ஒன்பது ரூபாய் நோட்டு: செல்லாத மாதவரின் திரை வாழ்வுக்கு வயது 15 - தங்கர் பச்சான் நேர்காணல்

ஒன்பது ரூபாய் நோட்டு: செல்லாத மாதவரின் திரை வாழ்வுக்கு வயது 15 - தங்கர் பச்சான் நேர்காணல்
Updated on
2 min read

வாழ்க்கை ஒரு கண்ணாடிக் குப்பிக்குள் அடைபட்டுக் கிடக்கிற, அலங்காரப் பொருளல்ல. அது எப்போதும் தாளத்துக்கேற்ப ஆடிக் கொண்டிருக்கும் வாழ்தல் எனும் விளையாட்டு. அதன் நீள அகலத்துக்குள் மனிதன் சில நேரங்களில் தன்னை மீட்கிறான், பல நேரங்களில் தன்னைத் தொலைக்கிறான், தங்கர் பச்சான் தனது ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தில் காட்டியிருக்கும் மாதவப் படையாட்சியைப் போல்.

செல்லாத ரூபாயாகிப் போன ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையை, முந்திரிக்காட்டின் மணத்தோடும், பலாப்பழ சுவையோடும் அந்தப் படத்தில் தந்திருப்பார் தங்கர். கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 30இல் வெளியான அந்த ‘ஒன்பது ரூபாய் நோட்டு’க்கு இப்போது 15 வயது. சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகிணியின் நடிப்பும் பரத்வாஜின் இசையும் வைரமுத்துவின் பாடல் வரிகளும் அந்தப் படத்தின் பெரும் பலம். நல்ல சினிமா ரசிகனின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிற, இந்தப் படம் பற்றி இப்போது என்ன சொல்கிறார் தங்கர் பச்சான்?

“இது என் 25 வயசுல எழுதத் தொடங்கிய நாவல். என் அப்பா மறைஞ்ச அன்னைக்கு கடைசியா அவர் முகத்தைப் பார்க்கும்போது, பிழைப்புக்கு எங்கெங்கோ போனாலும் என் கடைசி காலமும் அப்பாவைப் போல் இந்த ஊர்லதான் அமையும்னு நினைச்சேன். அன்னைக்கு இரவே ஒரு பேப்பர்ல அதை எழுதி வச்சேன். அப்ப எழுத தொடங்கி, 11 வருடம் எழுதி முடிச்ச நாவல்தான் அது. 1996இல் நாவல் வெளிவந்தது. ஆதிமுலம் அட்டை ஓவியம் வரைஞ்சுக் கொடுத்துட்டு, ‘இதைத் திரைப்படமாக்கலாம்’னு சொன்னார். 2007இல் திரைப்படமா ஆச்சு” என்கிறார் தங்கர்.

மண் சார்ந்த படங்கள் அதிகம் வந்தாலும், ஒரு மனிதனின் முழு வாழ்க்கையை மிகவும் இயல்பாக சொன்ன படமா, இது இப்பவும் பேசப்படுதே...

நான் எங்க போனாலும் இந்தப் படம் பற்றி எங்கிட்ட பேசறவங்க அதிகம். காரணம், இதன் கதாபாத்திரங்கள் அவங்க குடும்பங்கள்லயும் இருந்திருக்கலாம். அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். பார்த்திருக்கலாம். அது அவங்க மனசை ஆழமா பாதிச்சிருக்கும்னு நினைக்கிறேன். கிராமங்கள்ல, மனிதர்கள் வேற வேறன்னாலும் வாழ்க்கை ஒண்ணுதானே. அது, உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளயும் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். ஒரு மனிதன் தன் இளமையில் இருந்து சரிஞ்சு விழற வரை மிகவும் இயல்பா பதிவு பண்ணின படம். அதனாலதான் இது பேசப்படுது. சத்யராஜ் அண்ணனை, ஒரு தீவிரமான நடிகராக மாற்றிய படங்கள்ல ஒன்னு இந்தப் படம். ‘என்னை எப்படி இந்த கேரக்டருக்கு தேர்வு பண்ணுனீங்க?’னு அவர் ஆச்சரியமா கேட்டார்.

