

தொலைக்காட்சிகளும், யூடியூப் போன்ற இணைய தளங்களும் குறும்படங்களை எளிதாக பார்வையாளர்களிடம் சேர்த்துவிடுகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு 20 நிமிடங்களுக்குள் சினிமாவில் செய்ய முடியாத பல சோதனைகளைக் குறும்படங்களில் முயன்று பார்க்கலாம். ஆனால் பல குறும்படங்கள் சினிமாவைப் போலவே தொடர்ந்து வெளிவருவது தமிழின் துரதிர்ஷ்டம். அந்த மாதிரியான ஒரு படம்தான் ‘இரவு’.
இரவில் ஒரு கொலை நடக்கிறது. அதைத் தொடர்ந்து காட்சிகள் Non-Linear ஆக முன்னும் பின்னும் செல்கின்றன. இது மேற்குலக சினிமாவில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட உத்தி.
அதை இந்தக் கதையில் கையாள்வதில் இயக்குநர் தோல்வி கண்டிருக்கிறார். நண்பர்களுக்கு இடையிலான வாக்குவாதம் கொலையில் முடிகிறது. வாக்குவாதத்திற்குக் காரணம் ஒரு பெண். இரு நண்பர்கள், இரவல் புத்தகத்தை வாங்க வரும் பக்கத்து அறை நண்பன் என மூன்று கதாபாத்திரங்களுடன் படத்தை இயக்கியிருப்பது பாராட்டுக்குரிய அம்சம். அந்தப் பெண் பாத்திரம் ஒரு தொலைபேசி பேச்சின் வழியாகச் சித்திரிக்கப்படுகிறாள். இதுவும் சுவாரஸ்யம் அளிக்கிறது.
பாத்திரங்கள் உணர்ச்சிமயமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. கொலை நடந்துவிட்டது. கொலைக்கான காரணத்தைத்தான் இயக்குநர் சொல்ல வேண்டும். ஆனால் அவர் பார்வையாளனை ஏமாற்றும் ஜிகினா வேலையைச் செய்திருக்கிறார். சாமானிய மனிதன் கொலைசெய்யப் போகும்போது உள்ள பதற்றங்கள் ஏதும் சித்திரிக்கப்படவில்லை. மாறாக அவர் சினிமா வில்லன் அளவுக்கு மூர்க்கம் கொள்கிறார். உண்மையில் இயக்குநர் புவி, தமிழ் வெகுஜன சினிமாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.