திரை விழா: முதல்வர் வெளியிட்ட ட்ரைலர்!

திரை விழா: முதல்வர் வெளியிட்ட ட்ரைலர்!
Updated on
1 min read

சாலைகள் வழியான இந்திய சரக்குப் போக்குவரத்துத் துறையில், 5,500 கனரக வாகனங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள ஒரே நிறுவனம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வி.ஆர்.எல். லாஜிஸ்டிக்ஸ். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு லாரியைக் கொண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கி, அதை வளர்த்தெடுத்தவர் விஜய் சங்கேஸ்வர்.

இத்துறையில் ‘நம்பர் 1’ என்கிற இடத்தை அடைவதற்கு அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் சினிமாவை விஞ்சும் சுவாரசியத்தைக் கொண்டிருப்பவை. அதை முறையாக ஆய்வு செய்து, திரைக்கதையாக்கி, ‘விஜயானந்த்’ என்கிற தலைப்பில் பயோபிக் திரைப்படமாக இயக்கியிருக்கிறார் ரிஷிகா சர்மா. கர்நாடகத்தின் முதுபெரும் நாடகக் கலைஞரும் சம்ஸ்கிருத மொழியில் திரைப்படங்களை இயக்கி, தேசிய விருதுபெற்றவருமான ஜி.வி.ஐயரின் பேத்தி இவர்.

2018 இல் வெளியான ‘ட்ரங்க்’ என்கிற கன்னடப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரிஷிகாவுக்கு ‘விஜயானந்த்’ இரண்டாவது படம். ‘ட்ரங்க்’ படத்தில் நாயகனாக நடித்த நிஹால் தான் ‘விஜயானந்த்’ படத்திலும் விஜய் சங்கேஸ்வராக நடித்திருக்கிறார். இவருடன் அனந்த் நாக், வினயா பிரசாத், வி. ரவிச்சந்திரன் உட்படப் பலர் நடித்திருக்கிறார்கள். கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை வி.ஆர்.எல்.நிறுவனமே தயாரித்திருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ட்ரைலரை வெளியிட்டார். வி.ஆர்.எல். குழுமத்தின் தலைவர் விஜய் சங்கேஸ்வர் பேசும்போது: “எனக்கு 73 வயது. இத்தனை வருடங்களில் வாழ்க்கை எவ்வளவு அழகானது, ஆழமானது, ஆச்சர்யமானது என்பதைக் கற்றுக்கொண்டேன்.

இளைய தலைமுறைக்கு நான் கொடுக்கும் ஒரே அறிவுரை, ‘தயவு செய்து நேரத்தை வீணாக்காதீர்கள்’. எனக்கு நிறைய நேரம் இருந்திருந்தால், நான் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்திருப்பேன். எனவே உங்களது நேரத்தை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்துங்கள். இந்தத் திரைப்படம் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும்” என்றார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை பேசும்போது: “விஜயை ஒரு சாகசக்காரராக 1985இல் இருந்து அறிவேன். எப்பொழுதும் அவரிடம் ஒரு தாகம் இருக்கும். எதையும் கிரியேட்டிவாக யோசிக்கக்கூடியவர். அவர் இதுவரை இறங்கிய அனைத்து தொழில்களுமே லாபகரமாக இருந்து வருகின்றன. முடியாததை முடிப்பதுதான் அவரது பாணி. அவர் மக்களவை எம்பி ஆக இருந்தார், அப்பொழுதும் நேரம் தவறாமைதான் அவரது பலம். அவரது கடின உழைப்பு அவருக்கு எல்லாத் துறைகளிலும் வெற்றியைக் கொடுத்திருக்கிறது” என்று பாராட்டினார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in