இந்தப் படம் தொடங்கும்போது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை சந்திச்சீங்க...

ஆமா. அவர்கிட்ட நாவலைக் கொடுக்கப் போனேன். ‘அந்த நாவல் எங்கிட்ட இருக்கே’ன்னு சொன்னார். எனக்கு ஆச்சரியம்! ஒரு முதலமைச்சர், என் நாவலை வாசிச்சிருக்கார் என்பது எவ்வளவு பெருமை. உடனே, ‘நானே கொடுக்கணும்னு வந்தேன்’னு சொன்னேன். ‘ஏதும் கோரிக்கை வைக்க போறியா?’ன்னு கேட்டார். ஆச்சரியமாப் பார்த்து சிரிச்சேன். அப்ப, திரைப்படங்களுக்குத் தமிழ்ல தலைப்பு வைக்கணுங்கற ஆணை இருந்தது. இந்த நாவலை படமாக்கப் போறேன். ‘நோட்டு’ங்கறது தமிழ் சொல் இல்லை, என்ன செய்யலாம்னு கேட்டேன். ‘அது வழக்குச் சொல், நாவல் தலைப்புதானே வைக்கலாம்’னு சொன்னவர் அவர்தான்.

ஆதிமூலம், கி.ரா, ஜெயகாந்தன் ஆகியோருடன் தங்கர் பச்சான்.
ஆதிமூலம், கி.ரா, ஜெயகாந்தன் ஆகியோருடன் தங்கர் பச்சான்.

இந்த நாவலின் தலைப்பை, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தந்தார்னு சொல்லியிருந்தீங்களே?

நாவலை எழுதி முடிச்சுட்டு, 94ஆம் ஆண்டு அவர்கிட்ட கொடுத்தேன். ஒரே நாள்ல வாசிச்சு முடிச்சுட்டு தொலைபேசியில கூப்பிட்டார். வட தமிழகத்தை இவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கீங்களே. இதுக்கு, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ன்னு தலைப்பு வையுங்க’ன்னார். ஏன்னா, மாதவர் செல்லாத நோட்டா ஆயிட்டாரேன்னு விளக்கினார். பிறகு ஜெயகாந்தன்கிட்ட முன்னுரை கேட்டேன். அவர், ‘நான் யாருக்கும் முன்னுரை எழுதின தில்லை’ன்னு சொன்னார். ’முதல்ல நாவலை படிங்க, சரியில்லைன்னா வேண்டாம்’னு சொன்னேன். படிச்சுட்டு, எழுதி கொடுத்தார். இது இந்தப் படைப்புக்கான சிறப்பு.

100 திரையங்குகள்ல கட்டணமில்லாம படத்தை வெளியிட்டீங்களே?

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள்ல இதை வெளியிட்டு கட்டணமில்லாம மக்களை பார்க்க வச்சோம். பார்த்த பிறகு, உங்களுக்கு பிடிச்சா உங்களுக்கு என்ன தோணுதோ, அந்தப் பணத்தை வெளியில வச்சிருக்கிற உண்டியல்ல போட்டுட்டு போங்கன்னு சொன்னோம். இதெல்லாம் இப்ப எனக்கு நினைவுக்கு வருது. எந்த ஒரு படைப்பும் காலங்கடந்தும் நிற்கணும்னு சொல்வாங்க. ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ அந்த வரிசையில இருக்கிறது எனக்கு பெருமையாதான் இருக்கு. இந்தப் படத்தை சப்-டைட்டில் போட்டு வெளியிட்டா, உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று உலக சினிமா வரிசையில் சேர்க்கப்படும்னு நம்பிக்கை இருக்கு. - செ.ஏக்நாத்ராஜ், egnathraj.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in