

‘டோரா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’ ‘கொலையுதிர் காலம்’, மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படம் என்று 2017 –ல் நயன்தாரா நடிப்பில் வெளிவரவிருக்கும் படங்களில் அவரை மையமாக வைத்து உருவாகிவரும் படங்களே அதிகம்.
இந்தப் பட்டியலின் முதல் படமாக இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் தாஸ் ராமசாமி இயக்கி வரும் ‘டோரா’ ஜனவரி இறுதியில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பை முடித்து, டப்பிங் உள்ளிட்ட இறுதிக் கட்ட வேலைகளில் இருந்த இயக்குநர் தாஸ் ராமசாமியோடு ஒரு உரையாடல்…
படத்தோட சிங்கிள் டிராக் ‘எங்க போற டோரா’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறதே?
ஆமாங்க… பாட்டுக்கு நிறைய பாராட்டுங்க கிடைச்சிகிட்டிருக்கு. அந்த மெலடி பாட்டு மாதிரியேதான் படமும் இருக்கும். ஒரு விஷயத்துல முழு ஈடுபாட்டோட இறங்கும்போது அந்த வேலைக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கணும்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கும். அந்த மாதிரி இந்தப் பாட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர்னு ஆரம்பத்துல இருந்தே எங்களுக்கு எனர்ஜியை கொடுக்குற விஷயங்கள் நடந்துகிட்டிருக்கு. அது இன்னும் எங்களைச் சந்தோஷத்தோட ஓட வைக்குது.
சற்குணத்திடம் உதவி இயக்குநராக இருந்த நீங்கள் அவர் தயாரிக்கும் படத்துக்கு இயக்குநரானது எப்படி?
சொந்த ஊர் மன்னார்குடி. அம்மா, அப்பாவோட சப்போர்ட்லதான் இந்த இடத்துக்கு வர முடிந்தது. ‘களவாணி’ படத்துல இருந்து ‘சண்டிவீரன்’ வரைக்கும் சாரோட உதவியாளரா ஓடிக்கிட்டிருந்தேன். ‘ஏதாவது லைன் வச்சிருக்கியாடா?’ன்னு ஒரு நாள் கேட்டார். ‘இருக்கு சார், ஹீரோ இந்த மாதிரி ஒரு ஆளு!’ன்னு கதையோட ஆரம்பக் கட்டத்தைச் சொல்ல ஆரம்பிச்சேன். ‘இந்தக் கதை நயன்தாராவுக்கு செட் ஆகுமா?’ன்னு கேட்டார். ‘ஹீரோவோட ஆரம்பப் புள்ளியிலதான் சார் இருக்கேன்.
கதையை அப்படியே ஹீரோயினுக்கா மாத்தி நகர்த்தலாம்!’னு சொன்னேன். ரெண்டு பேருமே உட்கார்ந்து பேசினப்போ ‘டோரா’ கதைக்கு முழு வடிவம் கிடைத்தது. நயன் மேடத்துக்குக் கதையோட சினாப்ஸிஸ் அனுப்பியிருந்தோம். அவங்களுக்குப் பிடிச்சுப்போச்சு. சற்குணம் சாரோட சேர்ந்து, தயாரிப்பாளர் ஜபெக் சார், நிர்வாகத் தயாரிப்பாளர் சவுந்தர் பைரவின்னு எல்லாரும் சேர்ந்து படத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு வந்துட்டாங்க.
இயக்குநரே, தயாரிப்பாளராக இருக்கும்போது, தலையிடல் அதிகம் இருக்குமே?
சற்குணம் சார் தயாரிப்புல வர்ற ரெண்டாவது படம் இது. ‘மஞ்சப்பை’ படம் பண்ணும்போது நானும் கதை விவாதத்துல இருந்தேன். அந்தப் படத்தை என் நண்பன் ராகவன் இயக்கினார். இயக்குநரே தயாரிப்பாளராக இருக்கும்போது நல்ல கதைகளைத் தேர்வு செய்வது சுலபம். அந்த மாதிரிதான் சற்குணம் சாரும். அவரோட சேர்ந்து நானும் நிறைய கதை கேட்டிருக்கேன். நல்ல கதையை மட்டுமே தேர்ந்தெடுப்பார். படத்தோட இயக்குநர்கிட்ட எதையும் திணிக்க மாட்டார். அவரோட அனுபவம் ஒரு இயக்குநரா எனக்குப் பல இடங்களில் உதவியாக இருந்தது.
என்ன கதை?
அப்பா, பொண்ணுக்கு இடையே நகர்கிற, நடுத்தரக் குடும்பப் பின்னணி கொண்ட கதை. நயன்தாராவுக்கு அப்பாவா தம்பி ராமையா நடிச்சிருக்கார். ராமையா அண்ணனைப் பத்தி சொல்லவே வேண்டாம். அவரோட பகுதி யெல்லாம் செமயா வந்திருக்கு. இது பேண்டஸி வகை த்ரில்லர் பேய்ப் படம். ரெகுலரா பேய்ப் படங்கள்ல பார்க்குற திகில், பயம் இதெல்லாம் இதுல இருக்காது. அதனாலதான் காருன்னு ஒரு விஷயத்தையும் கொண்டு வந்திருக்கோம். படத்துல கார் ஒரு கதாபாத்திரமாக வரும். கார்தான் பேய். படத்தையும் அதுதான் நகர்த்திக்கிட்டு போகும்.
நல்ல நடிப்பு அனுபவம் உள்ளவர் நயன்தாரா. அறிமுக இயக்குநரான நீங்கள் படப்பிடிப்பில் அவரை எப்படி வேலை வாங்க முடிந்தது?
இந்தக் கதையை நயன்தாரா மேடம்கிட்ட சொல்லும்போது அவங்க ‘மாயா’ படத்துல இருந்தாங்க. அப்போ இருந்து இன்னைக்கு வரைக்கும் அவங்களைப் பார்த்துட்டு வர்றேன். நாம உயரத்துல இருக்கோம்னு ஒருநாள்கூட அவங்க நினைச்சதில்லை. முதல் பட நாயகி மாதிரிதான் ஸ்பாட்டுக்கு வந்துட்டுப் போவாங்க. காலையில 9 மணிக்கு கால்ஷீட்னா, 8.15-க்கு மேக்கப்போட இருப்பாங்க. அவங்களோட ஈடுபாடு ஷூட்டிங்ல எங்களை ரொம்பவே கூலா வேலை பார்க்க வைத்தது.
நாயகனுக்கான கதை என்று இறங்கும்போது ஆக்ஷன், டூயட், காமெடி என்று யோசிப்போம். அதுவே, நாயகிக்குக் கதை தயார் செய்யும்போது நிறைய வித்தியாசம் இருந்திருக்குமே?
அப்படி எதுவும் எனக்குத் தெரியலை. கதைதான் முக்கியம்னு நான் நினைக்கிறேன். அதுதான் நம்மோட பயணத்தைத் தீர்மானிக்கும். இந்தப் படத்துல ஹீரோ நடிக்கிறாரா, ஹீரோயின் நடிக்கிறாங்களான்னு நான் பிரிச்சு பார்க்கலை. கதையில சொல்ல வர்ற வித்தியாசத்தைச் சரியா கொடுக்கணும்கிறதுல மட்டும் தெளிவா இருந்தேன். அதுபடி எல்லாமும் அமைந்திருக்குன்னு தோணுது. இனி மக்கள் படத்தைப் பார்த்துட்டு, எப்படி வந்திருக்குன்னு சொல்லணும்.