் வன்முறைச் சம்பவங்களில் கசப்பான உண்மைகளிலிருந்து எழுதப்பட்டத் திரைக்கதை. காஷ்மீர், உத்தரப் பிரதேசம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்களின் பிரதிபலிப்புதான் கதை.
இதில் விக்டிமாக கன்னட சினிமாவின் பிரபலக் கதாநாயகி பாவ்னா நடித்திருக்கிறார். ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடக்கிறது. அதன்பின்னர் ஐந்து இளைஞர்கள் ‘என்கவுண்டர்’ மூலம் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய பெற்றோர் ஒரு பக்கம் போராட, இன்னொரு பக்கம் மகளை இழந்த தந்தை, ‘தன் மகளுக்கு நடந்த துயரம், வேறொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது’ என்று களமிறங்குகிறார். இதில் வரலட்சுமியின் ஊடாட்டம் என்ன என்பது கதை.
தணிக்கையில் சிக்கல் வந்ததா? - ஆமாம்! கணக்கற்ற வெட்டுகளைப் பரிந்துரைத்தார்கள். ஆனால், எல்லா வெட்டுக்களுக்கும் அழுத்தமான தர்க்க நியாயங்களை ஊடக ஆதாரங்களுடன் சமர்ப்பித்தோம். இறுதியில் வெட்டுகள் இன்றி ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஒரு எதிர்பாராதத் தீர்வுடன் படத்தை முடித்திருக்கிறோம். அது பார்வையாளர்களுக்குக் கலாச்சார அதிர்ச்சியைக் கொடுக்கலாம்.
