

காதலுக்கென்றே என்றும் நிலையான அழிக்கமுடியாத சின்னம் ஒன்றைச் சொல்ல முடியுமா என்று கேட்டால்.. காதலில் விழுந்தவர் மட்டும் அல்லாமல் காதலை எதிர்ப்பவர்களும் கூடச் சட்டென்று சொல்லும் பதில் ‘தாஜ் மஹால்’ என்பதாகத்தான் இருக்கும். காதலுக்காகவும் தாய்மைக்காகவும் அமைக்கப்பட்டு அதற்காகவே வாழும் சின்னம் அது. முகலாயப் பேரசர் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜின் மீது வைத்திருந்த ஆழமான காதலின் வெளிப்பாடாக எழுந்த உலக அதிசயம் என்பதே வரலாறு கூறும் செய்தி.
அப்படிப்பட்ட தாஜ் மஹாலின் முன்னால் ஒரு இளம் ஜோடி நிற்கும்போது அவர்கள் மனதில் தோன்றும் உணர்வலைகளைப் பாடலாக்கினால் அது எப்படி இருக்கும்? இதோ கவிஞர் மருதகாசி, 1960இல் வெளிவந்த 'பாவை விளக்கு' படத்துக்காக வடித்த காலங் கடந்தும் காதல் அதிர்வலைகளை மனதுக்குள் கடத்தும் இந்தப் பாடலைப் போலத்தான் இருக்கும்.
திரை இசைத் திலகம் திரு கே.வி.மகாதேவனின் உன்னத இசையமைப்பில் இசைச் சித்தர் சி.எஸ். ஜெயராமனின் கம்பீரக் குரலும், இசைப் பேரரசி பி.சுசீலாவின் இனிமை பொங்கும் குளுமைக் குரலும் ஒருசேரச் சங்கமிக்கும் 'காவியமா நெஞ்சின் ஓவியமா' பாடல் சொல்வதைப்போல காதலின் பெருமையையும், காதல் சின்னமான தாஜ் மஹாலின் சிறப்பையும் ஒருசேரச் சொல்லும் பாடல் இனி கிடைக்குமா என்பது சந்தேகம்தான். கண்ணதாசன் - மெல்லிசை மன்னர் போல மருதகாசி - கே.வி.மகாதேவன் இருவரின் இணைவில் மறக்கமுடியாத பாடல் பொக்கிஷங்கள் எத்தனையோ கிடைத்திருக்கின்றன.அவற்றில் சிகரம் தொட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
எளிமையான வார்த்தைகளில் ஆழமான கருத்துக்களை அனாயாசமாகச் சொல்லும் திறமை படைத்த கவிஞர் மருதகாசி. அவரது அந்தத் திறமை இந்தப் பாடலில்தான் எத்தனை லாவகமாகப் பளிச்சிடுகிறது.!
**
தாஜ்மஹாலின் உள்ளே இருக்கும் ஷாஜஹான் - மும்தாஜ் இருவரின் கல்லறைகளின் முன்னே ஒரு இளம் ஜோடி நிற்கின்றார்கள். அவன் உள்ளத்தில் பொங்கும் பலதரப்பட்ட உணர்வலைகள் அசரீரியாக தாஜ்மஹால் முழுவதும் எதிரொலிக்கிறது. பேரரசன் ஷாஜஹானின் காதலின் வெளிப்பாடான தாஜ்மஹால் பிறந்த கதை அவன் மனக்கண் முன் நிழலாடுகிறது.இந்த அற்புதம் காதலின் வெளிப்பாடா இல்லை ஷாஜஹானின் நெஞ்சில் நிலையாக நெஞ்சில் ஒளிவீசும் தீபமாக நிறைந்திருக்கும் மும்தாஜ் என்னும் ஓவியப்பதுமையா - இல்லை அவர்கள் இருவரும் வாழ்ந்த காதல் வாழ்க்கையின் வெளிப்பாடா - அதன் அடியொற்றிப் பிறந்த தெய்வீகக் காதலின் அடையாளமா - என்று அவன் பிரமித்து நிற்கிறான். இப்படி இதுவா அதுவா என்று வியக்கும் மயக்க அணியைக் கையாண்டு பாடலை ஆரம்பிக்கிறார் மருதகாசி.
'காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா - தெய்வீகக்
காதல் சின்னமா'
இசைச் சித்தரின் குரலில் தொகையறாவாக ஆரம்பிக்கும் பல்லவி தாஜ்மஹால் முழுவதும் மட்டுமா எதிரொலிக்கிறது? காதல் என்ற மூன்றெழுத்துச் சாம்ராஜ்யத்தில் வசிக்கும் அனைத்து உள்ளங்களிலும் அல்லவா எதிரொலிக்கிறது!
தொடர்ந்து இசைப் பேரரசின் குளுமைக்குரல் அதே வார்த்தைகளை பாடலாக ஒற்றி எடுக்கும் நயம் செவிவழிப் புகுந்து மனதை நிறைக்கும் அழகே தனி. அதிலும் 'தெய்வீகக் காதல் சின்னமா' என்று பி. சுசீலாம்மா முடிக்கும் இடத்தில் அந்தக் குரலில் வெளிப்படும் நளினமும், பாவமும் கேட்கும்போதே மனதைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது.
திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்களின் இசை ஆளுமை உலக அதிசயமான தாஜ்மஹாலுக்கு நிகராகப் பிரமிக்க வைக்கிறது.
பல்லவியைச் சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைத்தவர் பல்லவி முடிந்தபிறகு வரும் சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசையிலும் தொடரும் சரண வரிகளிலும் அரேபிய இசைப் பிரயோகங்களை அற்புதமாக இணைத்திருக்கிறார். இதற்கு அவருக்குக் கைகொடுத்த ராகம் 'சராசங்கி'.
கர்நாடக இசையில் 27வது மேளகர்த்தா ராகமான சரசாங்கி ஒரு சம்பூரணமான சுத்த மத்யம ராகம்.
முழுக்க முழுக்க இந்த மேளகர்த்தா ராகத்தை அரேபிய இசைக்கான ராகமாகப் பயன்படுத்தி கே.வி. மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் அழகும், அதை சி.எஸ்.ஜெயராமனும் பி.சுசீலாவும் பாடியிருக்கும் விதமும் வருணிக்க வார்த்தைகளே இல்லை.
அவள் மனதில் காதல் கற்பனைகள் சிறகு விரித்துக் கனவு வானத்தில் பறக்க ஆரம்பிக்கின்றன. அங்கு அவள் மும்தாஜாகவும் அவன் ஷாஜஹானாகவும் அதோ அந்த தாஜ்மஹால் முழுவதுமே வலம் வருகிறார்கள்.
முகலாய பேரரசுக்கு ஒரு தீபமாக ஒளிரும் பேரரசன் அல்லவா ஷாஜஹான்? அவனை நினைக்கும் போதெல்லாம் அவனது சிரித்த முகம் தான் அவள் மனதில் தோன்றுகிறது.
'முகலாய சாம்ராஜ்ய தீபமே - சிரித்த
முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே' –
என்று பி.சுசீலா ஆரம்பிக்கும் எடுப்பில் தெறிக்கும் அழகு எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத ஒன்று. அவன் மட்டும் சளைத்தவனா என்ன? அவளை இப்படி வருணிக்கிறான்.
'மும்தாஜே முத்தே என் பேகமே - பேசும்
முழுமதியே என் இதய கீதமே'
மும்தாஜ் என்றால் உயர்வானவள் என்று பொருள். அது மட்டுமல்ல சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் இஸ்லாமிய பெண்மணி 'பேகம்' என்று அழைக்கப்படுவாள்.அந்த வார்த்தையை பேரரசி மும்தாஜை வருணிக்க மருதகாசி பயன்படுத்தி இருக்கும் நயம் - அதோடு நிறுத்தாமல் பேசும் முழுமதி, இதயகீதம் என்றெல்லாம் வருணிக்கும் மருதகாசியின் நயம் நிறை வார்த்தைகளை இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமன் பாடும் அழுத்தமான கம்பீரமான அழகு மனதை நிறைக்கிறது.
அடுத்த வரிகளுக்கு போவதற்கு முன்னால் இடையிசையாக ஷெனாயும் டேப் வாத்தியத்தின் தாளக்கட்டும் மனத்தை அப்படியே மெய்மறக்க வைக்கிறது.
