

1965ஆம் ஆண்டு ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பாக வெளிவந்த படம் 'வாழ்க்கைப் படகு' அதற்கு முதல் ஆண்டு இதே நிறுவனம் ராஜேந்திரகுமார் - வைஜயந்திமாலா இருவரையும் இணைத்து இந்தியில் தயாரித்த 'ஜிந்தகி'யின் தமிழ் வடிவமான ‘வாழ்க்கைப் படகி'ல் ஜெமினி கணேசன் - தேவிகா இருவரும் பிரதான வேடத்தில் நடித்தனர். ஜெமினி நிறுவனத்தில் நடிகை தேவிகா நடித்த முதல் படம் இதுதான்.
இந்தப் படத்தில் அனைத்துப்பாடல்களுமே பெருவெற்றி பெற்ற பாடல்கள் தான். எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் அமைந்த பாடல்கள். கவியரசரும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியும் ஜெமினி நிறுவனத்தில் தங்கள் வெற்றிக்கொடியைப் பட்டொளி வீசிப்பறக்க விட்டனர்.
இந்தப் படத்தில் என் மனதுக்கு மிக மிக நெருக்கமான பாடல் ஒன்றை இந்த வாரம் பார்க்கலாம்.
பாட்டெழுத வந்த கவியரசரிடம் காட்சிக்கான சூழல் எடுத்துச் சொல்லப்பட்டது. நாயகன் - நாயகி இருவரின் மனங்களிலும் காதல் அரும்பி இருக்கிறது. இருவரும் தனிமையில் சந்திக்கின்றனர். அப்போது தனது காதலை காதலன் பாட்டாக வெளிப்படுத்த அவனது காதலை நாயகி ஏற்றுக்கொள்வதாக காட்சி அமைப்பு.
அதைக் கேட்டதும் சட்டென்று எப்படித்தான் கவியரசருக்கு சங்க இலக்கியமான குறுந்தொகை நினைவில் வந்து முட்டியதோ!
குறுந்தொகையில் ஒரு காட்சி. தலைவனும் தலைவியும் சந்திக்கும்போது அவளுக்கு சந்தேகம். இவனை எந்த அளவுக்கு நம்பலாம்? இவன் காதல் நிலையாக இருக்குமா? கல்யாணம் வரை வருவானா? அதை அவனிடம் கேட்டே விடுகிறாள் அவள். உறுதி செய்துகொள்ள வேண்டுமல்லவா?
அவன் திருப்பி கேள்விக்கணைகளை தொடுக்கிறான்.
"உன் அம்மாவுக்கும் என் அம்மாவுக்கும் ஏதாவது உறவு முறை உண்டா?"
'இல்லை'
" அதை விடு.. உன் அப்பாவும் என் அப்பாவும் ஏதாவது உறவுக்காரங்களா?"
இதற்கும் 'இல்லை' தான்பதிலாக வருகிறது அவளிடமிருந்து.
'அதுவும் இல்லையா. நம்ம ரெண்டு பேருக்குமாச்சும் இந்த ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட அட மூணு விட்ட வழியிலாவது ஏதாவது உறவு இருக்கா?' -
'கிடையவே கிடையாது'
'இப்படி எந்த வகையிலும் உறவோ, நட்போ இல்லாத நாம் இருவரும் இப்போது முதல் முறை சந்திக்கும் போதே செம்மண் நிலத்தில் விழுந்த மழை நீர் அந்த மண்ணோடு பிரிக்க முடியாமல் ஒன்றுபட்டு கலப்பது போல காதல் என்ற உணர்வால் ஒன்றாகி விட்டோம். நம்மை இனி யாராலும் பிரிக்கவே முடியாது' என்று அவளது சந்தேகத்தைப் போக்குகிறான் அந்தத் தலைவன்.
'யாதும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே'
இந்தப் பாடலும் காட்சியும் கவியரசர் மனக்கண் முன் தோன்ற அடுத்த நொடி - கண்சிமிட்டும் நேரத்தில் வார்த்தை மின்னல்கள் தெறித்து விழுகின்றன கவிஞரிடமிருந்து.
'நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதன் நீ வேறோ நான் வேறோ'
பல்லவியின் முதல் இரண்டு அடிகள் முடித்ததும் தொடர்ச்சியாக கம்பராமாயண மிதிலைக் காட்சிப்படலம் கவிஞர் மனக்கண் முன் விரிகிறது.
'வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்’ - இது கவிச்சக்கரவர்த்தி கம்பனின் காவிய வரிகள். HEART TRANSPLANTATIION - கம்பர் காலத்திலேயே - அதுவும் பெரும் செலவு எதுவுமே இல்லாமல்....
இதோ நம் கவிஞரின் காதல் நாயகன் சொல்கிறான்.
'உன்னைப் பார்க்கும் வரை நான் இங்கேயும் நீ அங்கேயுமாக இருந்தோம். ஆனால் உன்னைக் கண்டவுடன் நீ இங்கு என் மனதிற்குள் வந்துவிட்டாய். நான் உன் மனதிற்குள் வந்துவிட்டேன். ' என்று இருவரின் இதயமும் இடம் மாறிய விதத்தை இரண்டே வரிகளில் எளிமையாகச் சொல்லிவிடுகிறார் கண்ணதாசன்.
'காணும் வரை நீ அங்கே நான் இங்கே –
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே.'
இவை எல்லாம் ஆற அமர உட்கார்ந்து கவியரசர் யோசித்து யோசித்து எழுதுவதில்லை.
எழுத வேண்டும் என்று அமர்ந்துவிட்டாரானால் உடனே சங்க காலப் புலவர்களும், கவிச்சக்கரவர்த்தி கம்பரும், இன்னும் நற்றமிழ் பாமாலை சூட்டிய இலக்கிய கர்த்தாக்கள் யாவரும் வந்து அவர் சிந்தனைக்குள் ஊடுருவி 'இந்தா எடுத்துக்கொள்" என்று போட்டி போட்டுக்கொண்டு உதவுவார்கள்.
அடுத்தகணம் மடை திறந்த வெள்ளம் போல வார்த்தைகள் தங்கு தடை இன்றி வந்துகொண்டே இருக்கும்.
இந்தப்பாடல் அதற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
பல்லவி வந்துவிட்டது.
இனி சரணம்.
கவியரசருக்கு கைகொடுக்க இதோ திருவள்ளுவர் வந்துவிட்டார்.
அவரது இன்பத்துப்பாலில் 'தகையணங்குறுத்தல்' என்ற அதிகாரத்தில் ஒரு பெண் தன்னை விரும்புகிறாளா இல்லையா என்று தெரிந்துகொள்ள ஒரு ரூட் போட்டுக் கொடுத்துவிட்டிருக்கிறார் அவர்.
'நீ அவளை பார்க்கும் நேரத்தில் அவள் தரையைப் பார்த்திருப்பாள். அவள் மீதிருந்து பார்வையை விலக்கி வேறு எங்காவது நீ செலுத்தும்போது உன்னைப் பார்த்து மெல்லச் சிரிப்பாள்.'
'யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்.'
இந்தக் திருக்குறளின் கருத்தை சரணத்தின் முதல் இரண்டு வரிகளுக்குள் அழகாகப் புகுத்தி விடுகிறார் கவியரசர்.
'உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே.'
இனி தனது சொந்த சாம்ராஜ்யத்திற்குள் நுழைந்து விடுகிறார் கவியரசர்.
'ஏன்? நேருக்கு நேராக பார்த்தால் உன் முகம் தேய்ந்துபோய்விடுமோ? சின்னதா ஒரு சிரிப்பு சிரித்தால் குறைந்தா போய்விடுவாய்?' என்று தன் மனம் கவர்ந்தவளை வம்புக்கு இழுக்கிறான் அவன்.
'நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னைகை புரிந்தால் என்ன பூ முகம் சிவந்த போகும்'
இதில் நிலவை அவள் முகத்துக்கு உவமை ஆகு பெயராக அமைத்தவர் அடுத்த வரியில் பூ (போன்ற) முகம் என்று சொல்லும்போது எடுத்துக்காட்டு உவமை அணி நயத்தை புகுத்தி முதல் சரணத்தை முடிக்கிறார்.
தொடரும் அடுத்த சரணத்தில் முதல் பகுதியில் சிவந்த நிறத்துடன் இருக்கும் பொருள்களை வரிசைப்படுத்தி அவள் முகத்தை அவனை வர்ணிக்க வைக்கிறார் கவியரசர்.
'பாவை உன் முகத்தைக் கண்டேன் தாமரை மலரைக்கண்டேன்.
கோவை போல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்.'
அவள் வந்து நின்றதைப் பாத்ததும் அப்படியே அவன் மயங்கிவிட அந்த மயக்கத்தில் எல்லாமே அவனுக்கு கனவு போலத் தெரிகிறதாம்.
'வந்ததே கனவோ என்று வாடினேன் தனியே நின்று
வண்டுபோல் வந்தாய் இன்று மயங்கினேன் உன்னைக் கண்டு.'
பொதுவாக ஆண்களை வண்டுக்கும் பெண்களை மலருக்கும் ஒப்பிடுவதுதான் வழக்கம்.
இதே சரணத்தின் முதலில் கவிஞர் அப்படித்தானே 'தாமரை மலரைக் கண்டேன்' என்றுதானே சொல்லி இருக்கிறார்!.
ஆனால் இப்போது மூன்றாவது வரியில் வண்டுபோல் வந்ததாக குறிப்பிடுவது முரண்பாடாகத் தோன்றுகிறதே!
இல்லை. ஏனென்றால் அவரே கடைசியில் 'மயங்கினேன் உன்னைக்கண்டு' என்று சொல்லிவிடுகிறார். ஏற்கெனவே முதல் ஆரம்பத்திலேயே இதயம் வேறு மாறி இடம் பெயர்ந்திருக்கிறது. ஆகவே வண்டாக இருக்க வேண்டிய அவன் மலராகவும், மலராகத் தெரிய வேண்டிய அவள் வண்டாகவும் தெரிவதில் வியப்பேது?
இப்படி ஒரே பாடலில் எத்தனை இலக்கிய நயங்களை வெகு அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் கவியரசர்!
அதில் இருக்கும் அத்தனை நயங்களுக்கும் அருமையான இசை வடிவம் கொடுத்து மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இசை அமைத்து திரு. பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்களைப் பாட வைத்து மாபெரும் வெற்றிப்பாடலாகக் காற்றலைகளில் பரவ விட்டிருக்கிறார்கள்.
இந்தப்பாடல் முழுவதும் மென்மைநயமே மேலோங்கி இருக்கும். காதல் என்ற மென்மை உணர்வைக் கேட்பவர் மனங்களுக்கு கடத்துவதில் கவியரசர் - மெல்லிசை மன்னர்கள் - பி.பி. ஸ்ரீனிவாஸ் என்ற மூவர் கூட்டணியும் மகத்தான வெற்றியைப் பெற்றுவிட...
விளைவு...!
திரை இசைக்கடலில் மென்மை நயம் மிளிரும் அற்புதப் பாடல் முத்து நமக்கு கிடைத்துவிட்டதே.
(தொடர்ந்து முத்தெடுப்போம்.)
பின்குறிப்பு : இந்தப்பாடல் என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு பாடல். ஆம். எனது திருமணத்தின் போது மாலை நலங்கு வைபவம் நடைபெற்றபோது மாப்பிள்ளையும் ஒரு பாடல் பாட நேர்ந்தபோது நான் என் மனைவியின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து பாடிய பாடல் இந்த 'நேற்றுவரை நீ யாரோ' பாடல் தான்.