சினிமா எடுத்துப் பார் 89: ‘என்னம்மா கண்ணு சவுக்கியமா?

சினிமா எடுத்துப் பார் 89: ‘என்னம்மா கண்ணு சவுக்கியமா?
Updated on
3 min read

‘ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் வந்தானாம்’ பாடல் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினியோடும், கவுதமியோடும் காட் டுக்கு வந்த குழந்தைகள், ‘மிருகங் கள் எங்கே? மிருகங்கள் எங்கே?’ என்று ஆர்வமாக கேட்க ஆரம்பித்தனர். ‘மிருகங்கள் எல்லாம் கார்ட்டூன்ல வரும்!’னு விளக்கம் கொடுத்தாலும் குழந்தைகளுக்கு புரியவில்லை. அவர் களுக்கு புரிந்தால்தானே பாடல் காட்சி நன்றாக அமையும் என்று நடன இயக்குநர் புலியூர் சரோஜாவை முயல் மாதிரி நடிக்க வைத்து குழந்தைகளுக்கு புரிய வைத்தோம்.

உதாரணமாக, ஒரு காட்சியில் ரஜினி காந்தும், கவுதமியும் இருப்பார்கள். முயல் இருக்காது. அந்த இடத்தில் கார்ட்டூனில் வரைந்த முயல், ரஜினிக்கு கைகொடுப்பதை ராம் மோகன் சேர்த்தார். அப்படித்தான் பாடல் முழுக்க கார்ட்டூன் வரும் இடங்களை நடிகர், நடிகைகளோடு இணைத்தோம். இந்த காட்சிகளுக்காக ராம் மோகன் கிட்டத்தட்ட 80 ஆயிரம் கார்டூன்களை வரைந்து எடுத்தார். அவரது உழைப்பு பெருமை படும்படியாக அமைந்தது.

சினிமாவில் ஏவி.எம் நிறுவனம் முன்னுதாரணமாக பல சாதனைகளை செய்திருக்கிறது. அந்த வகையில் நடிகர்களை யும், கார்ட்டூன்களையும் இணைத்து இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் பாடல் காட்சி இதுதான். கிராஃபிக்ஸ், மாடர்ன் தொழில்நுட்பம் என்று வளராத அந்த காலகட்டத்தில் மேனுவலாகவே ராம் மோகன் உதவி யோடு செய்திருக்கிறோம் என்பதை பெருமையோடு இங்கே சொல்லிக் கொள்கிறேன். இதில் ஒளிப்பதிவாளர் டி.எஸ்.விநாயகம் அவர்களுக்கும் பங்கு உண்டு.

ரகுவரன், தேங்காய் சீனிவாசன், கோவை சரளா மூவரும் சேர்ந்து மளிகை பொருள் வாங்குவதில் தொடங்கி பல ஏமாற்று வேலையிலும், தவறு செய்வதிலும் ஈடுபட்டு பணத்தை கொள்ளை அடிப்பார்கள். இதை ஒவ்வொன்றாக ரஜினி கண்டுபிடிப்பார். இந்த மாதிரி சூழ்நிலையில் ஒரு நாள், வீட்டில் யாரும் இல்லை என்று ராகவி தன்னோடு படிக்கும் சக மாணவர்களை அழைத்து வந்து டிரிங்ஸ் பார்ட்டி வைப்பார். ரஜினிகாந்த் இதைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டு, ‘பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை..!’ என்ற பாட்டை உருக்கத்தோடு பாடுவார். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாட்டு. மாணவ, மாணவிகளுக்கு நல்ல சிந்தனைகளை விதைக்கும் விதையாக இருந்தது. இன்றைய சூழலுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் குழந்தைகள் செய் யும் தவறுகள் ரவிச்சந்திரனுக்கு தெரியவரும். வீட்டில் வேலைக்காரனாக இருக்கும் ரஜினிகாந்த் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்தி வருகிறார், என்பதும் அவருக்குத் தெரியும். கடைசியில் நம் குழந்தைகளுக்கு சரியான காப்பாளர் ரஜினிதான் என்று அவரை நியமிப்பார். ரஜினிகாந்த் மூலம் நல்ல விஷயங்கள் குழந்தைகளுக்கு போய்ச் சேர்கிறது என்ற மகிழ்ச்சி யோடு படத்தை முடித்தோம். படம் வெள்ளிவிழா படமாக பெரிய வெற்றியைப் பெற்றது.

மல்லிகை பதிப்பகம் சங்கர் புதுமுகங் களை வைத்து ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ என்ற படத்தை தயாரித்தார். அதை நான் இயக்கினேன். அந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்களாக இருக்கட்டும் என்ற அவரது கோரிக் கையை ஏற்று அதற்கான தேர்வில் இறங்கினோம். அந்த புதுமுக தேர்வுக்கு வந்தவர்களில் ஒருவர் சத்யராஜ். அவரிடம், ‘ஏதாவது நடிச்சுக் காட்டுங்க?’ என்று கேட்டேன். அவர், ‘கட்டபொம்பன்’ படத்தில் வரும் அண்ணன் சிவாஜி கணேசனின் வசனத்தை பேசி நடித்தார்.