'என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே - என்னைச்
சொந்தம் கொண்ட தெய்வமே' என்று அவள் பாட
'அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே' - என்று சரணத்தை முடிக்கிறான் அவன்.
இந்த இறுதிவரிகள் தாஜ்மஹாலுக்கும் எத்தனை கச்சிதமாக பொருந்தும் வகையில் சிலேடை நயத்தோடு கவிஞர் மருதகாசி அமைத்திருக்கிறார்!
அடுத்து வரும் இறுதிச் சரணம் காதலின் உயர்வை எத்தனை அற்புதமாக கூறுகிறது பாருங்கள்.
'எந்நாளும் அழியாத நிலையிலே - காதல்
ஒன்றேதான் வாழும் இந்த உலகிலே'
அன்பு ஒன்றுதானே சாஸ்வதமானது. அதன் அமரத்துவமான வடிவம் தானே காதல். இரண்டே வரியில் எவ்வளவு எளிமையாக அதே சமயம் ஆழமாக காதலின் சிறப்பை ஆரம்ப வரிகளில் சொன்ன மருதகாசி அடுத்த வரிகளில் சிகரத்தையே எட்டி விடுகிறார்.
கண் முன்னே தோன்றும் கனவு என்று வியக்க வைக்கும் ஒரு வார்த்தைப் பிரயோகத்துடன் அடுத்த வரியை ஆரம்பிக்கிறார் கவிஞர் மருதகாசி. பொதுவாக கண்கள் மூடித் தூங்கும் போது வருவதுதானே கனவு. ஆனால் காதலில் விழுந்தவர்கள் விழித்திருக்கும் போது கூட அந்த இன்ப உணர்வில் இரண்டறக் கலந்துவிடுபவர்கள் அல்லவா. இதைத்தான் மருதகாசி அடுத்த இரண்டு வரிகளில் கூறி இருக்கிறார்.
'கண் முன்னே தோன்றும் அந்தக் கனவிலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே'
அடுத்த வரிகளுக்கு போவதற்கு முன்னால் முன்பு வந்த அதே ஷெனாய் - டேப் வாத்திய இடையிசை நம் கால்களைத் தாளமிட்டு வைத்து காதல் பரவசத்தை அப்படியே மனதுக்கு கடத்தும் அதிசயத்தை நிகழ்த்துகிறது.
தொடரும் பி. சுசீலா பாடும் வரிகைளில் உண்மைக்காதலுக்கு ஒரு இலக்கணம் வகுக்கிறார் மருதகாசி.
ஒரு கனிக்குள் அதன் இனிப்புச் சுவை ஊறி அதற்குள் ஒன்றாகக் கலந்திருக்கும் அல்லவா? அந்த இனிப்பையும் மீறிவிடுமாம் உண்மைக்காதல் தரும் இனிமை. வேற்றுமை அணி நயம் நிறைந்த அந்த வார்த்தைகள் இதோ:
'கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மைக் காதலே.'
அடுத்து அவன் சொல்லும் பதிலாக - ஒரே நேரத்தில் - பேரரசர் ஷாஜஹான் - அவரது அழியாத காதல் - அதற்கு சான்றாக எழும்பி நிற்கும் தாஜ் மஹால் - ஆகிய மூன்றின் பெருமையையும் சிகரத்தில் உயர்த்தி வைத்து பாடலை முடிக்கிறார் கவிஞர் மருதகாசி.
‘காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்.’
ஆம். உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மஹால் காதல் என்ற ஒன்று இருக்கும் வரை இந்த உலகில் நிலைத்திருக்கும். அது நிலைத்திருக்கும் வரை அற்புதமான அந்தக் காதல் சின்னத்தை எழுப்பிய பேரரசர் ஷாஜஹானும் அவரது காதல் மனைவி மும்தாஜும் எல்லோர் இதயங்களிலும் வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்கள்.
அந்த அற்புதக் காதல் சின்னத்தின் பெருமையைக் கூறும் இந்தப் பாடலும் திரை இசைத்திலகம் திரு. கே.வி. மகாதேவன் அவர்களின் இசைத்திறமைக்கு ஒரு நிரந்தர சான்றாக திரை இசைக்கடலில் அபூர்வ முத்தாக ஒளிவீசிக்கொண்டுதான் இருக்கும்.
(தொடர்ந்து முத்தெடுப்போம்)
படங்கள் உதவி: ஞானம்