

உலக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹாலிவுட் கதாபாத்திரங்கள் பல உண்டு. அவற்றுள் ‘மிஸ்டிக்' என்னும் ‘எக்ஸ்-மென்' படக் கதாபாத்திரமும், ‘ஸ்டார் லார்ட்' என்னும் ‘தி கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி ' படக் கதாபாத்திரமும் இரண்டாயிரத்துக்குப் பிறகு பிரபலமானவை. இந்த கதாபாத்திரங்களில் கனக்கச்சிதமாக நடித்த ஜெனிஃபர் லாரன்ஸும் கிறிஸ் பிராட்டும் தற்போது மீண்டும் இணைந்திருப்பது ‘பாசஞ்சர்ஸ்' படத்துக்காக. ஹாலிவுட்டின் தேவதைகளில் ஒருவாரகக் கொண்டாடப்பட்டுவரும் ஜெனிஃபர் லாரன்ஸ் ஒரு படத்தில் இருந்தால் அதில் ‘காதல்’ காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கை ‘பாசஞ்சர்ஸ்’ படத்திலும் வீண்போகாது என்று நம்பலாம். காரணம், இந்தப் படம் விண்வெளியில் மலரும் காதலை, பிரமாண்டமான அறிவியல் புனைவுடன் பேசுகிறது.
விண்வெளியில் மலரும் காதல்
ஜெனிஃஃபர் லாரன்ஸ், கிறிஸ் பிராட் ஆகியோருடன் மேலும் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் மைக்கேல் ஷீன், லாரன்ஸ் பிஷ்பூர்ணே, ஆண்டி கார்சியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மோர்டென் டில்டம் இயக்கத்தில் ஜான் ஸ்பீஹ்ட்ஸ் எழுத்தில் உருவாகியிருக்கும் 'பாசஞ்சர்ஸ்' திரைப்படத்தை நில் எச் மோரிட்ஸ் - ஸ்டீபன் ஹமேல் - மைக்கேல் மாஹிர் மற்றும் ஓரிமார்மர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஜனவரி மாதம் 6 -ம் தேதி இந்தியாவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் கதை..?
உயிர் வாழ்க்கைக்கான சாத்தியங்கள் மற்ற கிரகங்களில் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுடன் விண்கலத்தில் செல்கின்றனர் அரோரா (ஜெனிஃபர் லாரன்ஸ்), ஜிம் (கிறிஸ் பிராட்) ஆகிய இருவரும். ஒளியின் வேகத்துக்கு இணையாகப் பயணிக்கும் இந்த விண்கலத்தில் பயணிக்க, புரோகிராம் செய்யப்பட்ட விண்வெளித் தூக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் ஆட்படுத்தப்படுகிறார்கள்.
ஆனால் இயந்திரக் கோளாறு காரணமாக, அரோராவும் ஜிம்மும் 90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தங்களின் விண்வெளி உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டுவிடுகின்றனர். அதற்கு என்ன காரணம் என்பதை ஆராயும்போது அவர்கள் இருவரது மனதிலும் விண்வெளியில் காதல் மலர்ந்துவிடுவது கண்டுபிடிக்கப்படுகிறது. உறக்கத்தைக் கலைத்த காதலால் அவர்கள் இருவரும் தங்களின் இலக்கை அடைந்தார்களா, இல்லையா என்பதுதான் ‘பாசஞ்சர்ஸ்' படத்தின் கதை.
முழுவதும் விண்கலத்தில் பயணிப்பது போன்றே காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. விண்வெளியின் பிரமாண்டத்தோடு இருவரின் காதல் காட்சிகளும் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறது படக்குழு. எப்படி இருந்தாலும் இந்தியத் தணிக்கையின் கத்தரிக்கு அந்தக் காட்சிகள் தப்ப முடியாது என்பது மட்டும் நிச்சயம்.