அப்போது நான், ‘நல்லா இருக்கு. ரொம்ப சந்தோஷம். இங்கே வரும் எல்லோரும் இந்தக் காட்சியையே நடித்துக் காட்டுறாங்க. அதுல அண்ண னோட சாயல்தான் தெரிகிறது. உங்க ளோட தனித்திறமை தெரியுற மாதிரி வேறெதாவது நடிச்சுக் காட்ட முடியுமா?’ன்னு கேட்டேன். அப்படியே நழுவி போய்விட்டார். அன்றைக்கு அப்படி நழுவிப் போன சத்யராஜ் இன்றைக்கு பல வித்தியாசமான கதா பாத்திரங்களை ஏற்று சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

என் இயக்கத்தில் ஆரம்ப நாட்களில் பல படங்களில் சின்னச் சின்ன ரோலில் நடித்தார். பாலசந்தர் சார் தயாரிப்பில் நான் இயக்கிய ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் கமலுக்கு வில்லனாக நடித் தார். அதேபோல ‘மிஸ்டர் பாரத்’ படத் தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்து அசத்தி னார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘என்னம்மா கண்ணு சவுக்கியமா?’ பாடல் ரஜினிக்கும், சத்யராஜுக்கும் நடிப்புக்கு சவாலாக அமைந்தது. போட்டி நடனம் போல், இது போட்டிப் பாட்டு!

‘உலகம் பிறந்தது எனக்காக’ படத்தில் இரு வேடங்களில் சத்யராஜ்.

சத்யராஜ் நடித்தப் படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படங்கள், பாரதிராஜா இயக்கிய ‘வேதம் புதிது’. இன்னொரு படம் ஞானராஜசேகரன் இயக்கிய ‘பெரியார்’. இரண்டு படங்களிலும் வித்தியாசமாக நடித்திருப்பார். அதிலும் பெரியாராக நடித்து தமிழகத்தின் சரித்திரத்தில் இடம்பெற்ற பெருமை அவருக்கு உண்டு.

பொருளாதாரரீதியாகவும், தொழில் ரீதியாகவும் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் தொய்வு ஏற்பட்டது. அந்த நாட்களில்கூட சத்யராஜ் தொடர்ந்து நாயகன், வில்லன், லொள்ளு செய்யும் கதாபாத்திரம் என்று பேதம் பார்க்காமல் நடித்துக்கொண்டிருந்தார். அதற்கு முக்கிய காரணம் அவர் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடித்ததுதான். அதன்மூலமாக தான் வளர்ந்ததோடு, தொழில் நுணுக்க கலைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அமையுமாறு சூழலை உருவாக்கினார். அவர் மூலம் நிறைய பேர் தயாரிப்பாளராக திரைத்துறைக்கு வந்தார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் அவரது செயலாளர் ராமநாதன் அவர்கள்.

அப்படிப்பட்ட திறமைசாலியான சத்யராஜை வைத்து ஏவி.எம் நிறுவனம் தயாரிப்பில் நான் இயக்கிய படம், ‘உலகம் பிறந்தது எனக்காக’. இதன் கதை வசனம் சித்ராலயா கோபு. நகைச்சுவை எழுத்தாளர். இயக்குநர் தரின் வலதுகரம். இப்படத்தில் சத்யராஜுக்கு இரண்டு கதாபாத்திரம். ஒன்று நல்லவர். இன்னொன்றில் தில்லு முல்லுக்காரராக வருவார். இரண்டு கதாபாத்திரங்களையுமே நல்ல முறை யில் நடித்து பெயர் வாங்கி னார். படத்தில் அவருக்கு இரண்டு ஜோடி. ஒருவர் கவுதமி. இன்னொருவர் ரூபிணி.

படத்துக்கு முக்கிய பங்களிப்பாளராக இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் இந்தப் படத்துக்கு பணியாற்றினார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குரு என்று சொல்லும் அளவுக்கு இசை யில் வல்லமை கொண்டவர். ஹிந்தி சினிமாவில் பிஸியாக இருந்த அவரை இந்தப் படத்துக்கு இசையமைக்க ஏற்பாடு செய்து கொடுத்தவர், பின்னணிப் பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம்.

மும்பையில் படு பிஸியாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இப்படத்துக்கான பாடல்களை மிகவும் சிறப்பாக அமைத்துக் கொடுத்தார், ஆர்.டி.பர்மன். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசைக்காக சென்றபோது அவர் மேலும் பிஸியாக இருந்தார். அப்போது அவர், ‘என்னோட பாணி என்னன்னு பாலுவுக்குத் தெரியும். அவரே ரீ ரெக்கார்டிங் செய்யட்டும்!’ என்றார். இப்படித்தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தப் படத் துக்கு பின்னணி இசையமைப்பாளராக ஆனார்.

எஸ்.பி.பி பாடுவதில் மட்டுமல்ல; இசையமைப்பதிலும் தன் திறமையை காட்டினார். ஒரே நேரத்தில் இந்தியா முழுக்க பறந்து பறந்து பாடல் பாடக் கூடியவர். காலையில் ஹைதராபாத் மதியம் பாம்பே, மாலையில் கேரளம் இரவு சென்னை என்று இந்தியா வின் ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டியவர். அவர் பாடிய பாடல்கள் உலகம் முழுவதும் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு புகழை யும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளாத பண்பாளர்.

ஏவி.எம்.சரவணன் சார் அவர் கள், சத்யராஜிடம், ‘படத்தை ஜனவரி யில தொடங்குகிறோம். வர்ற ஏப்ரல்ல ரிலீஸ் செய்யலாம்னு நினைச்சிருக் கோம். அதுக்குள்ள முடிச்சிக் கொடுத் துடுங்க?’ன்னு கேட்டார். அதற்கு சத்யராஜ், ‘நிறைய படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன்.ரொம்ப டைட்டா இருக்கு சார்!’னு தயங்கினார். அதற்கு சரவணன் சார் என்ன சொன்னார்?

- இன்னும் படம் பார்ப்போம். | படம் உதவி: ஞானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in