

கடலோரப் பகுதிகளை ஒட்டியப் பயணக் கதையாக ‘நெடுநீர்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கு.கி.பத்மநாபன். படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
‘நெடுநீர்’ என்கிற தலைப்பு ஏன்? - கடலூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் படத்தை எடுத்திருக்கிறோம். அதேநேரம், ‘சப்-டெக்ஸ்ட்’ ஆக கதையைப் பிரதிபலிக்கும் தலைப்பு இது. ஒரு மனிதரைப் பார்க்கும்போது அவருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.
அப்படித்தான் கடல், பார்க்க அழகாகவும் அமைதியாகவும் இருப்பதுபோல் தெரியும். அதன் மர்மம் புரிபடாது. இதில் கடலை ஒட்டிய நிலப்பகுதியில் பயணம் செய்யும் முதன்மைக் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளக்கூடியப் பிரச்சினைகள் கடல்போல் மலைப்பை ஏற்படுத்தக் கூடியவை.
படத்தின் கதை, கதாபாத்திரங்களைப் பற்றிக் கூறுங்கள்.. தஞ்சை கிராமம் ஒன்றிலிருந்து 14 வயது பையனும் 13 வயதுப் பெண்ணும் ஊரை விட்டுக் கிளம்பிவிடுகிறார்கள். அதற்குக் காதல் காரணமல்ல. கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவம், அதற்குமேல் அங்கே வாழவே முடியாது என்கிற சூழ்நிலையை உருவாக்குகிறது. நடு வழியில் அவர்கள் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராத சூழ்நிலையில் மீண்டும் கடலூரில் சந்திக்கிறார்கள். இப்போது அவள் ஆம்புலன்ஸ் வேனில் உயிர் காக்கும் மருத்துவ உதவியாளராக இருக்கிறாள். அவனோ உள்ளூர் தாதாவின் வலக்கையாக, உயிரை எடுக்கும் ஒரு வன்முறைக் கூலியாக இருக்கிறான். அவர்களது மீள் சந்திப்புக்குப் பின்னர், வாழ்க்கை இருவரையும் மீண்டும் துரத்துகிறது. மறுபடியும் ஓடத் தொடங்குகிறார்கள்.. அதில் அவர்கள் அடைந்த தூரமும் புரிதலும் என்ன என்பதுதான் கதை.
உலக சினிமா ஒன்றின் கதைபோல் விவரிக்கிறீர்களே? - நான் யாரிடமும் உதவியாளராகப் பணி புரியவில்லை. என்னை வளர்த்தவை சர்வதேசப் படவிழாக்கள்தான். உலக சினிமாக்களைப் பார்த்தே சினிமா கற்றுக்கொண்டேன். ‘நெடுநீரை’ தமிழ் வெகுஜன சினிமாவாக உருவாக்கியிருந்தாலும் காட்சி மொழியில் உலக சினிமாவின் சாயலைக் கொண்டுவர முயன்றிருக்கிறேன்.
எடுத்துக்கொண்ட கதையும் களமும் பார்வையாளர்களுக்கு நிறைவான திரை அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக முழுவதும் புதுமுகங்களுக்குப் பயிற்சிப் பட்டறை நடத்திப் படம் பிடித்திருக்கிறோம்.