

தமிழக அரசின் நிதியுதவியுடன் தமிழ்த் திரையுலகின் முக்கியச் சங்கங்கள் இணைந்து கொள்ள, தி இந்து தமிழ், ஆங்கிலம் நாளிதழ்களின் ஊடகப் பங்கேற்புடன் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா ஆண்டுதோறும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதை ஏற்பாடு செய்துவரும் ‘இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்’, 14-வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவை டிசம்பர் 15 முதல் 22 வரை நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு காரணமாக திரைப்பட விழா தேதியை வரும் ஜனவரி மாதத்துக்குத் தள்ளி வைத்திருக்கிறது விழாக்குழு. இதன்படி வரும் 2017- ஜனவரி மாதம் 5-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற இருக்கும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் பிரான்ஸ், ஈரான், ஜெர்மனி, பிரேசில் உட்பட 50-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து 127 உலக சினிமாக்கள் திரையிடப்பட இருக்கின்றன.
த்ரிஷாவின் முதல் படம்
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான மலையாள நடிகரான நிவின் பாலி தற்போது கோலிவுட்டில் பிஸி. கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அடுத்து ‘ரெமோ’ பட நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படங்களுடன் பிரபல மலையாள இயக்குநரான ஷியாமா பிரசாத் இயக்கும் ‘ஹே ஜூட்’ என்ற படத்தையும் ஒப்புக்கொண்டிருக்கிறார் இந்தப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களில் நடித்துள்ள த்ரிஷா, இதுவரை மலையாளப் படம் எதிலும் நடித்ததில்லை. த்ரிஷா நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுதான்.
கபாலிக்கு முதலிடம்
யூடியூப் இணைய நிறுவனம் 2016-ம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்பட ட்ரெய்லர்களில் ‘கபாலி’ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது என்று அறிவித்திருக்கிறது. கபாலியின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ‘கபாலி’ படம் விநியோக ரீதியில் தோல்வி என்ற சர்ச்சையும் தற்போது கிளம்பியிருக்கிறது.