

ராமராஜன் ஜோடியாக ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் நிஷாந்தி. பானுப்ரியாவின் தங்கையான இவர், தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி எனப் பிரபலமானார். திருமணத்துக்குப் பிறகு இந்தித் தொலைக்காட்சி உலகிலும் வெற்றிகரமாக வலம்வந்தார்.
இடையில் 10 ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர், தற்போது இணையத் தொடர் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். எம்.எக்ஸ்.பிளேயர் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘தாராவி பேங்க்’ இணையத் தொடரில், சுனில் ஷெட்டியின் சகோதரியாக 'போனம்மா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிஷாந்தியின் நடிப்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்' கவிக்குயில் சரோஜினியின் பயோபிக் படத்தில் டைட்டில் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். தமிழ், தெலுங்கு படங்களை ஏற்று நடிக்கவும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
நடனமும் வன்மமும்! - நடனத்தை மையமாகக் கொண்ட தமிழின் முதல் ஓடிடி படைப்பாக ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ என்கிற இணையத் தொடரை வெளியிட்டிருக்கிறது ஜீ5 தளம். கடந்த 2018இல் பிரபுதேவா, சிறுமி தித்யா சாகர் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘லட்சுமி’. அதில் நடித்த தித்யா சாகரையே இந்த இணையத் தொடரில் ‘செம்பா’ என்கிற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பதுடன், இயக்குநர் ஏ.எல்.விஜயை கிரியேட்டிவ் டைரக்டராக நியமித்து இத்தொடரை உருவாக்கியிருக்கிறார்கள்.
வெவ்வேறு குடும்பப் பின்னணியைக் கொண்ட விக்ரம் - செம்பா ஆகிய இரண்டு பதின்மச் சிறார்கள் நடனத்தில் சாதிக்க நினைக்கிறார்கள். ஆனால், செம்பாவின் திறமை மீதான விக்ரமின் வெறுப்பு வன்மாக மாறுகிறது. அதை செம்பா தன் அணுகுமுறையால் எப்படி இருவரது வெற்றியாக மாற்றிக் காட்டுகிறார் என்பதுதான் கதை. இத்தொடரை விஜய், பிரசன்னா ஜே.கே, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர்.
புஷ்கர் - காயத்ரியின் புதிய தொடர்! - ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் தம்பதி புஷ்கர் - காயத்ரி. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் என்கிற சொந்தப் பட நிறுவனத்தின் மூலம் இவர்கள் தற்போது புதிதாக தயாரித்துள்ள தமிழ் இணையத் தொடர் 'வதந்தி’. நாகர்கோவிலைக் கதைக் களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இத்தொடர், ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் கொலையைப் புலன் விசாரணை செய்யும் கதையாக உருவாகியிருக்கிறது.
கொலை வழக்கை விசாரணை செய்யும் காவல் அதிகாரியாக, கன்னியாகுமரி வட்டார வழக்கில் பேசி நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார். உதவி இயக்குநராக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தவரை கதாநாயகியாக ஆக்கியிருக்கிறார் இத்தொடரை இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸ். இவர் எஸ்.ஜே.சூர்யாவின் நீண்ட கால உதவியாளர். சஞ்சனாவின் அம்மாவாக லைலா நடித்திருக்கிறார்.
பள்ளி வாழ்க்கையின் ‘ரங்கோலி’! - லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு, அருண் விஜய், ஜி.வி. பிரகாஷ், அதர்வா, வாணி போஜன் உள்ளிட்ட ஒன்பது பிரபலங்கள் இணைந்து ‘ரங்கோலி’ படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார்கள். கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி, ஜி.சதீஷ்குமார் தயாரிப்பில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் தற்காலப் பள்ளி வாழ்க்கைதான் கதைக் களம்.
“குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே கதை. சினிமாத்தனம் இல்லாமல் படத்தை எடுத்துள்ளோம்” என்கிறார் இயக்குநர். ‘மாநகரம்’, படத்தின் சிறார் நடிகரான ஹமரேஷ், இதில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் பிரார்த்தனா, சாய் ஸ்ரீ, அக்ஷயா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.