

இயக்குநர் வசந்த் சாயிடம் உதவியாளராகப் பணி புரிந்து பயிற்சி பெற்றுள்ள வாலி மோகன் தாஸ் எழுதி, இயக்கி, இயக்குநராக அறிமுகமாகும் படம் ’ரங்கோலி’. படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
என்ன கதை? - அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள உறவுதான் முக்கிய இழை. அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கிறான் நாயகன். அங்கே படிப்பது அவனுக்கு ரொம்பவே பிடிக்கும். அந்தப் பள்ளியின் கட்டிடங்கள், விளையாட்டு மைதானம், மரங்கள், பாடம் சொல்லித் தருவதைத் தாண்டி அன்போடு பழகும் ஆசிரியர்கள், ஊழியர்கள், சக மாணவ நண்பர்கள் என்று எல்லோரும் அவனோடு கலந்திருப்பார்கள்.
அவ்வளவு பிணைப்புடன் இருப்பவனை அங்கிருந்து ‘டிசி’யை வாங்கிக்கொண்டு போய் ஒரு தனியார் பள்ளியில் சேர்த்துவிடுவார் சாமானியரான அப்பா. அவரது விருப்பத்துக்காக புதிய பள்ளியில் சேர்ந்தவன் அங்கே என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டான் என்பதுதான் கதை.
அரசுப் பள்ளி - தனியார் பள்ளி இடையிலான வர்க்க வேறுபாட்டினை பேசியிருக்கிறீர்களா? - நாயகன் எந்த ‘ஏரியா’விலிருந்து வருகிறான் என்பதை வைத்து அவன் இப்படிப்பட்டவனாகத்தான் இருப்பான் என்று நினைக்கும் பல மாணவர்களும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அது மட்டுமே பிரச்சினை அல்ல; தனது மகன் தனியார் பள்ளியில் போய்ப் படிக்க வேண்டும் என்று நினைக்கிற அப்பா அதற்காகப் படும் கஷ்டங்கள், பெற்றோரின் விருப்பத்துக்காக மகன் செய்யும் பிரயத்தனம் என உறவு சார்ந்த உணர்வுகளின் தொகுப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.
தனியார் பள்ளி ஆசிரியர்களையோ, மாணவர்களையோ, அதன் நிர்வாகம், கல்வி முறை குறித்தோ குறை கூறுவதற்கான கதைக்களம் இது அல்ல. மாணவனோ, மாணவியோ படிப்பில் ஆர்வமும் நல்ல சூழ்நிலையும் அமைந்துவிட்டால் போதும்; எந்தப் பள்ளியிலும் படித்து முன்னேறிவிடுவார்கள் என்கிற உண்மையைப் பேசியிருக்கிறேன்.
இது உங்கள் சொந்த அனுபவமா? - நானும் அரசுப் பள்ளி மாணவன்தான். சொந்த அனுபவம் கொஞ்சம், நண்பர்கள் வாழ்க்கையில் பார்த்தது, படித்தது என்று எல்லாமே இந்தக் கதையை ‘ரங்கோலி’ போல் ஆக்கிவிட்டன. இதை முழுவதும் புதுமுகங்களை வைத்து எடுத்தால்தான் உயிரோடு இருக்கும் என்பதால், கதை எங்கே நடக்கிறதோ, அந்தந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களிலிருந்தே எனக்கான நடிகர்களைத் தேர்வு செய்துகொண்டேன். 30 நாள் படப்பிடிப்பு. ஒவ்வொரு நாளும் பொருள்காட்சி போல இருந்ததை மறக்க முடியாது.