திரைப் பார்வை: தங்கல் (இந்தி) - விளையாட்டு வீரனின் கனவு

திரைப் பார்வை: தங்கல் (இந்தி) - விளையாட்டு வீரனின் கனவு
Updated on
2 min read

பாலிவுட்டின் மூன்று கான்களில் ஆமிர் கானின் திரைப்படத்துக்கு எப்போதும் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். அர்த்தமுள்ள, முற்போக்கான படைப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆமிர் எடுத்துக்கொள்ளும் மெனக்கெடல்தான் அதற்குக் காரணம். அந்த வரிசையில், ‘பிகே’வுக்குப் பிறகு ஆமிரின் நடிப்பில் வெளியாகியிருக்கிறது ‘தங்கல்’ திரைப்படம். நித்தேஷ் திவாரி இயக்கியிருக்கும் இந்தப் படம் மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகாட்டின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது.

ஹரியாணா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் (ஆமிர் கான்). அவருடைய மனைவி தயா (சாக்ஷி தன்வர்). மஹாவீருக்கு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்பது கனவு. ஆனால், அவருக்கு அடுத்தடுத்துப் பெண்களே பிறப்பதால் அந்தக் கனவை ஒரங்கட்டிவைக்கிறார்.

ஆனால், தன்னுடைய சண்டையிடும் திறன் தன் மகள்கள் கீதாவுக்கும் (ஜாய்ரா வசீம் / ஃபாத்திமா சனா ஷேக்), பபிதாவுக்கும் (சுஹானி பட்நாகர் / சன்யா மல்ஹோத்ரா) இயல்பாக இருப்பதைத் தற்செயலாக உணரும் மஹாவீருக்கு மீண்டும் அந்தக் கனவின் மீதான நம்பிக்கைத் துளிர்விடுகிறது. கிராமத்தினரின் ஏளனப் பேச்சுகளையும் பார்வைகளையும் புறந்தள்ளி அவர் தன் மகள்களுக்கு மல்யுத்தப் பயிற்சி கொடுக்கிறார். மஹாவீரின் தங்கப் பதக்கக் கனவு அவருடைய மகள்களால் எப்படி நனவாகிறது என்பதுதான் ‘தங்கல்’.

விளையாட்டு வீரர் ஒருவரின் வாழ்க்கையை நேர்மையாகவும் எளிமையாகவும் பதிவுசெய்திருக்கிறது இந்தப் படம். இந்த நேர்மைக்காக இயக்குநர் நித்தேஷ் திவாரியைப் பாராட்டலாம். பெண் சிசுக் கொலைகளும், குழந்தைத் திருமணங்களும் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு மாநிலம் ஹரியாணா. அப்படிப்பட்ட பின்தங்கிய மாநிலத்தில் மஹாவீர் சிங் தன்னுடைய மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கியதன் பின்னணியை இந்தப் படம் அலசியிருக்கிறது. மஹாவீர் தன்னுடைய கனவை மகள்கள் மீது திணித்திருக்கிறார் என்ற பொதுவான ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

ஆனால், அவருடைய தரப்பை இந்தப் படத்தில் சில அழுத்தமான காட்சிகளில் நியாயப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். “பதினான்கு வயதாகிவிட்டால் பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்து கடமையை முடித்துவிட வேண்டும் என்று நினைக்கும் அப்பாக்கள்தான் இங்கு அதிகம். அவர்களுக்கு மத்தியில், உங்களுடைய அப்பா நீங்கள் சாதிக்க வேண்டுமென்று சிந்திப்பது எவ்வளவு பெரிய விஷயம்” என்று கீதா, பபிதாவிடம் அவர்களின் தோழி விவரிக்கும் காட்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அத்துடன், அப்பா-மகள், அக்கா-தங்கை என உறவுகளுக்குள் இருக்கும் ஆழமான உணர்வுகளை நுணுக்கமான காட்சிகளால் விளக்கியிருக்கிறார் இயக்குநர்.

அப்பா தங்களைக் கொடுமைப் படுத்துவதாக நினைக்கும் சிறுமிகள் மனம் மாறுவது நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேசியப் பயிற்சி மையத்துக்குப் போன பிறகு அப்பாவுடன் ஏற்படும் முரண்பாடுகளும் அவை தீரும் விதமும் நெகிழ்ச்சியும் யதார்த்தமும் கொண்ட காட்சிகளாக விரிகின்றன. தன் மகளுக்கு நேரடியாகப் பயிற்சியளிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட தந்தை அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதும் நன்கு காட்டப்படுகிறது. மல்யுத்தச் சண்டைப் பயிற்சிகளும் காட்சிகளும் நன்கு படமாக்கப்பட்டுள்ளன.

ஒரு தகப்பனின் கனவு நனவாகும் கதையைச் சொல்லும் காட்சிகளில் இருக்கும் யதார்த்தம், நேர்மை, சுவாரசியம் ஆகியவை நம்மைக் கவர்கின்றன. அப்பாவுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் மோதல், அப்பாவின் உணர்வை, தேவையை ஒரு கட்டத்தில் மகள் புரிந்துகொள்வது எனச் சில காட்சிகள் நெகிழவைக்கின்றன. ஸ்ரீ ராமின் ஒளிப்பதிவுயும், பிரீத்தமின் இசையமைப்பும் முக்கிய மான அம்சங்களாக இருக்கின்றன. ஆமிர் கான் எந்தவொரு காட்சியிலும் மிகை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மகள்களாக நடித்திருக்கும் ஃபாத்திமா, சன்யா இருவரும் படத்துக்குச் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். சிறுவயது கீதா பபிதாவாக வரும் ஜாய்ராவும், சுஹானியும், ஓம்காராக வரும் ரித்விக்கும் தங்களுடைய கவித்துவமான நடிப்பால் முதல் பாதி திரைப்படத்தை முழுமையாக ஆக்கிரமித்திருக்கின்றனர். இந்த அறிமுக நட்சத்திரங்களின் தேர்வு படத்தின் முக்கியமான பலம். படத்தின் சேது

பெண்களை மையமாகக் கொண்ட படம் என்பதால் பெண்ணிய அம்சங்களைச் செயற்கையாகத் திணிக்காமல் இருந்தது பெரிய ஆறுதல். விளையாட்டுக்கு ஆண்-பெண் வித்தியாசமெல்லாம் இல்லை. கடின உழைப்பும், மன உறுதியும் இருந்தால் எந்த விளையாட்டாக இருந்தாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது ‘தங்கல்’. சொல்லப்படாத உண்மைக் கதைகளைத் தேடி எடுத்துச் சுவையான படமாகத் தந்திருக்கும் ஆமிர் கானுக்கும் அவர் குழுவினருக்கும் ஒரு பூங்கொத்து.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in