

ஊர் ஊராகச் சென்று பொதுமக்களை வித விதமாக ஏமாற்றிக் கோடிகளில் பணத்தைச் சுருட்டு கிறது ஒரு மோசடிக் கும்பல். அவர்களிடம் ஏமாறும் கதா நாயகன், அந்தக் கும்பலுக்கு எதிராகக் களம் இறங்குவதுதான் வீர சிவாஜி.
புதுச்சேரியில் கால் டாக்ஸி ஓட்டுநராக இருக்கும் நிராதரவான சிவா என்கிற சிவாஜி (விக்ரம் பிரபு), உணவகம் நடத்தும் வினோ தினியை தன் உடன்பிறவாத அக்காவாக எண்ணிப் பழகுகிறார். வினோதினியின் 12 வயது மகள் யாழினியின் மீது பாசத்தைப் பொழிகிறார். அந்தக் குழந்தையின் சிகிச்சைக்காகப் பணம் திரட்டும் சமயத்தில் மோசடிக் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன், கூடவே மோசமான விபத்திலும் மாட்டிக்கொள்கிறார். விபத்திலிருந்து மீண்டு மோசடிக் காரர்களை அவரால் வெல்ல முடிகிறதா என்பதுதான் கதை.
மோசடிக் கும்பலை மட்டுமே சுற்றி வராமல், சுவாரஸ்யமான கிளைக் கதைகளை சென்டி மென்ட், காதல், நகைச்சுவையில் தோய்த்து, குத்தாட்டம் போன்ற மசாலா அம்சங்களையும் சேர்த்துச் சரியான கலவையில் தந்துவிட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயக். கூடவே நாயகனுக்கு ஏற்படும் திடீர் விபத்தின் மூலம் திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டுகிறார். ஓரளவுக்குச் செல்லுபடியாகும் அவரது முயற்சி பல இடங்களில் பல் இளிக்கிறது. முக்கியமான திருப்பங்கள் எல்லாமே எதிர் பார்க்கக்கூடிய விதத்தில் இருப் பதுதான் காரணம். படத்தின் மிக முக்கியமான திருப்பம் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் பலவீனமாக இருக்கிறது.
நகைச்சுவை நண்பர்களாக வரும் சுரேஷ் (யோகிபாபு), ரமேஷ் (ரோபோ சங்கர்) ஜோடி யின் நகைச்சுவையில் இடம் பெறும் பெரும்பாலான வெடிச் சிரிப்பு வசனங்களை மனம்விட்டு ரசிக்கலாம். ஆனால் அவர்களைப் பாலியல் தொழில் தரகர்களாகச் சித்தரித்த விதம் குடும்பப் பார்வையாளர்களுக்கு ஏற்றது அல்ல. ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன் ஆகியோரின் நகைச்சுவை கலந்த மிகையான வில்லத்தனம் வழக்கமான ஒன் றாகவே இருக்கிறது.
ஞானகிரி - சசிபாலா இணைந்து எழுதியிருக்கும் வசனங் கள் படத்துக்கு பலம். நம்பியவர் களை ஏமாற்றுவது குறித்து மொட்ட ராஜேந்திரன் வருத்தப்பட, “நம்புறவங்களை மட்டும்தான் நாம ஏமாத்த முடியும்” என்று ஜான் விஜய் கொடுக்கும் அநாயாசமான பதில் ஒரு உதாரணம்.
போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள் என்பது தெரியாமல் அஞ்சலி (ஷாம்லி) மீது காதல்கொள்வதும், எதிர்பாராத திருப்பத்தால் காதலையே மறப்பதும் சுவா ரஸ்யம்.
டாக்ஸி டிரைவர் கதாபாத்திரம் விக்ரம் பிரபுவுக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறது. ஆனால் சீருடை அணியாமல் ஜீன்ஸ், டி-ஷர்ட் என்று நவீன இளைஞராக வலம் வருகிறார். சண்டைக் காட்சிகளில் தூக்கலாகவும் மென்மையாகப் பேசும் காட்சி களில் இயல்பு மீறாமலும் நடிக்கிறார். சண்டைக் காட்சிகளை வடிவமைத்த திலீப் சுப்பராயன் பாராட்டுக்குரியவர்.
ஷாம்லியின் நாயகி அவ தாரம் திரைக்கதையில் உப்புக் குச் சப்பாணியாக இருந்தாலும் அவர் தேவையான அளவுக்கு நடித்துவிடுகிறார். டூயட் பாடல் களில் அவரது நடனமும் நடையும் ரசிக்கும்படி இருக்கின்றன.
யோகிபாபு ரோபோ சங்கர் காட்சிகளில் கத்தரி வைத்திருக்க வேண்டிய படத் தொகுப்பாளர் ரூபன் அதைச் செய்யவில்லை. காதல் மறதி நாடகமும் தேவைக்கதிகமாக நீளுகிறது.
ஆக்ஷன் கதைக்கான ஒளிப்பதிவைத் தருவதில் சுகுமார் தெளிவாக இருந்திருக்கிறார். இமானின் இசையில் ‘தாறுமாறு தக்காளி சோறு’, ‘சொப்பன சுந்தரி’ ஆகிய பாடல்களில் மசாலா வாசனை மட்டுமே. பின்னணி இசையோ சுத்த வீண்.
பண மோசடி, கள்ள நோட்டு என முக்கியமான பிரச்சினையைக் கையில் எடுத்த இயக்குநர், அவற்றுக்குக் காட்சி வடிவம் தருவதில் வெற்றி பெற்றிருக்கிறார். காதலையும் நகைச்சுவையையும் ஓரளவு சரியான விகிதத்திலேயே கலந்திருக்கிறார். திரைக்கதையில் நாம் எதிர்பார்க்கும் இடங்களில் ஏமாற்றாமல் வந்து தொலைக்கும் காட்சிகள்தான் படத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன. இதைத் தவிர்த்திருந்தால் முழுமையான பொழுதுபோக்குப் படமாக இதை மாற்றியிருக்கலாம்.